பா.ரஞ்சித்: ‘கீழ் வெண்மணி, இம்மானுவேல் சேகரன் குறித்து படமெடுக்க விரும்புகிறேன்‘

பா. ரஞ்சித்

அட்டகத்தி, மெட்ராஸ், காலா படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய சினிமாவுக்காக எந்த அளவுக்குப் பேசப்பட்டவரோ, அதே அளவுக்கு அவர் சினிமாவுக்கு வெளியில் பேசும் கருத்துகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் கவனிக்கப்படுபவர், விமர்சிக்கப்படுபவர்.

சென்னை வானம் என்ற பெயரில் அவர் நடத்தும் மூன்று நாள் கலை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பரபரப்பாக இருந்த பா. ரஞ்சித், அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாமென்று மறுத்துவிடுகிறார். பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து:

கே. இந்த வானம் கலைவிழா எதற்காக நடத்தப்படுகிறது, எதனை நோக்கமாகக் கொண்டது?

ப. நம்முடைய சமூகத்தில் உள்ள பல்வேறு முரணான கலைகளை நிகழ்த்திக் காட்டுவதுதான் இந்த நிகழ்வின் நோக்கம். கொண்டாட்டமான கலைகளுக்குள் சில கதையாடல்களை வைக்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம். அதற்காகத்தான் இந்த வானம் கலைத் திருவிழா.

இதை ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாகத்தான் நான் பார்க்கிறேன். உலகில் எங்கெல்லாம் கலை அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்த்தால், மாவோ, லெனின் ஆகியோரின் படைப்புகள், ரஷ்ய இலக்கியங்கள் போன்றவை கள வேலைகளாக மாறியிருக்கின்றன.

ஆஃப்ரோ - அமெரிக்கர்கள் கலைகளை தங்கள் பிரச்சனைகளைப் பேச மிகத் தீவிரமாக பயன்படுத்தினார்கள். அதில் வெற்றியும் கிடைத்தது. ஜமைக்க கலைஞர் பாப் பார்லியின் பாடல்கள் மிகப் பெரிய அரசியல் விடுதலைக்கு வழிவகுத்தன.

அதன் அடிப்படையில் நம்முடைய இந்திய சமூகத்திலும் கலைக்கும் அரசியலுக்கும் பெரிய தொடர்பு இருக்கு. அதனை வெறும் பொழுதுபோக்காக சுருக்கிவிட முடியாது. இந்த வானம் திருவிழா மூலமாக கலைகளை அரசியலுக்கு உட்பட்டு, நம்முடைய செயல்பாட்டுக்கான கருவியாக ஏன் மாற்றக்கூடாது என நினைத்தோம். அதுதான் இதன் மையம்.

பட மூலாதாரம், FACEBOOK

கே. அடிப்படையில் நீங்கள் ஒரு சினிமா கலைஞர். சினிமா ஒரு மிகப் பெரிய ஜனரஞ்சகமான கலை வடிவமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது நீங்கள் அதற்கு வெளியில் கலை சார்ந்து இயங்க விரும்புவதற்கு என்ன காரணம்?

ப. இங்கே சினிமா மட்டுமே கலை என்று பேசுவதே ஒரு பாரபட்சமான செயல். சினிமா மட்டும் மிகப்பெரிய கலையாகப் பார்க்கப்படுவது கலையின் வீழ்ச்சி என்றுதான் சொல்வேன். ஓவியம் மிகப் பெரிய, சக்திவாய்ந்த கலைவடிவம்.

கானா, கனியன் கூத்து, இருளர்கள் தங்கள் வாழ்க்கையைப் பேசும் பழங்குடியின இசை போன்றவை இங்கே இருக்கின்றன. அவ்வளவு கலைவடிவங்கள் இருக்கும்போது வெறும் சினிமாவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து மற்றவற்றையும் கவனிக்க வேண்டுமென விரும்புகிறேன்.

கே. சினிமாத் துறையைச் சேர்ந்த நீங்கள், அந்தத் துறைக்கு வெளியில் இம்மாதிரி இயங்குவதை அந்த துறையில் இருக்கும் மற்ற கலைஞர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

ப. எல்லோரும் மிகவும் ஆதரிக்கிறார்கள். சிலருக்கு என் செயல்பாடு ஒரு தீவிரமான செயல்பாடாகத் தோன்றலாம். ஆனால், இதெல்லாம் சரியான திசையில் செல்கிறது என்று உணர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அப்படி உணர்பவர்கள் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆதரவும் தெரிவிக்கிறார்கள். இந்த 'கேஸ்ட்லஸ் கலெக்டிவ்' ஆல்பத்தை வெளியிடப்போவதுகூட மிக முக்கியமான திரை ஆளுமைதான். ஆகவே எல்லோரும் ஆதரிக்கிறார்கள் என்றுதான் சொல்வேன்.

கே. நீங்கள் ஜாதி மறுப்பு தொடர்பாகவும் சினிமாவுக்கு வெளியில் கலை தொடர்பாகவும் பேசும்போது திரைத் துறையில் உங்கள் மீது வித்தியாசமான பார்வை ஏதும் படுகிறதா?

ப. சிலருக்கு வேறுபட்ட பார்வை இருக்கலாம். வெளிப்படையாகவே என்னை சாதி வெறியன் எனச் சொல்லும் வாய்ப்பு இங்கே இருக்கிறது. ஆனால், அதற்காக என் வேலைகளை நான் நிறுத்தமாட்டேன். இங்கே பிரச்சனை இருக்கிறது. அதை பேசித்தான் ஆக வேண்டும். அதைப் பேசித் தீர்க்காமல் அடுத்த கட்டத்திற்குப் போகவே முடியாது. இத்தனை நாட்களாக இந்தப் பிரச்சனையெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிச் சொல்லியே நகர்ந்துவந்துவிட்டோம். இப்போது எல்லாம் டிஜிட்டலாகியிருக்கிறது.

பட மூலாதாரம், facebook

வேறு ஒரு உலகத்தை நோக்கி நாம் நகரப் போகிறோம். அங்கேயும் இதே குப்பைகளைக் கொண்டுசெல்லக்கூடாது என நினைக்கிறேன். அதை இங்கேயே நிறுத்த வேண்டுமென நினைக்கிறேன். எனக்குப் பின்னால் வருபவர்கள் இதைப் பேசுவார்கள் என்று சொல்லிவிட்டு, எனக்குக் கிடைத்த சொகுசான வாழ்க்கையோடு நான் நகர்ந்துசெல்ல விரும்பவில்லை.

நான் வாழும்போதே இது சரிசெய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன். அதில் விமர்சனங்கள் வந்தால் அதைக் கணக்கில் கொள்வேன். ஆனால், அவதூறுகளைப் பற்றி கவலைப்பட மாட்டேன். அக்கறையும் இல்லை.

கே. நீங்கள் தொடர்ந்து பண்பாட்டுத் தளத்தில் இயங்கும்போது, அது தவிர்க்கவே முடியாமல் உங்களுக்கு ஒரு கவனத்தைக் கொடுக்கும். அந்த கவனம் உங்களை அரசியலை நோக்கித் தள்ளக்கூடும். அப்போது என்ன முடிவெடுப்பீர்கள்? எல்லா திரைக் கலைஞர்களிடமும் தவிர்க்க முடியாமல் இப்போது அரசியல் குறித்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன...

ப. பெரும்பாலும் அதை நான் விரும்புவதில்லை. ஆனால், சில இடங்களில் நான் வெளிப்படையாகவே பேசுகிறேன். அதற்கான தேவை இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால், இந்தக் கேள்விகளை என்னிடம் வந்து கேட்பதற்கான நிர்பந்தம் ஏன் ஏற்படுகிறது எனத் தெரியவில்லை.

இது போன்ற கேள்விகளை நான் தவிர்த்திருக்கிறேன். தேவையற்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. சமூகத்தின் மீது அக்கறை கொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.

சினிமாவே ஒரு அரசியல் செயல்பாடுதான். அது வெறும் பொழுதுபோக்கு அல்ல. சினிமாவில் வெளிப்படுத்தும் கருத்துகள் எம்மாதிரி விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இன்றைக்கு பத்மாவதி மாதிரியான திரைப்படம் வெளியாகும்போது, அந்தப் படம் வரக்கூடாது என திரையரங்குகளைக் கொளுத்துகிறார்கள். இருந்தாலும் திரைப்படம் வெளியாகிறது. ஆக சினிமா என்பது வெறும் சினிமா அல்ல. சமூகத்தோடு மிகவும் நெருங்கி உறவாடும், அரசியல் தன்மை கொண்ட ஒரு கருவி.

எல்லா இயக்குனர்களிடமும் அரசியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படுவதில்லை. சமூகம் குறித்த அக்கறையுடன் படம் எடுக்கும் இயக்குனர்களிடம், கலைஞர்களிடம்தான் கேட்கிறார்கள். நீங்கள் ஓட்டு அரசியலுக்கு வருவீர்களா எனத் திரும்பத் திரும்ப என்னிடம் கேட்கிறார்கள். நான் இல்லையென்று பல முறை சொல்லிவிட்டேன்.

கே. சினிமாவுக்கு வெளியில் நீங்கள் தொடர்ச்சியாக இயங்குவதால், உங்களுடைய சினிமா தொடர்பான பணிகள் பாதிக்கப்படாதா?

ப. தொய்வு இருக்கத்தான் செய்யும். சினிமா என்பது பெரிய அளவில் பணம் முதலீடு செய்யப்படும் இடம். என்னை நம்பி முதலீடு செய்ய பலர் பயப்படலாம். ஆனால், பயப்படாதவர்களும் இருக்கிறார்கள். பரியேறும் பெருமாள் படத்தை படமாக எடுக்க பயந்தார்கள். ஆனால் தமிழகத்தில் இம்மாதிரி ஒரு சீரியஸான படத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

அட்டகத்தி வெற்றிபெற்றதைப் போல பரியேறும் பெருமாளும் வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாக நான் நினைத்தேன். சமூகம் குறித்த உரையாடல்களை மிகுந்த கலைநேர்த்தியுடன் வெளிப்படுத்தும் படங்கள் எப்போதுமே ஜெயித்திருக்கின்றன. ஆகவே அதில் துணிந்து இறங்கினேன்.

காணொளிக் குறிப்பு,

"காந்தியை நான் மகாத்மாவாக பார்க்கவில்லை"- அம்பேத்கர்

அடுத்ததாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்காக தமிழில் ஒரு படத்தை இயக்குகிறேன். இந்தியில் பிர்ஸா முண்டா குறித்த ஒரு படத்தை இயக்கப்போகிறேன். இந்த வாய்ப்பு, என்னுடைய முந்தைய படங்களின் மூலமாக வந்தது.

காலா படத்தைப் பார்த்து, அது பிடித்திருந்ததால்தான் பிர்ஸா முண்டாவை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதற்குப் பிறகு தொய்வு இருக்காது என நினைக்கிறேன். சினிமாவில் நான் தொடர்ந்து வேலை செய்யவேண்டும். இல்லாவிட்டால், மற்ற வேலைகளைச் செய்ய முடியாது.

கே. பிற பணிகளில் ஈடுபடுவது பெருமளவில் நேரத்தை எடுத்துக்கொள்ளும்..

ப. நான் அதற்கேற்றபடி திட்டமிட்டுக்கொள்கிறேன். நான் தொடர்ந்து வேலை செய்துகொண்டேயிருக்கிறேன்.

கே. காலா திரைப்படம் கலைரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமென சொல்வீர்களா?

ப. நிச்சயமாக. அது மக்களிடம் பெரிய அளவில் சென்று சேர்ந்திருக்கிறது. அதிக வசூலைப் பெற்ற படங்களின் பட்டியலில் முதலில் 2.0 படத்தையும் அதற்கு அடுத்த படியாக சர்கார் படத்தையும் அதற்கு அடுத்தபடியாக காலாவைத்தான் பட்டியலிடுகிறார்கள். ஆகவே நிச்சயமாக கலைரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றபடம்தான்.

கே. உங்களது அடுத்தடுத்த படங்கள் குறித்து விரிவாகச் சொல்ல முடியுமா?

ப. அடுத்ததாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கவிருப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டேன். இந்தியில் பிர்ஸா முண்டா குறித்து இயக்குகிறேன். பிர்ஸா முண்டா வெள்ளையர் ஆதிக்கத்திற்கும் இந்திய அரச சுரண்டலுக்கும் எதிராக போராடிய ஒரு தலைவர்.

நிலவளத்தையும் நீர்வளத்தையும் காக்கப் போராடிய ஒரு தலைவர். இந்திய அளவில் அது ஒரு முக்கியமான படமாக இருக்கும். சமகாலத்திலும் மிகவும் புரிந்துகொண்டு பார்க்கக்கூடிய படமாக பிர்ஸா முண்டா இருக்கும்.

கே. பிர்ஸா முண்டா பிஹாரைச் சேர்ந்த ஆதிவாசிகளுக்கான ஒரு தலைவர். இந்தப் படத்தை இயக்க நீங்கள் எப்படி தேர்வானீர்கள்?

ப. காலா படத்தை இயக்கிக்கொண்டிருக்கும்போதே பிர்ஸா முண்டா குறித்து ஒரு நண்பரிடம் பேசினேன். அவர்தான் அந்தத் தயாரிப்பாளரிடம் இது குறித்துச் சொல்லியிருக்கிறார். அவர்களும் இம்மாதிரியான ஒரு எண்ணத்தில் நீண்ட நாட்களாக இருந்திருக்கிறார்கள்.

அப்படித்தான் இந்தத் திட்டம் உருவானது. மகா ஸ்வேதாதேவியின் காட்டின் குரல் படித்தவுடன் அதனை படமாக்க வேண்டுமென நினைத்தேன். அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது ஏன் அதைச் செய்யக்கூடாது எனத் தோன்றியது.

கே. தமிழகத்தில் இம்மாதிரி எந்தத் தலைவரைக் குறித்து படமெடுக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?

ப. அயோத்தி தாச பண்டிதரைப் பற்றி படமெடுக்க வேண்டுமென எனக்கு ஆசை. பிறகு, கீழ் வெண்மணி குறித்து ஒரு படத்தை இயக்க விரும்புகிறேன். இம்மானுவேல் சேகரனைப் பற்றி எடுக்க வேண்டுமென நினைக்கிறேன். இப்படி நிறைய ஆசைகள் இருக்கின்றன. அதற்கான காலம் வரும்போது அவற்றைச் செய்வேன் என நினைக்கிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: