''பரியேறும் பெருமாள் தலித் சினிமா என சொல்லத்தேவையில்லை''

பரியேறும் பெருமாள் B.A.B.L. - சினிமா விமர்சனம் படத்தின் காப்புரிமை Facebook

இந்தியச் சமூகத்தில் வலுவாக வேரூன்றியிருக்கும் சாதியும் அதன் நிமித்தம் ஏற்படுகின்ற ஒடுக்குமுறைகளும்தான் பரியேறும் பெருமாளின் அடிப்படை கரு.

தினம்தினம் செய்திகளில் ஒடுக்குமுறையின் கோர வன்முறைகளை பார்த்தும் கேட்டும் சலனமின்றி நகர்ந்துச் செல்லும் சாதியச் சமூகத்திடையே 'நான் யார்?' என்ற கேள்வியை கேட்டு சமீப நாட்களில் இணையத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது பரியேறும் பெருமாள்.

பூக்கும் மரமெங்கும் தூக்கில்தொங்கும் நான் யார்?

நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்?

குடிசைக்குள் கதறி எறிந்த நான் யார்?

தேர் ஏறாத சாமி இங்கு நான் யார்?

உன் கை படாமல் தண்ணீர் பருகும் நான் யார்?

ஊர் சுவர் கட்டி தூரம் வைக்க நான் யார்?

மலக்குழிக்குள் மூச்சை அடைக்கும் நான் யார்? என வரிசையாக கேள்வி எழுப்பியிருக்கும் பரியேறும் பெருமாளுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முக்கியமான முயற்சி என சிலர் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் இணையவாசிகள் சிலர்.

உண்மையில் பரியேறும் பெருமாள் பேச முற்பட்டது என்ன? தமிழ் சினிமா உலகில் அதற்கு என்ன இடம்? பிரசார தொனியிலான திரைப்படமா?

படத்தின் காப்புரிமை Uma Devi/ Facebook

''கலைக்கும் மக்களுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. கலை வழி தான் பிரச்சனைகளை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்க முடியும். தமிழ் சினிமாவில் தென் தமிழகத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகளை கொண்ட ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவை பெரும்பாலும் சாதிய வர்த்தக பெருமிதங்களை எடுத்துரைப்பதாகவே இருந்திருக்கின்றன.

இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அவர்களுடைய குரலில் பேசியிருக்கும் ஒரு படைப்பு 'பரியேறும் பெருமாள்'. என்கிறார் பாடலாசிரியை உமாதேவி.

"இப்படத்தில் ஜோ என்ற பெண் கதாபாத்திரத்தின் தந்தை மனம் திறந்து தன் பக்கம் இருப்பது அநியாயம்தான் ஆனால் சமூகம் தன்னை நியாயத்தின் பக்கம் நகரவிடவில்லை என்பதை ஒரு இடத்தில் தனது குமுறலின் மூலம் பதிவு செய்வார். இவை தமிழ் சினிமாவுக்கு புதிது. இது போன்ற நிறைய பதிவுகள் படம் முழுவதும் விரவியிருக்கிறது. வசனங்களில் நிறைய படிமங்கள் இருக்கின்றன. அவை ஆய்வுக்குட்படுத்த வேண்டியவை."

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பறவைக்கு பறந்திட எல்லை ஏதம்மா? பாடலாசிரியர் உமாதேவி

"தென் தமிழகத்தில் அம்பேத்கரை எளிதாக கொண்டு சேர்க்கமுடியாது. அங்குள்ள பெரும்பான்மை மக்கள் அம்பேத்கரை பார்க்கும் பார்வையே வெவ்வேறாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு விடுதலை சிந்தனையாளராக அங்கே யாரும் பிரகடனப்படுத்தவில்லை. மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய அவரை தென் தமிழகத்தில் அடையாளம் காட்டுவது என்பது இதுவரை தமிழ் சினிமாவில் நடக்கவில்லை. தென் தமிழக கதைக்களம் கொண்ட படங்களில் 'நான் டாக்டர் அம்பேத்கர் போல ஆக வேண்டும்' என்ற வசனம் கூட ஒரு படத்திலும் இருந்ததில்லை."

அவ்விதத்தில் தனது அரசியலை மிகதெளிவாக தனது கலை வடிவில் கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குநர். இதுவரை எடுக்கப்பட்ட தென் தமிழக படங்கள் வீரத்தை பற்றியே பேசிவந்துள்ளன. தலித்துகள் மீதான வன்முறைகள், பெண்கள் மீதான வன்முறைகள், உணர்வுகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து அப்படங்களில் பேசப்பவில்லை. ஆனால் இவற்றை காட்சிபடுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ்.'' என விவரித்தார் பாடலாசிரியை உமா தேவி.

இணைய எழுத்தாளர் அரவிந்தன் '' சமரசமற்ற அரசியல் பேசியதே இப்படத்தின் சிறப்பு. ஒடுக்கப்படுவோர் ஒடுக்குபவர் இடையேயான பிரச்சனைகளுக்கு இதுதான் தீர்வு என முழுமையாக எதையும் சொல்லாவிட்டாலும் தீர்வை நோக்கிச் செல்வதற்கான முதல் படியாக இருவரும் சரிசமமாக உட்கார்ந்து உரையாட வேண்டும் எனும் விஷயத்தை முன்வைத்திருக்கிறது.

இதனை தலித் சினிமாவாக சிலர் பார்க்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. பிராமணிய சினிமா என்றோ வேறு ஏதேனும் சாதியின் பேரில் சினிமா என்றோ சொல்லப்படுவதில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் இதை ஏன் தலித் சினிமா என சொல்லவேண்டும்? இது அனைவருக்குமானது. உரையாடல் என்பது இரு தரப்பினரையும் உள்ளடக்கியது. தலித் சினிமா என சொல்வதன் மூலம் ஒரு தரப்பினரை மட்டும் பார்க்க வேண்டிய படமாக சுருக்கத் தேவையில்லை. தங்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்வதை வலியுறுத்தும் படமல்ல இது. இரு தரப்பினரும் பேச வேண்டும் . ஆகவே தலித் சினிமாவாக பரியேறும் பெருமாளை சொல்லத்தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து'' என்றார்.

படத்தின் காப்புரிமை Arvin Achilles/Facebook

''தென் தமிழகத்தில் உள்ள ஒரு பகுதியினரை பற்றிய படம். சில பிரிவினைகள் அவர்களுக்குள் இருக்கும் பிரச்னைகள் எனும்போது கூச்சல்கள் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்ப்பது வழக்கம். ஏனெனில் இதுவரை அப்படித்தான் அத்தகைய கதைக் களங்களை கொண்ட தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் நல்ல திரைமொழியோடு இத்திரைப்படம் வெளிவந்திருக்கிறது. காத்திரமான தூண்டுதல்கள் இல்லை. உளவியல் ரீதியாக ஒவ்வொரு கதாபாத்திரமும் அணுகப்பட்டு இருக்கிறது.

கருப்பியை இழந்தவுடன் நாயகன் அனுதாபப்படத்தான் முடியும். யாரையும் பழிதீர்க்க போகவில்லை. நமக்கு வேறு வேலை இருக்கிறது என்பதை உணர்ந்தே இருக்கிறான். கல்வியை இறுகப்பற்றுவதுதான் வழி என்பதும் இடையில் அன்பும் காதலும் இருப்பது சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே அப்பகுதி மக்கள் என்ன செய்து வருகிறார்களோ அதனை நிதானமாக கவனித்து அணுகியிருக்கிறது படக்குழு. இது பெரிய விஷயம்'" என்கிறார் சினிமா ஆர்வலரான மணி.

படத்தின் காப்புரிமை Mani Mk Mani/ Facebook

"படைப்பு உணர்ச்சி வசப்படலாம். படைப்பாளி உணர்ச்சி வசப்படக்கூடாது என்பார்கள். அது இங்கே சிறப்பாக கையாளப்பட்டிருந்தது. நாசூக்காகவும் அழகாகவும் திரைப்படத்தை பார்க்கும் யாவருக்கும் கோபம் ஏற்படுத்தும் வகையில் கதையும் திரைக்கதையும் அமைத்து இயக்கியிருப்பது மாரி தேர்ந்த படைப்பாளி என்பதை விளக்குகிறது.

படத்தின் இறுதிகாட்சி நம்பகத்தன்மை உடையதா இல்லையா என்பது விஷயம் அல்ல. ஆனால் ஒரு சினிமா மீதான இயக்குநரின் பார்வையை அழகாக காட்சிப்படுத்திருந்தார். அவர் ஒரு உரையாடலை துவக்கிவைக்க விரும்பியுள்ளார்.

கமர்ஷியல் படங்களில் கூட இல்லாத அளவுக்கு படம் முழுவதும் தேர்ந்த காட்சி மொழி இருந்தது. பேருந்தில் இருந்து இளைஞனை தள்ளிவிட்டு கொல்லும் பெரியவர், இன்னொரு காட்சியில் வீட்டுக்கு வந்த சேர்ந்தபோது அங்கே ஏற்கனவே பெண்ணின் தாய் அழுதுகொண்டிருக்க பதற்றமில்லாமல் அங்கேயும் தனது காரியத்தை முடிப்பது அதிர்ச்சிகரமானது. இயல்பாக அதிர்ச்சியை நமக்குள் கடத்திய அக்காட்சி மொழி சிறப்பான ஒன்று. அவ்வகையில் இப்படம் தனித்து தெரிகிறது'' என்று மேலும் கூறினார் மணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்