சீதக்காதி : ஏன் இந்த தலைப்பு? மீண்டும் விஜய் சேதுபதி ஏன்? -மனம் திறக்கும் பாலாஜி தரணிதரன்

சீதக்காதி - என்ன மாதிரியான திரைப்படம் ?

விஜய் சேதுபதியின் 25வது திரைப்படமான சீதக்காதி இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில், சமூகவலைதளங்களில் இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுகிறது.

2012-ஆம் ஆண்டு வெளிவந்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் சீதக்காதி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதியின் வயதான தோற்றம், இந்தியன் திரைப்படம் போல் மேக்கப்புக்கு மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டதாக வெளிவந்த தகவல்கள், இயக்குநர் பாலாஜி தரணிதரனின் முந்தைய படம் ஏற்படுத்திய இனிய அதிர்ச்சி போன்றவை சீதக்காதி குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீதக்காதி திரைப்படம் குறித்து பாலாஜி தரணிதரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''கலையை பற்றிய கதைதான் சீதக்காதி. கலையோடு ஒன்றி பயணம் செய்யும் கலைஞன் ஒருவனின் அனுபவங்களை இந்த திரைப்படம் கூறுகிறது'' என்று கூறினார்.

சீதக்காதி என்ற படத்தலைப்பு குறித்து அவர் கூறுகையில், ''இந்த படத்தலைப்பில் மிகவும் கடினமாக யோசிக்க ஒன்றுமில்லை. படத்தில் வரும் எந்தப் பாத்திரத்திற்கும் சீதக்காதி என பெயர் கிடையாது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற வாசகத்தின் பொருளும், படத்தலைப்பின் காரணமும் இந்த படம் பார்த்த பிறகு நன்கு புரியும்'' என்று தெரிவித்தார்.

தான் முன்பு இயக்கிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தை போல சீதக்காதியிலும் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ளது பற்றி கூறுகையில், ''இந்த கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் மிகவும் பொருத்தமாக விஜய் சேதுபதி உள்ளார். அது மட்டுமல்லாமல், நாங்கள் இருவரும் ஏற்கனவே சேர்ந்து பணியாற்றியதால் தற்போது மிகவும் இயல்பாக உணர்ந்தேன்'' என்று பாலாஜி தரணிதரன் நினைவுகூர்ந்தார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கு பிறகு அடுத்த திரைப்படத்துக்கு 6 ஆண்டுகள் என நீண்ட இடைவெளி ஏன் என்று கேட்டதற்கு, இடையில் தான் இயக்கிய ஒரு பக்க கதை திரைப்படம் வெளியாகததால் நீண்ட இடைவெளி போல் தோன்றுவதாக பாலாஜி தரணிதரன் குறிப்பிட்டார்.

''சீதக்காதி திரைப்படத்தில் 73 வயது நபராக வரும் விஜய் சேதுபதியின் மேக்கப்பை ஹாலிவுட் மேக் அப் கலைஞரான கெவின் ஹானி திட்டமிட்டார் அவரின் உதவியோடு அலெக்ஸ் நோபல் என்பவர் இங்கு வந்து மேக்கப்புக்கு உதவினார். மேக்கப் போட 5 மணி நேரங்கள் ஆகும். இதனை கலைக்க ஒன்றரை மணி நேரம் ஆகும்'' என்றார்.

கதாப்பாத்திரத்துக்கு மிக பொருத்தமாக நடிகை அர்ச்சனா அமைந்துள்ளதாக குறி ப்பிட்ட பாலாஜி தரணிதரன், இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்தின் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் மிகவும் வலுவூட்டியிருப்பதாக கூறினார்.

Image caption அர்ச்சனா

''இந்த திரைப்படத்தை கலை படம் மட்டுமே என்று பலர் நினைக்கக்கூடும். அவர்களுக்கு இந்த திரைப்படத்தில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. படம் பார்க்கும்போது அது தெரியும்'' என்று அவர் தெரிவித்தார்.

இத்திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகும் சரஸ்காந்த் பிபிசி செய்திப்பிரிவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

செய்தி ஊடகத்தில் இருந்து திரைப்படத்துறையில் காலடி வைத்துள்ள அனுபவம் குறித்து சரஸ்காந்த் பேசுகையில், ''செய்தி ஊடகத்தில் பணியாற்றிய காலத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். சினிமாவில் நுழைய நான் நீண்டகாலம் காத்திருந்தேன் என்று கூறமுடியாது. ஆனால், ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அதனால் இந்த முடிவு எடுத்தேன்'' என்று கூறினார்.

Image caption சரஸ்காந்த்

''செய்திப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் கற்றுக்கொண்ட பல விஷயங்கள் தற்போது திரைப்படத்துறையில் உதவியது. லைட்டிங் போன்ற பல விஷயங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது முன்பு கற்றுக்கொண்டது தற்போது பெரிதும் உதவியது'' என்று அவர் கூறினார்.

''ஒரு நடிகர் மீது அளவுக்கு அதிகமாக ஒளி பட்டால் அது செயற்கையான தோற்றத்தை தந்துவிடும் என்பது நான் ஊடக செய்திபிரிவில் பணியாற்றியபோது கற்றுக் கொண்ட ஒன்று'' என்று சரஸ்காந்த் மேலும் தெரிவித்தார்.

''சீதக்காதி திரைப்படத்துக்கு மிக இயல்பான காட்சியமைப்பு தேவைப்பட்டது. எந்த சினிமாத்தனமும் இல்லாத காட்சிகளும், பார்வையாளர்களை உடனடியாக கதைக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதும் இயக்குநரின் விருப்பமாகவும், கதையின் தேவையாகவும் இருந்தது. நான் அவ்வாறே செயல்படுத்தினேன்'' என்று பட அனுபவங்களை விவரித்தார்.

''பாலாஜி தரணிதரனை எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே தெரியும். ஆனால், ஒரு இயக்குநர் மற்றும் படைப்பாளி என்ற முறையில் அவரின் திறமைகளை கண்டு வியந்துள்ளேன். என் நண்பன் என்பதற்காக இதனை கூறவில்லை'' என இயக்குநருடன் தனக்குள்ள நட்பு குறித்து அவர் விவரித்தார்.

''விஜய் சேதுபதியின் மேக்கப்புக்கு தினமும் 5-6 மணி நேரங்கள் ஆகும். இந்த நேரத்தில் மற்ற ஒத்திகைகளை செய்வோம். அதன் பின்னர் விஜய் சேதுபதி மேக்கப்புடன் தயாராக வந்தவுடன் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கும். ஆனால், அப்போதும்கூட ஓரிரு தவறுகள் நடக்கும். ஆனால், எந்த சூழலிலும் நாங்களோ, விஜய் சேதுபதி போன்றவர்களோ எந்த பதட்டமும் இல்லமால் எங்கள் பணியை தொடர்வோம்'' என்று படத்தில் இருந்த சவால்கள் பற்றி சரஸ்காந்த் குறிப்பிட்டார்.

''சீதக்காதி படத்தில் சிவப்பு வண்ணத்துக்கு தனி முக்கியத்துவம் தந்துள்ளோம். படம் முழுக்க சில இடங்களில் அது ஆடையோ அல்லது பின்னணியோ சிவப்பு வண்ணத்தில் இருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்'' என்கிறார் சரஸ்காந்த்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: