டெல்லி செங்கோட்டை: வரலாற்றின் பிரம்மாண்ட சுவாரஸ்யங்கள்

  • அபர்ணா ராமமூத்தி
  • பிபிசி தமிழ்
பழைய டெல்லியில் இருக்கும் செங்கோட்டை
படக்குறிப்பு,

பழைய டெல்லியில் இருக்கும் செங்கோட்டை

டெல்லி செங்கோட்டை - இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோதி செங்கோட்டையில் கொடி ஏற்றினார்.

செங்கோட்டைக்கு என்று ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், முதன்முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது இங்குதான். சுதந்திரத்தை குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் கொடியேற்றி வைத்தார்.

படக்குறிப்பு,

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுவார்

400 ஆண்டு கால வரலாறு

செங்கோட்டையானது, டெல்லி மாநகருக்கு ஷாஜகான் அளித்த பரிசு என்று குறிப்பிடப்படுகிறது. முகலாய ஆட்சிக் காலத்தின் அரசியலையும், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் இது பிரதிபலிக்கிறது.

முதலில் முகலாயர்களின் தலைநகராக ஆக்ராதான் இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக ஆக்ராவில் இருந்து ஷாஜகானாபாத்துக்கு (தற்போதைய பழைய டெல்லி) 1638ஆம் ஆண்டு தலைநகரை மாற்றினார் மன்னர் ஷாஜகான்.

'முகலாய சாம்ராஜ்யத்தின் பயணம்' என்ற தனது புத்தகத்தில் இதுகுறித்து எழுதியிருக்கிறார் ஐரோப்பிய பயணி ப்ரான்காயிஸ் பெர்னியர். அதில், ஆக்ராவில் தாங்க முடியாத வெப்பம் நிலவியதால், டெல்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாம்ராஜ்யத்தை கட்டுப்படுத்த டெல்லி பொருத்தமாக இருந்ததால், ஆக்ராவில் இருந்து தலைநகர் மாற்றப்பட்டது என்ற காரணமும் கூறப்படுகிறது.

மதில்களும், மாளிகைகளும்

1639 ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி செங்கோட்டை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதை கட்டி முடிக்க 9 ஆண்டுகாலம் ஆனது. அப்போதைய மதிப்பிலேயே இதற்காக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதில் பெரும்பாலான செலவு, மாளிகை கட்டவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிவப்பு நிற கற்கல் பயன்படுத்தி கட்டப்பட்டதாலே, இது செங்கோட்டை என்று பெயரிடப்பட்டது.

கலை வடிவம் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளின் உச்சத்தை செங்கோட்டை நமக்கு காண்பிக்கிறது என்று பலராலும் புகழப்படும் இக்கட்டடம் பாரசீக, ஐரோப்பிய மற்றும் இந்திய கலைவடிவங்களின் தொகுப்பில் கட்டப்பட்டுள்ளது.

யமுனை நதியின் மேற்கு கரையில் இருக்கும் செங்கோட்டை, மேற்கு மற்றும் கிழக்கில் நீண்டு செல்கிறது. செங்கோட்டையின் மதில் சுவர்கள், 2.41 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதாகும்.

இதன் பிரதான கட்டட அமைப்பாளர்கள் இரண்டு பேர். மற்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் ஹமித் மற்றும் அஹமத் ஆகிய இருவருமே இதனை கட்டும் வேலையில் முக்கிய பங்காற்றியவர்கள். இதற்காக பின்னாளில் இருவருக்கும் முகலாய மன்னரால் தக்க சன்மானம் வழங்கப்பட்டது.

செங்கோட்டைக்கு இரண்டு பிரதான நுழைவாயில்கள் உள்ளன. ஒன்று லாகூர் நுழைவாயில் மற்றொன்று டெல்லி நுழைவாயில்.

லாகூர் நுழைவுவாயில்

படக்குறிப்பு,

முக்கிய பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் மனுதாரர்களால் லாகூர் நுழைவாயில் பயன்படுத்தப்பட்டது

செங்கோட்டையின் மிக முக்கியமான நுழைவாயில் இதுதான். முக்கிய பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் மனுதாரர்களால் அப்போது இந்த நுழைவாயில் பயன்படுத்தப்பட்டது.

இரண்டாம் அக்பர் ஆட்சிகாலத்தில் செங்கோட்டையை பார்வையிட வந்த பிஷப் ஹீபர், "நான் பார்த்ததிலேயே சிறந்த நுழைவாயில் மற்றும் நடைக்கூடம் இதுதான்" என்று இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஔரங்கசிப் காலகட்டத்தின் போது (1658-1707), அனைத்து பிரதான நுழைவுவாயில்களுக்கு முன்பும் 10.5 மீட்டர் உயரம் கொண்ட பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டன.

கோட்டையை மணமகளாக்கி, அந்த முகத்திற்கு முக்காடு அணிந்திருக்கிறாய் என்று ஆக்ராவில் சிறையில் இருந்த ஷாஜகான், தன் மகன் ஔரங்கசிப்பிற்கு, இந்த பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டது குறித்து கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

டெல்லி நுழைவுவாயில்

ஷாஜகானாபாத்தின் தெற்கு வாயிலே இந்த டெல்லி நுழைவாயில். வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்காக ஜம்மா மசூதிக்கு செல்ல மன்னரால் இது பயன்படுத்தப்பட்டது. ஆனால், 1857க்கு பின், செங்கோட்டையை பிரிட்டன் கைபற்றிய பிறகு இந்த நுழைவாயில் பொதுமக்களுக்கு மூடப்பட்டது.

டெல்லி நுழைவாயிலின் இரு பக்கங்களும் யானைகளின் சிலை அமைந்திருந்தது. ஆனால், ஔரங்கசீப்பின் மத நம்பிக்கைகள்படி, சிலை வைத்திருப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதனால் அதனை இடிக்க உத்தரவிட்டார்.

தற்போது அங்கு காணப்படும் யானை சிலைகள், 1903ல் லார்ட் கர்சனால் எழுப்பப்பட்டதாகும்.

சூறையாடப்பட்ட செங்கோட்டை

நாம் வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தோமேயானால், செங்கோட்டை பலரால் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

யார் கொள்ளையடித்தார்கள்?

1739ஆம் ஆண்டு இரானிய ஆட்சியாளர்களில் ஒருவரான நதிர்ஷா, கோஹினூர் வைரம் பதித்த மயில் சிம்மாசனத்தை இங்கிருந்து கொள்ளையடித்து சென்றார்.

பின்னர் 18ஆம் நூற்றாண்டில், மராத்தியர்களாலும், ரொஹிலாக்களாலும் (உருது மொழி பேசக்கூடியவர்கள்) முகலாய கோட்டை கொள்ளையடிக்கப்பட்டது.

இறுதியாக 1857ஆம் ஆண்டு, கடைசி முகலாய மன்னர் பகதுர் ஷா சஃபரிடம் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். பிரிட்டன் படையினரால், செங்கோட்டை கட்டடத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

அவர்களின் தலைமையகமாக செங்கோட்டை மாற்றப்பட்டது. அங்குள்ள கட்டடங்கள் மற்றும் மாளிகைகள் ராணுவ முகாம்களாக செயல்பட்டன. சமகால ஆவணங்களின்படி, சுமார் 80 சதவீத கோட்டை கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ராணுவ குடியிருப்புக்காக பயன்படுத்தப்பட்டது.

பிரம்மாண்டமான செங்கோட்டையில் உள்ள மற்ற இடங்களை பற்றி பார்க்கலாம்.

நவுபுத் கானா (இசை மன்றம்)

செங்கோட்டையின் உள்நுழைந்தவுடன் இதனை நீங்கள் பார்க்க முடியும். இதன் மேல் தளம் இசை மன்றமாக இயங்கியது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரச வம்சத்தை சார்ந்தவர்கள் வரும்போது அவர்களை வரவேற்க மேளம் அடித்து இசை இசைக்கப்படும்.

தற்போது இது 'இந்திய போர் நினைவு அருங்காட்சியம்' ஆக மாற்றப்பட்டுள்ளது.

திவான்-இ-அம் (பொது மன்றம்)

படக்குறிப்பு,

திவான்-இ-அம்

திவான்- இ-அம் உடைய சிறப்பம்சம் அதில் இருக்கும் பளிங்கு அரியணையும், பின் சுவரும். 1648, 16 ஏப்ரல் அன்று செங்கோட்டையை ஷாஜகான் திறந்து வைத்தபோது முதல் மன்றத்தை இங்குதான் நடத்தினார்.

இங்கு அமர்ந்தே பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டு விசாரிக்கப்பட்டது.

திவான்-இ-கஸ் (சிறப்பு மன்றம்)

படக்குறிப்பு,

திவான்-இ-கஸ்

அழகு நிறைந்த பிரம்மாண்டத்திற்கு பெயர் போனது இந்த கட்டடம். இங்குதான் முக்கிய மற்றும் ரகசிய அரசு விவகாரங்களை அதிகாரிகளுடன் மற்றும் பிற நாட்டு தூதர்களுடன் மன்னர் விவாதிப்பார். இக்கட்டடத்தின் நடுவில் பளிங்கு மேடை ஒன்று இருக்கும். அலங்கரிக்கப்பட்ட அந்த மேடையில்தான் பிரபலமான மயில் அரியணை இருந்தது. 1739ல் இந்த அரியணை பெர்ஸியாவின் நதிர் ஷாவால் எடுத்து செல்லப்பட்டது.

ஹம்மாம் (குளியலறை)

திவான்-இ-கஸ் கட்டடத்தின் வடக்கே இது அமைந்துள்ளது. இதில் மூன்று முக்கிய அறைகள் இருக்கும். ஒன்று குளிர் தண்ணீரில் குளிக்கும் அறை, வெந்நீரில் குளிக்கும் அறை மற்றும் ஆடை மாற்றும் அறை. பளிங்கு கற்கள் மற்றும் மலர் வடிவத்திலான இரண்டாம் ரக ஆபாரண கற்கள் வைத்து இந்த அறைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

மோட்டி மஸ்ஜித்

படக்குறிப்பு,

மோட்டி மஸ்ஜித்

மோட்டி மஸ்ஜித் என்பது பளிங்கால் கட்டப்பட்ட சிறிய மசூதியாகும். மன்னர் ஔரங்கசிப்பால் அவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. அரச குடும்பத்து பெண்களுக்கு இதில் தனி வழி இருந்தது.

கஸ் மகால் (சிறப்பு மாளிகை)

இதுதான் மன்னரின் குடியிருப்பு பகுதி. இதில் மூன்று பகுதிகள் இருக்கும். இதில் ஒரு அறை மன்னர் தனியாக வழிபாடு செய்வதற்கும், நடு அறையானது உறங்குவதற்கும், மூன்றாவது அறையானது ஆடை மாற்றும் அறையாகவும் பயன்படுத்தப்பட்டது. மலர் வடிவிலான ஓவியங்களால் இவை அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

ரங்க் மஹால் (வண்ணமயமான மாளிகை)

இந்த பெரும் கட்டடம் மூத்த அரசிகளுக்காக கட்டப்பட்டது. அழகான வண்ணமயமான உள்அறை அலங்காரங்களால், இது ரங்க் மஹால் என்று அழைக்கப்பட்டது.

மும்தாஜ் மஹால்

முதலில் ஜஹனரா பேகம் மேன்ஷன் என்று அழைக்கப்பட்ட இது, அரச அந்தப்புரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தற்போது, முகலாய சகாப்தத்தின் பொருட்களை வைத்திருக்கும் அருங்காட்சியமாக விளங்குகிறது.

பழைய டெல்லியின் இறைச்சலுக்கு இடையே பெரும் சகாப்தத்தின் வரலாற்றை ஏந்தி நிற்கும் செங்கோட்டையின் வரலாற்றை இந்த வார்த்தைகளில் அல்லது ஒரு கட்டுரையில் முழுவதுமாக கூறிவிட முடியாது.

சற்று அமைதியாக நின்று கோட்டையை உயர்ந்து பார்த்தால், இந்திய மன்னர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அனுபவித்த சுகதுக்கங்களையும் நம் கண் முன் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: