பரியேறும் பெருமாள் B.A.B.L. - சினிமா விமர்சனம்
திரைப்படம் | பரியேறும் பெருமாள் B.A.B.L. |
நடிகர்கள் | கதிர், ஆனந்தி, யோகிபாபு, சண்முகராஜா, மாரிமுத்து, லிஜிஷ் |
ஒளிப்பதிவு | ஸ்ரீதர் |
இசை | சந்தோஷ் நாராயணன் |
இயக்கம் | மாரி செல்வராஜ் |
தமிழ் நாட்டின் எத்தனையோ இடங்களில் கண்டும் கேட்டு இருக்கக்கூடிய கதைதான். ஆனால், அதைச் சொல்லியிருக்கக்கூடிய விதத்தில், தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக எழுந்து நிற்கிறது பரியேறும் பெருமாள்.
சட்டக் கல்லூரியில் புதுமுக மாணவனாகச் சேர்கிறான் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பரியேறும் பெருமாள் (கதிர்).
ஆங்கிலம் தெரியாத அவனுக்கு சக மாணவியான ஜோதி மகாலட்சுமி (ஆனந்தி)உதவுகிறாள்.
ஜோதி இடைநிலைச் சாதி என்பதால், இந்த நட்பு பரியனுக்கு பெரும் பிரச்சனைகளையும் அவமானங்களையும் ஆபத்துகளையும் கொண்டுவருகிறது.
இதை மீறி பரியனின் படிப்பு தொடர்ந்ததா என்பது மீதிக் கதை. இந்த இரண்டு வரிக் கதைக்குள் பல்வேறு விஷயங்களை அதிரவைக்கும்படி சொல்லிச்செல்கிறது படத்தின் திரைக்கதை.
தென்மாவட்டங்களில் வெளிப்படையாகவே நிலவும் ஜாதிவெறி, அந்த ஜாதிவெறியின் கொடுங்கரங்கள் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நீண்டிருப்பது, ஒடுக்கப்பட்டவர்களின் மீது மிக நுணுக்கமாகவும் வெளிப்படையாகவும் எல்லா இடங்களிலும் நடத்தப்படும் வன்முறை, அந்த வன்முறையை ஒடுக்கப்பட்டவர்கள் நிராதரவாக எதிர்கொள்ளும் விதம் என இந்தப் படம் சமகாலத்தின் ஒரு சரித்திர சாட்சியமாகவே திரையில் விரிகிறது.
ஓடுக்கப்பட்டவர்கள் நாய்களை, குறிப்பாக வேட்டை நாய்களை வளர்க்க முடியாது என்பது தென் மாவட்டங்களில் ஒரு எழுதப்படாத விதி. இந்த பின்னணியில் நாயகனின் வேட்டை நாய் கொலை செய்யப்படுவதிலிருந்து துவங்குகிறது படம்.
இதற்குப் பின் திருநெல்வேலி சட்டக்கல்லூரிக்குள் நுழையும் பரியனுக்கு அமையும் தோழி ஒரு இடைநிலை ஜாதியைச் சேர்ந்தவளாக அமைந்துவிட, அடுத்தடுத்ததாக சம்பவங்கள் அணிவகுக்கின்றன.
சினிமாவின் கறுப்பு -வெள்ளை காலத்திலிருந்து தற்போதுவரை எத்தனை படங்களில் கல்லூரி காட்சிகள் வந்திருக்கும்?
இந்தப் படத்திலும் வகுப்பறை காட்சிகள் வருகின்றன. எவ்வித விசித்திரமான சம்பவங்களும் இல்லாமல், மிகவும் இயல்புடன் நிகழும் இந்தக் காட்சிகள் ரொம்பவுமே ரசிக்க வைக்கின்றன.
படத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான குணாதிசயங்களோடு மனதில் பதிந்துவிடுகிறார்கள்.
சில காட்சிகளில் மட்டும் வந்தால்கூட. ஒடுக்கப்பட்ட ஜாதியினரை பெரும் வன்மத்துடன் கொடூரமாகக் கொலைசெய்யும் கிழவனின் (கராத்தே வெங்கடேஷ்) பாத்திரம் தமிழ் சினிமா இதுவரை எதிர்கொண்டிராத ஒரு பாத்திரம்.
அதேபோல, தன் மகளின் நண்பனை திருமணத்திற்கு வரச்செய்து, ஒரு அறைக்குள் போட்டு அடித்து, மேலே சிறுநீர் கழிக்கும் இடைநிலை ஜாதி தந்தையின் கொடூரமும் தமிழ் சினிமாவுக்குப் புதிது.
அதேபோல, கதாநாயகனின் தந்தையை (தங்கராஜ்)அறிமுகம் செய்யும் பாடலும் பெண் சாயலுள்ள அந்த மனிதர் கொஞ்சம் கொஞ்சமாக அவருடய குணநலன்களோடு அறிமுகமாவதும் தமிழ்த் திரைக்குப் புதிது.
படத்தில் நுணுக்கமாக பல விஷயங்களைத் தொட்டுச்செல்கிறார் இயக்குநர்.
கதாநாயகி வீட்டுக் கல்யாணத்தில் வைக்கப்பட்டிருக்கும் நடிகரின் படம், பின்னணியில் ஒலிக்கும் 'வந்தனமுங்க வந்தனம்' பாடல் ஆகியவற்றின் மூலம் கதாநாயகியின் ஜாதி சுட்டிக்காட்டப்படுகிறது.
பாலாஜி சக்திவேலின் காதல் படத்திலும் இப்படி ஒரு காட்சி உண்டு. ஆனால், அதைவிட மிக நுண்மையாக அந்தத் தகவல் இங்கே சொல்லப்படுகிறது.
அதேபோல, ஒரு காட்சியில் கதாநாயகனை கதாநாயகியின் உறவினர்கள் அடித்துத் துரத்துகிறார்கள்.
கதாநாயகன் தப்பித்து ஆசுவாசமடையும் காட்சியில் பின்னணியில் தூரத்தில் ஒலிக்கும் ஒரு பாடலிலிருந்து கேட்கிறது, "எத்தனையோ ரத்த வரிகளை எங்கள் முதுகினில் தந்தவரே.. அத்தனையும் வட்டி முதலுடன் உங்கள் கரங்களில் தந்திடுவோம்" என்ற வரிகள்.
1980களில் விஜயகாந்த் நடித்து வெளியான 'அலை ஓசை' படத்தில் இடம்பெற்ற "போராடடா, ஒரு வாளேந்தடா" என்ற இந்தப் பாட்டு அந்த காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக் குறியீடாக, அவர்கள் வசிக்கும் இடமெங்கும் வீட்டு விசேஷங்களில் ஒலித்துக்கொண்டிருந்தது.
- ''கறுப்பியை எடுத்துவிட்டால் பரியேறும் பெருமாள் இல்லை'' - மாரி செல்வராஜ் பேட்டி
- இந்தியாவில் ஆபாசப் படத்துறையை அனுமதிக்க வேண்டுமா? - சன்னி லியோனி பேட்டி
அந்தப் பாடலை நினைவிலிருந்து மீட்டு கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தில் பலர் சில காட்சிகளே வருகிறார்கள். ஆனால், மனதில் ஆழமாகத் தங்கிவிடுகிறார்கள்.
உதாரணமாக சண்முகராஜா. கட்டட வேலை செய்வதோடு கல்லூரி மாணவர்களுக்கு தந்தையாகவும் நடிக்கும் சிவாஜி என்ற பாத்திரம்.
படத்தில் மொத்தமே 3-4 நிமிடங்கள்தான் வருகிறார். ஆனால், அவர் நடித்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்றாக அந்தக் காட்சி அமைந்துவிடுகிறது.
படம் நெடுக, பலரையும் திகைக்கவைக்கும் செய்திகளை கதாபாத்திரங்கள் எந்த அதிர்ச்சியும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சொல்கிறார்கள்.
ஆனால், அந்தக் காட்சி, பார்ப்பவர்களை உறைய வைக்கிறது. தன் தந்தையை நிர்வாணமாக்கி சாலையில் ஓடவிட்டவர்களை பழிவாங்க புறப்படும் நாயகனை அமைதிப்படுத்தும் அவன் தாய், "ஏம்பா உங்கப்பனுக்கு இதெல்லாம் புதுசா.. எத்தனையோ பேர் பொம்பளைன்னு நெனைச்சு தூக்கிட்டுப்போய், அவுத்துப் பாத்துட்டு விட்டிருக்கானுக. விடுப்பா" என சாதாரணமாக சொல்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் கதிர், நாயகியாக வரும் ஆனந்தி, கதாநாயகனின் நண்பனாக வரும் யோகிபாபு ஆகிய மூவருக்குமே அவர்கள் திரைவாழ்க்கையில் முக்கியமான படம் இது.
வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமே தலைகாட்டிவந்த யோகிபாபு இந்தப் படத்தில் தன் எல்லையை இன்னும் விரிவாக்கியிருக்கிறார்.
பின்னணி இசையை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் எனக் காட்டியிருக்கிறது சந்தோஷ் நாராயணனின் இசை.
இந்தப் படத்தில் வரும் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை, வேறு ஒரு தளத்திற்கே எடுத்துச் செல்கின்றன.
அதேபோலத்தான் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு. பசுமையான கிராமங்களையே சினிமா காட்டிவந்த நிலையில், ஸ்ரீதரின் கேமரா கழுகுப் பார்வையில் வறண்ட நிலப்பரப்பையும் குளிக்கும் நீரில் சிறுநீர் கழிப்பவர்களையும் காட்டுகிறது.
இந்தப் படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்திருக்கிறார். அவர் இல்லாவிட்டால் வேறு யாராவது தயாரித்திருப்பார்கள் என்று துணிந்து சொல்ல முடியவில்லை.
"இந்தக் கதைகளை உங்களால் சகிக்க முடியவில்லையென்றால், இந்த சமூகம் சகிக்க முடியாததாக இருக்கிறதென அர்த்தம். ஏற்கனவே நிர்வாணமாக நிற்கும் இந்த சமூகத்தின் ஆடைகளை உருவ நான் யார்? நான் அதை மறைக்க முயலவில்லை. அது என் வேலையுமில்லை" என்ற சாதத் ஹசன் மாண்டோவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று 'பரியேறும் பெருமாள்'.
பிற செய்திகள்:
- இரான்: அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறும் இந்தியா
- இந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு குறைந்தது 380 பேர் பலி
- "இறுதிப் போரின் போது தமிழகத்திலிருந்து கொழும்பை தகர்க்கும் திட்டம் இருந்தது"
- பெண்களுக்கான பியூட்டி பார்லர் நடத்தும் ஆணின் கதை #HisChoice
- ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முதல் முறை துணை மேலாளர் ஆகும் பார்வையற்றவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்