எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்': சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலில் இருந்து ஒரு காட்சி

படத்தின் காப்புரிமை எஸ்.ராமகிருஷ்ணன் /Facebook

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு, 2015ல் வெளியான சஞ்சாரம் நாவலுக்காக, இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

பக்கிரி என்ற பாத்திரத்தின் மூலம் நகரும் இந்த நாவல் நாதஸ்வர இசை, நாதஸ்வர இசைக் கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டது. பெரிதும் அவர்களது துயரம் குறித்துப் பேசுகிறது.

சஞ்சாரம் நாவலில் இருந்து ஒரு காட்சியை இங்கு வழங்குகிறோம்:

"இன்னும் என்னத்துக்குடா உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க. செரைக்கவா? எழுந்து கிளம்புங்க" எனத் திட்டினான் வீரசின்னு.

பக்கிரி நாதஸ்வரத்தை புலித்தோல் போன்ற புள்ளியிட்ட உறையினுள் போட்டபடியே, "உங்க பிரச்சனை எங்களுக்கு எப்படி அப்புச்சி தெரியும்? பொசுக்குனு நீங்க பாட்டுக்கு கையை நீட்டீட்டீங்க" என ஆதங்கத்துடன் கேட்டான்.

அது சின்னுவின் காதில் விழுந்தது.

"ஒக்காலி, அவன் வாங்குன அப்பு போதாதா? உன் செவுட்டையும் பேக்கனுமா?" எனச் சீறினான் சின்னு.

"அடிக்கிற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுகிடாதீங்க அப்புச்சி. அப்புறம் வேற மாதிரியாகிப் போயிரும்" என முறைத்தான் பக்கிரி.

அவன் சொல்லி முடிப்பதற்குள் செவுளோடு சேர்ந்து அடிவிழுந்தது. தனது அகன்ற கைகளால் பக்கிரியை மாறி மாறி அடிக்கத் துவங்கினான் சின்னு.

பக்கிரி தனது கைகளை குறுக்கே வைத்துத் தடுத்துக்கொண்டிருந்தான். அடி முகத்தில், தலையில், தோளில் என விழுந்தபடியே இருந்தது.

"யே விடுப்பா. இடம் தெரியாம. கோவில்ல வச்சு எதுக்கு வில்லங்கத்தை இழுக்குறே. இருக்கிற பிரச்சனை போதாதா? ஏலேய் சின்னு விடுறா" என ஆளுக்கு ஆள் கத்தியபடியே வீரசின்னுவை விலக்கிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பக்கிரி கீழே விழுந்து கிடந்தான். சின்னு வேஷ்டி அவிழ்ந்து விழவே, சரிந்து பிதுங்கும் தொப்பை தெரிய, கோடு போட்ட அண்டிராயருடன் நின்று கொண்டிருந்தான். அவனது காலில் ரோமங்கள் அடர்ந்து சுருண்டிருந்தன. சின்னுவின் ஆவேசம் அடங்கவேயில்லை.

"நாயனம் வாசிக்கிற ஈனப்பயலுக்கு இம்புட்டு தைரியம் வந்துருச்சா? யார்கிட்ட முறைக்கிற? மயிராண்டி, உன்னை வெட்டிப்போட்டுட்டு கையை ஆட்டிகிட்டு போய்கிட்டே இருப்பேன். எவன் கேட்கப்போறது?" என சின்னு கத்திக்கொண்டிருந்தான்.

விழுந்துகிடந்த பக்கிரியை ரத்தினம் கைத்தாங்கலாக தூக்கிவிட்டு முதுகில் கிடந்த மண்ணைத் தட்டிவிட்டார். அடிவாங்கிய வலியும் அவமானமும் தாங்க முடியாமல் பக்கிரி பல்லைக் கடித்தான். திருவிழா பார்க்க வந்த கூட்டமே அவர்களைச் சுற்றித் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தபடியே இருந்தது. அந்தக் கூட்டத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேச ஒருவர்கூட முன்வரவேயில்லை.

ஒரு பெரியவர் மட்டும் ரத்தினத்தைப் பார்த்து அதிகாரமான குரலில் கேட்டார்,

"எந்தூருடா நீ?"

"ஒதியூருங்க சாமி" என்றார் ரத்தினம்.

"வந்தமா, வாசிச்சமானு இல்லாம என்ன குண்டிக் கொழுப்பு ஏறிப் போச்சா? நீ என்ன சாதி, நாங்க என்ன சாதி? தராதரம் வேணாமா?" எனக் கேட்டார் பெரியவர்.

"இல்லை எம்மான். அறியாப் பயல். தப்பா பேசிட்டான். மாப்பு குடுங்க" என்று பம்மினார் ரத்தினம்.

இதற்குள் திமிறிக்கொண்டிருந்த சின்னுவை பந்தலை நோக்கி இழுத்துக்கொண்டு போயிருந்தார்கள்.

பக்கிரிக்கு மூத்திரம் முட்டுவது போலிருந்தது. கன்னம் வலித்தது. தாடைகட்டிக்கொண்டது போல இறுக்கமாயிருந்தது. தலையை கோதியபடியே அவன் கீழே விழுந்துகிடந்த பீடிக் கட்டினையும் தீப்பெட்டியையும் எடுத்து, ஜிப்பாவின் பையில் போட்டுக்கொண்டான்.

இதுநாள் வரை தன்னை ஒருவரும் இப்படி அடித்ததேயில்லை. காரணமேயில்லாமல் தன்னை போட்டு அடித்துவிட்டார்களே என மனக் குமுறலாக இருந்தது பக்கிரிக்கு. அவன் மூத்திரம் பெய்வதற்காக வேலிப் புதரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ரத்தினம் பக்கிரியின் கூடவே வந்தார். இருவரும் வேலியருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்து மூத்திரம் பெய்தார்கள். மற்றவர்கள் கேட்டுவிடக்கூடாது என்பதுபோல மெதுவான குரலில் சொன்னார் ரத்தினம்."

"நைசா கிளம்பிபோய்கிட்டே இருப்போம். இனிமே செத்தாலும் இந்தக் கோவில்ல வாசிக்கக் கூடாது."

சஞ்சாரம்

"கூட்டிகிட்டு வந்து இப்படி அசிங்கப்படுத்தீட்டாங்க. பேசின பணமும் குடுக்கல. நாம எப்படிண்ணே ஊருக்குப் போறது?" என ஆதங்கப்பட்டவாறே மூத்திரம் பெய்த இடத்தில் எச்சிலை காறி உமிழ்ந்தான் பக்கிரி. அதில் லேசாக ரத்தத் துளிகள் படிந்திருந்தன. அதை கவனித்தவரைப்போல ரத்தினம் சொன்னார்,

"அருப்புக்கோட்டையில இறங்கி டாக்டர்கிட்ட காட்டிகிட்டு போயிருவோம். என்கிட்ட காசு இருக்கு."

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம். பாத்துக்கிடலாம்" என வேஷ்டி நுனியால் முகத்தைத் துடைத்தபடியே பக்கிரி, ஜிப்பாவின் பைக்குள் இருந்த பீடி ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டு இழுத்தான். புகையை இழுக்க இழுக்க மனதில் ஆவேசம் கொப்பளிக்க துவங்கியது.

என்ன மனிதர்கள் இவர்கள்? அவர்கள் பிரச்சனைக்கு நம்மை ஏன் அடிக்கிறார்கள்? சாதித் திமிர் என்பது இதுதானா? இப்படி அடியும் அவமானமும்பட்டு நாய் பிழைப்பு எத்தனை நாளைக்கு பிழைப்பது? எந்த ஊருக்கு வாசிக்கப் போனாலும் தங்களை சாதியைச் சொல்லி கேவலமாகத்தான் நடத்துகிறார்கள். சாமி முன்னால் வாசிப்பது மட்டும்தான் கௌரவம். சாப்பாட்டை தெருவில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். தாழ்வாரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிறோம்னு சொன்னால் கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள். காற்றடித்து சோற்றில் மண்ணைவாரிப் போட்டாலும் அப்படியேதான் சாப்பிட வேண்டும். இதில் ரெண்டு நாள் கச்சேரி என்றால் மணிக்கணக்காக நின்று வாசித்து கால் வலி வந்துவிடும். படுப்பதற்கு இடம் கிடைக்காது. கண்ட சினிமா பாட்டுகளையும் வாசிக்கச் சொல்லி இம்சைப்படுத்துவார்கள். பத்து வயசுப் பையன்கூட ஒருமையில்தான் பேசுவான். எதிர்த்து யாரையும் கேட்க முடியாது. ஏதாவது கூலிவேலைக்குப் போயிருந்தால்கூட கௌரவமாக கஞ்சி குடித்துக்கொண்டு வாழ்ந்திருக்கலாமே? என்ன வாழ்க்கையிது என தன் மீதே அவனுக்கு எரிச்சலாக வந்தது.

பீடியின் கசப்பு அவன் நாக்கில் எச்சிலைச் சுரக்க வைத்தது. நாக்கைச் சுழற்றி உதட்டை ஈரப்படுத்திக்கொண்டபடியே பீடியை பாதியில் அணைத்துவிட்டு எழுந்து விடுவிடுவென பந்தலை நோக்கி நடக்கத் துவங்கினான்.

சின்னுவின் குரல் பந்தலுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது."

"இங்க பாருங்கப்பா, சாமி வேட்டைக்கு புறப்படனும்னா பாண்டித்துரை அய்யா கையாலே வில்லை எடுத்துக்கொடுக்கச் சொல்லுங்க. இல்லை, சாமியும் புறப்படாது, ஒரு மயிரும் புறப்படாது. பாத்துக்கங்க"

"அதுக்கு மூதுர்காரங்க ஒத்துக்கிட மாட்டாங்களே. என்ன செய்யச் சொல்ற?" என யாரோ கேட்டார்கள்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. இது நம்ம குலசாமி. இங்க நாம வச்சதுதான் சட்டம். மூதூர்காரங்கன்னா என்ன பெரிய மயிரா, என்ன புடுங்கிருவாங்க?" எனக் கேட்டான் சின்னு.

"சின்னு சொல்றது சரிதானப்பா. மூதூர்காரங்க விட்டுக்கொடுத்து போறதுதான் சரி" எனச் சொன்னான் வேலு.

சஞ்சாரம்

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது சின்னுவின் எதிரில்போய் நின்றான் பக்கிரி. அவனை அங்கே சின்னு எதிர்பார்க்கவில்லை.

"என்னடா நெஞ்சை நிமித்திக்கிட்டு நிக்கே? வாங்கின அடி பத்தாதா?" எனக் கேலியான குரலில் கேட்டான் வீரசின்னு.

பதில் சொல்லாமல் தனது கையை மடக்கி, ஓங்கி வீரசின்னுவை நோக்கிக் குத்தினான் பக்கிரி.

இதற்குள் சின்னுவை யாரோ பின்னாலிருந்து பிடித்து இழுக்கவே பக்கிரியின் குத்து சின்னுவின் தாடையோடு விழுந்தது. மறு நிமிஷம் சின்னுவின் உதட்டிலிருந்து ரத்தம் கொழகொழவென கொட்ட ஆரம்பித்து தாடையில் வழிந்தது. அவன் தன் கைகளால் ரத்தத்தை தொட்டுப் பார்த்தபடியே ஓலமிட்டு அலறத் துவங்கினான்.

இதை பக்கிரி எதிர்பார்க்கவில்லை. இனி என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தபோது இருளாண்டி பாய்ந்து தாவி பக்கிரியை பிடித்து இழுத்து கீழே தள்ளினான். யாரோ சிலர் சேர்ந்து அவனை அமுக்கினார்கள்.

பக்கிரி கீழே விழுந்துவிடவே நாலைந்து பேர் ஒன்று சேர்ந்துகொண்டு அவனை மிதிமிதியென மிதித்தார்கள். ஒரு ஆள் தன்னுடைய செருப்பைக் கழற்றி பக்கிரியை ஆவேசமாக அடிக்கத் துவங்கினான்.

"நாயனக்கார நாயி. எங்க வந்து திமிரக் காட்டுறே?" என சிலர் ஆவேசமாக கத்தியபடியே இடையில் நுழைந்து தாங்களும் அடிக்கத் துவங்கினார்கள்.

பக்கிரி வலியைப் பொறுத்துக்கொண்டபடியே விழுந்துகிடந்தான்.

"சாமி, மாப்புக் குடுங்க. அறியாம செஞ்சிட்டான். அவனை விட்டுருங்க. உங்க காலைப் பிடிக்கிறேன்" என ரத்தினம் கூட்டத்தைப் பார்த்து கையெடுத்துக் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

யாரும் அவரது வேண்டுதலைக் கேட்கவேயில்லை. அடித்துக்கொண்டிருந்த ஒருவன் ஆத்திரத்தில் பக்கிரியின் தலையில் காறித் துப்பினான். பக்கிரி கைகளை அடிவயிற்றோடு சுருட்டிக்கொண்டு பூரான்போல சுருண்டு கிடந்தான். மண்ணில் அவன் முகம் அழுந்திக்கிடந்தது.

தவில் வாசிக்கும் பழனியும் தண்டபாணியும் எங்கே தங்களையும் அடித்துவிடப் போகிறார்களோ எனப் பயந்துபோய் பந்தலைவிட்டு ஒளிந்து நின்றுகொண்டார்கள்.

வேட்டைத் திருவிழா பார்க்க வந்திருந்த பெண்களில் சிலர் பக்கிரி அடிபடுவதை வேடிக்கை பார்த்தபடியே "கொழுப்பு எடுத்தநாயி அடிவாங்குறான்" எனப் பேசிக்கொண்டார்கள்.

அடித்துக்கொண்டிருந்தவர்களை விலக்கி சொக்கு உரத்த குரலில் சப்தமிட்டார்.

"நாயனக்காரங்க ரெண்டு பேரையும் பிடிச்சு வேப்ப மரத்துல கட்டிப்போடுங்க. பெறகு விசாரிப்போம். இப்போ சாமி வேட்டைக்குப் போய்ட்டு வரட்டும்பா. அதுக்கு ஆகுற வழியப் பாருங்க"

"அதைத்தானே நானும் சாயங்காலத்திலிருந்து சொல்லிகிட்டு இருக்கேன். என் பேச்சை யாரு கேட்கிறா? எவனை வெட்டுறது, எவனைக் குத்துறதுனுதானே அலைஞ்சிகிட்டு இருக்காங்க" என சலித்துக்கொண்டார் பூசாரி ஆறுமுகம்.

சின்னுவை சமாதானப்படுத்தி நாற்காலியில் உட்காரவைத்திருந்தார்கள். அவன் உதட்டில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தபடியே ஆத்திரம் அடங்காமல் திட்டிக்கொண்டிருந்தான்.

"கொழுப்பு எடுத்துப்போய் நம்ம மேலையே கையை வைக்கிறான். இவங்களையெல்லாம் இப்பவே ஒட்ட நறுக்கிவிட்ரணும். இல்லேண்ணா நாளைக்கு மூஞ்சியில ஒண்ணுக்கு அடிப்பாங்க" என்றான் சின்னு.

"அதுதான் அவன் கையைக் கால உடைச்சி போட்டாச்சில்லே. விட்றா சின்னு" என்றான் வேலு.

"அப்படி விடமுடியாதுறா. ஒருத்தனையாவது ரத்த பலி போட்ரனும். அப்போதான் மத்தவங்களுக்கு பயம் வரும்" என்றான் சின்னு.

"எதைச் செய்றதா இருந்தாலும் இங்கே வச்சு செய்ய வேணாம், பார்த்துக்கோ. இது நாலு பொம்பளை பிள்ளைக வந்துபோறஇடம். சாமி வேட்டைக்கு போய்வந்து அடங்கட்டும். ராவுல பார்த்துக்கிடுவோம்" என்றான் கருத்த கண்ணன்.

சஞ்சாரம் படத்தின் காப்புரிமை எஸ்.ராமகிருஷ்ணன்/Facebook

"அவன் சொல்றதுதான்பா சரி. இது நம்ம பிரச்சனை. பிறகு பார்த்துகிடுவோம். கோவில் காரியத்தை முடிக்கிற வழியைப் பாருங்க" என்றார் செல்லைய்யா.

"இத்தனை வருஷமா மூதூர்காரங்கதான் வேட்டைக்கு வில்லு குடுக்குறது வழக்கம். இப்போ என்னப்பா பண்டித்துறையைச் செய்யச் சொல்றீங்க?" எனக் கேட்டார் பரமசிவம்.

"மூதுர்காரங்களுக்கு முன்னாடி அந்த மரியாதை பாண்டித்துரையோட வம்சத்துக்குத்தானே இருந்துச்சு. பஞ்சம் பிழைக்க அவங்க தஞ்சாவூர் பக்கம் போன நேரம்பார்த்து மூதூர்காரங்க வில்லு குடுக்க ஆரம்பிச்சாங்க. இப்போ நாங்களும் வளந்து நிக்குறோம். உரியதைத்தானே கேட்குறோம். எங்க வில்லை ஏத்துகிட்டா சாமி புறப்படும். இல்ல, பீடத்தைவிட்டு சாமி வெளியே வர முடியாது. பார்த்துக்கங்க" என்றான் வேலு.

"ஏன்பா பழசை பேசி நமக்குள்ளே சண்டை போட்டுக்கிட்டு? நாம எல்லாம் ஒரே தாயாதிகள்தானே" என்றார் முத்துவேல்.

"அதனாலேதான் வாயிட்டு பேசிகிட்டு உட்கார்ந்திருக்கோம். வேற சாதி பயகன்னா, அந்த நாயனக்காரனுக்கு விழுந்த அடி இந்நேரம் உங்களுக்கும் விழுந்திருக்கும்லே" என்றான் கருத்தகண்ணன்.

"நாங்களும் ஒன்னும் சும்மா வரலை. அருவா கம்போடதான் வந்திருக்கோம். எங்க உடம்புலையும் ரத்தம் சூடாதான் இருக்கு. ஆள் பார்த்து பேசச்சொல்லுங்க" என்றான் மூதூரைச் சேர்ந்த துரைப்பாண்டி.

"மீசையை வச்சிட்டா? என்ன பெரிய சூரப்புலியா? என் சூத்து மசிரைக்கூட பிடுங்க முடியாது பார்த்துக்கோ" என்றான் சின்னு.

"அவம்பாட்டுக்கு வாய்க்கு வந்ததை பேசிக்கிட்டே இருக்கான். நீங்க எல்லாம் வேடிக்கை பாக்குறீங்க. முதல்ல சின்னுவை அடக்கி படுக்க போடுங்கப்பா" என்றார் பூசாரி ஆறுமுகம்.

"நியாயத்தை யாரு வேண்டுமானாலும் கேட்கலாம்" என்றான் வீரசின்னு.

"அதை நாங்க பார்த்துகிடுறோம். நீங்க போயி படுங்க" என அடக்கினார் பூசாரி ஆறுமுகம்.

(எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவலில் இருந்து சில பகுதிகள் அவரது அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்