வந்தா ராஜாவாதான் வருவேன் - சினிமா விமர்சனம்

2013ஆம் ஆண்டில் தெலுங்கில் 'அத்தாரிண்டிகி தாரேதி (அத்தை வீட்டுக்கு வழியென்ன?)' என்ற படம் வெளியானது. பவன் கல்யாண், சமந்தா, ப்ரணீதா நடித்த இந்தப் படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று. அந்தப் படத்தின் ரீ மேக்தான், 'வந்தா ராஜாவாதான் வருவேன்.'

திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன்
நடிகர்கள் சிலம்பரசன், கேதரீன் தெரசா, மேகா ஆகாஷ், பிரபு, ரம்யா கிருஷ்ணன், சுமன், நாசர், ரோபோ ஷங்கர், யோகி பாபு
இசை ஹிப் ஹாப் தமிழா
இயக்கம் சுந்தர். சி.

ஸ்பெயினில் மிகப் பெரிய பணக்கார குழுமமான ஆதித்யா குழுமத்தின் உரிமையாளரான பெரியவர் (நாசர்), தன் மகள் நந்தினி (ரம்யா கிருஷ்ணன்) செய்துகொண்ட காதல் திருமணம் பிடிக்காமல் அவளை வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மகளைச் சந்திக்க வேண்டும் என விரும்புகிறார். அதைச் செய்வதற்காக ஸ்பெயினிலிருந்து புறப்பட்டு இந்தியா வருகிறார் பேரன் ஆதித்யா (சிலம்பரசன்).

அத்தை நந்தினி வீட்டின் ஓட்டுனராக ராஜா என்ற பெயரில் வேலைக்குச் சேர்கிறார். அங்கு, நந்தினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறார்.

படத்தின் காப்புரிமை Twitter

நந்தினியின் மகளையும் (மேகா ஆகாஷ்) காதலிக்கிறார். நந்தினியும் அவரது தந்தை குடும்பமும் ஒன்று சேர்ந்ததா, ஆதித்யாவின் காதல் நிறைவேறியதா என்பது மீதிக் கதை.

அத்தையின் குடும்பம் பிரிந்துவிட, அதைச் சேர்த்து வைக்க வரும் கதாநாயகன் அத்தையின் மகளையே காதலிக்கும் கதை, சிங்காரவேலன் முதல் எத்தனை படங்களில் வந்துவிட்டது?

இருந்தபோதும், தனது பிராண்ட் காமெடி, இரட்டை கதாநாயகிகள், இடைவேளைக்கு முன்பு ஒரு காமெடியன், இடைவேளைக்குப் பின்பு ஒரு காமெடியன் என பாதுகாப்பான களத்தில் விளையாடியிருக்கிறார் சுந்தர்.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு, சிலம்பரசன் தனி கதாநாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். தன்னுடைய பழைய பாணி பஞ்ச் வசனங்களுக்குத் திரும்பியிருக்கும் சிம்பு, நடனக் காட்சிகளில் ரொம்பவுமே சிரமப்படுகிறார். அவர் அழும் காட்சிகள் பார்ப்பவர்களுக்கும் சிரமமாக இருக்கிறது. மற்றபடி ஓகே.

கேத்தரீன் தெரசா, மேகா ஆகாஷ் என இரு நாயகிகள். இதில் கேத்தரீன் தெரசாவுக்கு பெரிய வாய்ப்பு இல்லை. பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமான மேகா ஆகாஷிற்கு இந்தப் படம் இன்னுமொரு நல்ல அறிமுகம்.

முதல் பாதியில் வரும் ரோபோ சங்கரின் காமெடிகள் புன்னகையை மட்டுமே ஏற்படுத்தும் நிலையில், பிற்பாதியில் வரும் யோகிபாபு சற்று கலகலப்பை ஏற்படுத்துகிறார்.

ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என எல்லா அம்சங்களையும் வைத்து படத்தை நகர்த்த நினைத்திருக்கிறார் சுந்தர். சி. ஆனால், பல காட்சிகள் மிகப் பழையனவாக இருக்கின்றன.

அடுத்து வரும் காட்சிகளை எளிதாக யூகிக்க முடிகிறது. பிற்பாதியில் ஒரு சில சிறிய சம்பவங்கள் நீண்ட நேரம் நடக்கின்றன. இதனால், பெரும் சோர்வு ஏற்படுகிறது.

படத்தில் வரும் பாடல்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். மொத்தமுள்ள ஆறு பாடல்களில் 'பட்ட மரங்கள்' பாடல் மட்டுமே திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றுகிறது.

சிலம்பரசனுக்கு இது ஒரு come-back திரைப்படம். சுந்தர். சி. ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமளிக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்