மாரி 2 - சினிமா விமர்சனம்

மாரி - 2

பட மூலாதாரம், dhanush/twitter

பெரும் வெற்றிபெற்ற படங்களின் தொடர்ச்சியைப் போல, இரண்டாவது, மூன்றாவது பாகங்களை எடுப்பது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகியிருக்கும் நிலையில், அந்த வரிசையில் அடுத்ததாக வந்திருக்கும் படம் மாரி - 2.

2015ல் இதே கூட்டணியில் வெளிவந்த மாரி படத்தின் அடுத்த பாகம். மாரி படத்தின் முதல் பாகமே அவ்வளவாக பேசப்படாத படம் என்ற நிலையில், துணிந்து இந்த பாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

முதல் பாகத்தில் லோக்கல் ரவுடியான மாரியை சிறைக்கு அனுப்பிவிட்டு, அவனது ஏரியாவை கைப்பற்றுகிறான் வில்லன். சிறையிலிருந்து திரும்பவரும் மாரி தன் ஏரியாவை மீட்பதுதான் கதை. இதற்கு நடுவில் புறா பந்தையம் வேறு.

இந்த பாகத்தில் முந்தைய பாகத்தில் வந்த காஜல் அகர்வால், வில்லன் ஆகியோர் இல்லை. நண்பர்களாக ரோபோ சங்கரும் வினோத்தும் தொடர்வதோடு, புதிய இணைபிரியா நண்பராக கிருஷ்ணாவும் நாயகியாக சாய் பல்லவியும் வருகிறார்கள். புறா பந்தயம், புறாக் கூண்டெல்லாம் இல்லை.

மாரியும் (தனுஷ்) கலையும் (கிருஷ்ணா) இணைபிரியாத நண்பர்கள். போதைப் பொருள் கடத்தல் தவிர சின்ன சின்ன கடத்தல், ரவுடியிசம் என 'நிம்மதி'யாக வாழ்ந்துவருகிறார்கள். ஆனால், மரணத்தின் கடவுளாக அறிமுகமாகும் பிஜோ (டெவினோ தாமஸ்), மாரியை கொல்லத்துடிக்கிறான்.

வேறு சிலரும் தொடர்ந்து மாரியைக் கொல்ல முயல்கிறார்கள். ஒரு சிறிய காரணத்திற்காக மாரியும் கலையும் பிரிந்துவிடுகிறார்கள். பிஜோவின் கொலை முயற்சியில் மாரியின் காதலி ஆனந்தி (சாய் பல்லவி) கடுமையாக காயமடைகிறாள். இதற்குப் பிறகு மாரியும் ஆனந்தியும் காணமல்போகிறார்கள். மாரிக்கும் ஆனந்திக்கும் என்ன ஆனது, அவன் ஏன் மறைந்து வாழ்கிறான் என்பது மீதிக் கைது.

பட மூலாதாரம், dhanush/twitter

80களிலும் 90களிலும் வந்த மசாலாப் படங்களைப் பார்ப்பதைப் போல இருக்கிறது மாரி-2. ஒரு ரவுடி, அவனை விழுந்துவிழுந்து காதலிக்கும் அடாவடிப் பெண், சப்பை காரணத்திற்காக கதாநாயகனை கொல்வதற்காக படம் முழுக்க பக்கம்பக்கமாக வசனம் பேசும் வில்லன், முதலில் பிரிந்து பிறகு க்ளைமாக்ஸில் ஒன்று சேரும் நண்பர்கள் என படம் முழுக்க பழைய வாடை.

இன்னொரு பக்கம், ரவுடி கும்பலுக்குள் போலீஸ் இன்பார்மர், போலீசிற்குள் ரவுடி கும்பலுக்கு இன்பார்மர் என குழப்பி, தலையைச் சுற்ற வைக்கிறார்கள். மரணத்தின் தேவன் என அறிமுகமாகும் வில்லன் படம் முழுக்க பக்கம் பக்கமாக வசனம் பேசிக்கொண்டேயிருக்கிறார்.

தனுஷ் இந்தப் படத்தில் எதையெதையோ முயற்சிக்கிறார். சில காட்சிகள் அதில் ஒர்க் அவுட் ஆகின்றன, அவ்வளவுதான். சாய் பல்லவிக்கு இது இரண்டாவது தமிழ் படம். அவரது பாத்திரம் நன்றாக இருந்தாலும் கதையில் இருக்கும் சொதப்பல்கள் காரணமாக, சாதாரணமாக கடந்துபோகிறார்.

பட மூலாதாரம், dhanush/twitter

சர்கார் படத்தில் வந்ததைப் போல இந்தப் படத்திலும் காட்டன் சேலை - கழுத்துவரை ஜாக்கெட் - பல்லைக்கடித்துக்கொண்டு பேச்சு என ஒரு அரசு உயரதிகாரியாக வந்திருக்கிறார் வரலட்சுமி. வில்லனாக தமிழுக்கு வந்திருக்கும் டெவினோ தாமஸிற்கு சுத்தமாக செட் ஆகவில்லை.

இரண்டு, மூன்று பாடல்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்துபோகின்றன. பின்னணி இசையெல்லாம் கேட்கவே வேண்டியதில்லை.

தனுஷின் ரசிகர்களுக்காவது இந்தப் படம் பிடிக்குமா என்பது சந்தேகம்தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: