ஒடுக்கப்பட்டவர்களுக்கு பரதம் கற்பிக்கும் திருநங்கை - பொன்னியின் கதை

பொன்னி

கலை அனைவருக்குமானது. அதில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கூடாது. அதனை கற்க விரும்புபவர்களுக்கு எந்த பேதமும் இல்லாமல் சமவாய்ப்பும் மேடையும் கிடைக்க வேண்டும் என்கிறார்ட் திருநங்கை பொன்னி.

சென்னை என்றால் நம் மனதில் சில காட்சிகள் விரியும்தானே வானுயர்ந்த கட்டங்கள், பளபளப்பான மால்கள் என… அது எதுவும் இல்லாமல் சென்னைவாசிகள் மட்டுமே அறிந்த சென்னை ஒன்று இருக்கிறது. வடசென்னை. உழைக்கும் மக்கள் வசிக்கும் சென்னை.

விளிம்புநிலை மக்கள் வசிக்கும் சென்னை. அந்த சென்னையில் அந்த மக்களுக்கு மேட்டுக்குடி மக்களின் கலையாக பார்க்கப்படும் பரதத்தை கற்று தருகிறார் திருநங்கை பொன்னி.

குப்பைமேடும், பரதக் கலையும்

வடசென்னை கொடுங்கையூரில் ஒரு பிரம்மாண்ட குப்பைமேடு இருக்கிறது. நவீனத்தின் அனைத்து குப்பைகளும் அங்குதான் கொட்டப்படுகின்றன.

பொன்னி தம் நாட்டியப்பள்ளிக்கான வழி சொல்லும் போது அதனைத்தான் அடையாளமாகக் குறிப்பிட்டார்.

"கொடுங்கையூர் குப்பை மேட்டுக்கு வந்துட்டு கூப்பிடுங்க" என்றார்.

ஆனால், இந்த அடையாளத்தை மாற்றப் போராடுவதாகக் கூறுகிறார் பொன்னி.

மூட்டைதூக்கி பரதம்

பொன்னியின் சொந்த ஊர் தூத்துக்குடி. சிறுவயதில் பரதம் பயில விருப்பப்பட்டபோது, முதலில் குடும்பத்தினர் யாரும் ஏற்கவில்லை என்கிறார்.

"நான் வீட்டில் கூறியபோது. முதலில் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆம்பள பிள்ளைக்கு எதுக்கு பரதம் என்றார்கள். நான் அவர்கள் துணை இல்லாமல் நேரடியாக ஆசிரியர்களிடம் சென்று எனக்கு பரதம் கற்றுத் தாருங்கள் என்றேன். ஆனால், அவர்களும் முதலில் மறுக்கவே செய்தார்கள்.

"பெற்றோர் இல்லாம தனியா வந்துருக்க, அதெல்லாம் கத்துத் தர முடியாது," என்றார்கள். நான் வைராக்கியமாக இருந்தேன். எனக்கு விருப்பம் இருக்கிறது. நான் பணம் செலுத்தப் போகிறேன். இதற்கு ஏன் பெற்றோர் வரவேண்டும் என வீம்பாக இருந்தேன். நான் விடாப்பிடியாக இருப்பதைப் பார்த்து, கடைசியில் அவர்கள் சம்மதித்தார்கள்" என தாம் பரதம் கற்கத் தொடங்கிய நிகழ்வை விவரிக்கிறார் பொன்னி.

பள்ளிக் கட்டணம், பரதம் என அனைத்திற்கும் தாம் சுயமாக பணம் சம்பாரித்தே கட்டணம் செலுத்தி இருக்கிறார்.

அவர், "அந்த சமயத்தில்தான் எனக்குள் இருக்கும் பெண்மையை உணரத் தொடங்கினேன். என் நடையின் நளினம் மாறி இருந்தது. ஆனால், இங்கு அனைத்திற்கும் பணம் வேண்டுமே மூட்டை தூக்கும் கூலியாக வேலை செய்தேன். அங்கு உடல் அசைவுகளைப் பார்த்துவிட்டு என்னை முதலில் கிண்டல் செய்வார்கள். பின், என் கனவுகள், என் நிலை அனைத்தையும் புரிந்து கொண்டு அவர்களே எனக்கு அரணாக இருந்தார்கள்," என்கிறார் பொன்னி.

கணிதம் துணை கொண்டு

பள்ளியிலும் சகமாணவர்கள் தமக்கு உதவியாகவே இருந்ததாகவே தெரிவிக்கிறார் பொன்னி.

"எனக்கு பள்ளி காலங்களில் கணிதம் நன்றாக வரும். சக மாணவர்கள் கணிதத்தில் எந்த சந்தேகமென்றாலும் என்னிடம்தான் கேட்பார்கள். அதனால் என்னிடம் அன்பாக இருந்தார்கள். வேறு யார் கிண்டல் செய்தாலும் இவர்கள் சண்டைக்கு போவார்கள்… கணிதம்தான் எனக்கு அவமானங்களை கடக்க உதவியது," என்கிறார் பொன்னி

அம்மாவின் அரவணைப்பு

அம்மா தனக்கு உறுதுணையாக இருந்ததாக குறிப்பிடுகிறார் பொன்னி.

"என்னிடமுள்ள பெண் தன்மையை அம்மா உணர்ந்தபோது, எனக்கு எந்த வலிகளும் தராமல் சர்வ சாதாரணமாகக் கடந்து சென்றார். "எனக்கு ஒரு பிள்ளை ஊனமா பிறந்திருந்த நான் என்ன தூக்கியா போட்டிருப்பேன்? நீயும் என் பிள்ளைதானே," என வாரி அரவணைத்துக் கொண்டார். அவர் மட்டும் இல்லை என்றால், என் வாழ்க்கை வேறுவிதமாகப் போயிருக்கும்," என்கிறார் பொன்னி.

சென்னை அளித்த காயங்கள்

பள்ளிக் காலம், பரதம் என தூத்துக்குடி காலம் பெரிதாக காயங்கள் ஏதுமின்றி சென்று இருந்தாலும், சென்னை அவரை இனிதே வரவேற்கவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சந்தித்து இருக்கிறார்.

சென்னை யாரையும் சமமாக நடத்துவதில்லை என்கிறார் பொன்னி.

"இங்கு வந்த பின்தான் சுடிதார் அணிய தொடங்கினேன். என்னை மிக மோசமாக வக்கிரமாக கேலி செய்தார்கள். இதுவரை நான் எதிர்கொள்ளாத அனுபவம். என்ன செய்வதென்று புரியவில்லை. இதனை எல்லாம் காதில் வாங்க வேண்டாம் முன்னேறிச் செல்வோம் என சென்றேன். பரதம் அரங்கேற்ற கோயிலில் வாய்ப்பு கேட்டேன். மறுத்தார்கள். திரும்பவும் கேட்டேன். மறுத்தார்கள். மீண்டும் மீண்டும் கேட்டேன். இறுதியில் ஒப்புக் கொண்டார்கள். பத்துக்கு பத்து அளவில் மேடை தந்தார்கள். அந்த சிறிய இடத்தில்தான் ஆடித்தான் என்னை நிரூபித்தேன்" என்கிறார்.

இந்த கலை யாருக்கெல்லாம் புறக்கணிக்கப்படுகிறதோ, மறுக்கப்படுகிறதோ அவர்களுக்கு இந்த கலையை சொல்லி தர வேண்டும் என அப்போது முடிவு செய்தேன் என்று வலிகள் ஒரு பெருங்கனவுக்கு வித்திட்ட கதையை விவரிக்கிறார் பொன்னி.

"முதலில் யாரும் நாட்டியப் பள்ளியில் வந்து சேரவில்லை.வீடு வீடாக சென்று பிள்ளைகளை நாட்டிய பள்ளிக்கு அனுப்புங்கள் என்பேன். "குப்பை பொறுக்க போனாலாவது ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பாரிக்கலாம். பரதம் பயின்று என்ன செய்வது?" என்பார்கள். இன்னும் சிலர் தம் பிள்ளைகளை இங்கு சேர்க்க வருவார்கள். ஆனால், திருநங்கையான நான் கற்பிப்பதை பார்த்துவிட்டு திரும்ப சென்று விடுவார்கள். எல்லாவிதமான மனிதர்களையும் சந்தித்தோம். அனைத்து அவமானங்களையும் எதிர்கொண்டோம். இப்போது இங்கு முப்பது மாணவர்கள் வரை படிக்கிறார்கள்" என்று தம் கனவுகளையெல்லாம் நிஜமாக்க அவர் சந்தித்த வேதனைகளை விவரிக்கிறார்.

திறக்கப்படாத கதவுகள்

இப்போதும் தமக்கு, தம் மாணவர்களுக்கு மேடைகள் மறுக்கப்படுவதாக தெரிவிக்கிறார் பொன்னி.

"கலை அனைவருக்கும் பொதுவானது, சமமானது. அதில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கூடாது. அந்த சமத்துவத்தை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறேன்," என்கிறார் பொன்னி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்