"ஆர்மோனிய பெட்டியும் தொழில்நுட்பமே, அதை விட்டுவிட முடியுமா?"

இளையராஜா

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

இளையராஜா

பாரம்பரிய இசையை காக்க தொழில்நுட்பம் என்ற பெயரில் உருவாக்கும் இசையை கேட்பதை நிறுத்த வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருந்த கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று பிபிசி தமிழின் "வாதம் விவாதம் " பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு சமூக வலைதள பக்கங்களில் நேயர்கள் தெரிவித்த கருத்துகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

"முதலில் தொழில்நுட்பம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். ஆர்மோனியமும் தொழில்நுட்பம்தான். ஆர்மோனியம் கண்டுபிடிச்சவுடனே அது புது தொழில்நுட்பம் பயன்படுத்தமாட்டேன் என்று சொல்லியிருந்தால் அது சரியா? இன்று புதிதாயிருப்பது நாளை பழையது" என்று முத்துராஜ் என்ற நேயர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"இளைய ராஜாவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது. மாறும் காலத்திற்கேற்ப நாமும் மாறுவது அவசியம். அதே சமயத்தில் பாராமரியத்தையும் அழியாமல் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு" என்று சரோஜா பாலசுப்ரமணியன் ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"ஒரு பாடல் கேட்கும்பொழுது அது மனதில் ஏதோ ஒரு உணர்வை தர வேண்டும் அது இப்போதைய இசையமைப்பாளர்களிடம் இல்லை. காலம் கடந்தும், இன்றும் நாம் இசைஞானியின் இசையை விரும்புவதற்கு அதுவே காரணம்" என்று சக்திவேல் தெரிவித்துள்ளார்.

"இளையராஜா சொல்வது முற்றிலும் உண்மைதான். புல்லாங்குழலினால் எந்த சுற்றுச்சூழல் பிரச்சனையில்லை. இசைக்க கலைஞர் மட்டுந்தான் வேண்டும். அதனால் இசை கலைஞர்கள் வாழ்க்கை மேம்படும். டிஜிட்டல் இசையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்" என்று தேவேந்திரன் என்ற நேயர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

"இசைஞானியின் இசை கோர்ப்பு மீதான ஆசையே, கணினி மூலமான இசைவார்ப்பை எதிர்க்கவைக்கிறது. இன்றைய பாடல்களில் ஜீவனில்லாததன் காரணமே, இதயமில்லாத கணினி இசைக்கோர்ப்பையும், வார்ப்பையும் செய்வதுதான்" என்று மோகன் என்பவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ந்து விட்டு இப்போது இப்படி சொல்வது தவறு இதே அன்னக்கிளி காலத்தில் சொல்லியிருப்பாரா?" என்று கேள்வியெழுப்புகிறார் சரவணன் என்ற நேயர்.

"இவர் ௯றுவது சரியல்ல காலத்திற்கேற்ப மக்கள் ரசனை மாறி வருகிறது. இப்போதும் நல்ல இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள் மாற்றத்தை வரவேற்போம் மண்ணின் மரபிசையும் காப்போம் இதுவே எமது நிலைப்பாடு" என்று பதிவிட்டுள்ளார் கருணாமூர்த்தி.

"காலம் பதில் சொல்லிவிட்டது. உங்கள் இசை காலத்தை தாண்டியது. பாரம்பரிய இசையில் மட்டுமே ஜீவன் உள்ளது" என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஜீவா என்ற நேயர்.

"மக்களுக்கு ஆணையிடவும் முடியாது. அறிவுரையும் கூறக்கூடாது. முடிந்தால் இவரின் இசைக்கு ஈடிணையில்லாமல் இன்றைய இளைஞர்களை ஈர்க்க முயற்சிக்கலாம்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார் மணி என்னும் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்.

"இது சரியான செயல் இல்லை!. இசை என்பது பலதரப்பட்ட மக்களின் பலவிதமான இரசனைகளை உள்ளடக்கியது!. ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கு பிடிக்கலாம்!. பாரம்பரிய இசைகளின் துல்லிதம், இயல்புகள், சிறப்புகளை மனதில் கொண்டு ராயல்டி வாங்காமல் வளர்க்க முற்படலாம்!. அதுதான் சிறந்த வழியாகும்!" என்கிறார் அழகேசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: