இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு : சினிமா விமர்சனம்

திரைப்படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
நடிகர்கள் விமல், சிங்கம்புலி, பூர்ணா, ஆஷ்னா சவேரி, மியாராய் லியோன், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான்
இயக்கம் ஏ.ஆர். முகேஷ்

தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் துவங்கி 'இருட்டு அறையில் முரட்டு குத்து' வரை சமீப காலமாக சில 'அடல்ட் காமெடி' வகை திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் சில பெரும் வெற்றியையும் பெற்றிருக்கின்றன. அந்த பாணியில் ஒரு படத்தைத் தர விரும்பியிருக்கிறார் இயக்குனர்.

ஹரியும் கிரியும் ஒரு மருந்துக் கடையில் வேலை செய்பவர்கள். ஆனால், அங்கு சம்பளம் மிகக் குறைவு என்பதால் அவ்வப்போது சின்னச்சின்ன திருட்டுகளிலும் ஈடுபடுகிறார்கள். அப்படியான ஒரு திருட்டின்போது, இருவரும் தனித்தனியே 5 லட்ச ரூபாயை கொள்ளையடிக்கிறார்கள். அதேபோல, போதைப் பொருள் நிரப்பப்பட்டிருந்த ஒரு டப்பாவையும் தெரியாமல் எடுத்துவந்துவிடுகிறார்கள்.

ஐந்து லட்ச ரூபாயை திருட்டுக்கொடுத்த போலீஸ்காரர் ஒரு பக்கம் துரத்துகிறார். மற்றொரு பக்கம் போதைப்பொருளை மீட்க முயலும் மாஃபியா கும்பல் துரத்துகிறது. இன்னொரு பக்கம் ஹரியைக் காதலிக்கும் பெண்ணின் தந்தை துரத்துகிறார். இதற்கு நடுவில் ஹரியை பாலியல் ரீதியாக பயன்படுத்த முயலும் ஒரு பெண்ணும் துரத்துகிறார்.

இந்தக் கதையை கேட்க மேலோட்டமாக நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார்கள். முதல் பாதியில் சகிக்கவே முடியாதபடி இருக்கிறது திரைக்கதையும் வசனங்களும். கதை எதை நோக்கி நகர்கிறது என்பதை இடைவேளை வரை கண்டே பிடிக்க முடியவில்லை.

இரண்டாவது பாதியில், மாஃபியா கும்பல் தலைவராக ஆனந்த் ராஜ் அறிமுகமானதும் கதை சற்று சூடுபிடித்தாலும் எந்த சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதையால் ஏனோதானோவென்று நகர்கிறது படம்.

இயக்குனர் 'அடல்ட் காமெடி' என்பதை அருவெறுப்பான காட்சிகள், வசனங்கள் என்று புரிந்துகொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அதனால், துவக்கத்திலிருந்தே நெளிய வைக்கிறது படம்.

விமல், ஆஷ்னா சவேரி, பூர்ணா போன்ற நட்சத்திரங்களுக்கு இந்தப் படம் ஒரு பெரிய பின்னடைவு.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்