லீலா சந்தோஷ்: பழங்குடி பெண் செயற்பாட்டாளர் திரைப்பட இயக்குநரான கதை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“பழங்குடிகள் தீயவர்கள் அல்ல” - கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர் லீலா சந்தோஷ்

சுற்றி மலை, சலசலக்கும் ஓடை இதற்கு நடுவில் இருக்கின்றன சில குடில்கள். ஒரு சமூகத்தின் கனவையும் அதற்கான திட்டங்களையும் அங்கிருந்துதான் வகுத்து கொண்டிருக்கிறார் லீலா சந்தோஷ்.

தென் இந்தியாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர் லீலா சந்தோஷ்.

லீலா சந்தோஷ் மலையாள திரைப்பட இயக்குநர். சில ஆவணப்படங்களை இயக்கி இருக்கிறார். கம்மாட்டிப்படம், தமிழில் மரியான் ஆகிய திரைப்படங்களில் நடித்த விநாயகன் கதாநாயகனாக நடிக்கும் 'கரின்தண்டன்' திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

கேரள மாநிலம் நடுவயல் பகுதியில் தன் குடும்பத்துடன் அவர் வசித்து வருகிறார் லீலா.

'ஒரு கனவின் கனவு'

உங்களது இந்த முயற்சியை எப்படி விவரிப்பது என்று கேட்டால், அதனை 'ஒரு கனவின் கனவு' என்கிறார்.

Image caption லீலா சந்தோஷ்

அதனை அவரே விவரிக்கிறார், "நான் உட்பட இந்தப் பகுதியில் வசிப்பது பெரும்பாலும் பனியா பழங்குடியினர்தான். கல்வி என்பதே ஏதோ ஆடம்பர பொருளாக எங்களுக்கு இருந்தது. அந்த சமயத்தில்தான் இங்கு செயற்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குநர் கெ.ஜெ.பேபி வந்தார். ஒரு மாற்று பள்ளி கூடத்தை தொடங்கினார். அந்த புள்ளியிலிருந்து அனைத்தும் மாற தொடங்கியது" என்கிறார்.

அவர், "கல்வியை தாண்டி கலையை வளர்த்தெடுத்தார் பேபி. அவர் ஊடாக எங்களுக்கு வேறொரு உலகின் தரிசனம் கிடைத்தது. திரைப்படங்கள் திரையிட்டார். திரைப்படமெனும் கலை வடிவம் என்னை ஈர்த்தது. நானும் சிறு சிறு படங்கள் எடுக்க தொடங்கினேன்." என்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் பனியா மக்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து அவர் இயக்கிய ஆவணப்படமான 'நிழலுகள் நஷ்டபெட்டுன்ன கோதரபூமி' அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பல விருதுகளையும் அவருக்கு வாங்கி தந்தது.

"எங்கள் நிலம், எங்கள் பண்பாடு ஆகியவற்றை வெளி உலகுக்கு புரியும் வண்ணம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதன் வடிவம்தான் இந்த ஆவணப்படம்" என்கிறார்.

'ஏன் இந்த திரைப்படம்?'

'கரின்தண்டன்' திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது என்பதை நம்மிடம் விவரித்தார்.

அவர், "கரிந்தண்டன் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இனக்குழு தலைவர். இந்த பகுதி பனியா மக்களை அவரே வழிநடத்தினார். வயநாடு மலை பகுதிக்கு சாலை வருவதற்கு அவர்தான் காரணம். ஆனால், அவரை குறித்து பேசுபவர்கள், விவரிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவியவராகவே அவரை சித்தரிக்கின்றனர். அந்த பிம்பத்தை உடைக்கதான் நானே அவர் குறித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டேன். விநாயகனும் இதுபோன்ற கதையை தேடிக் கொண்டிருந்ததால், அவரும் உடனே நடிக்க சம்மதித்தார்." என்கிறார்.

மேலும் அவர், "எப்போதும் திரைப்படங்களில் பழங்குடிகள் என்றால் திருடர்கள், முரடர்கள், நாகரிகமற்றவர்கள் என்பதாகவே சித்தரிக்கப்படுகின்றனர். அது கொஞ்சம்கூட உண்மையில்லை. இந்த காட்டின் ஆன்மா நாங்கள். இந்த உலகம் எங்களுக்கானது மட்டும்தான் என்று நாங்கள் எப்போதும் சிந்தித்ததில்லை. ஆனால், எங்களைப் பற்றி படம் எடுப்பவர்கள் இது எதையும் கருத்தில் கொள்வதில்லை. இதுதான் என்னை பாதித்தது. இதனால்தான் எங்கள் வாழ்வை நானே திரைப்படம் எடுக்க தொடங்கினேன்." என்று விவரிக்கிறார்.

'குழந்தைகளின் உலகம்'

இப்போது கனவு பள்ளியிலும் முதன்மையான தன்னார்வலராக இருக்கிறார்.

"முன்பு நூற்றுக்கணக்கான குழந்தைகள் இந்த கனவு பள்ளியில் படித்தார்கள். ஆனால், நடுவில் சில காரணங்களால் கனவு பள்ளி இயங்காமல் போய்விட்டது. இப்போது மீண்டும் கனவுக்கு உயிர் கொடுத்துவிட்டோம். குழந்தைகளின் ஆளுமையை கலையின் மூலம் வளர்த்தெடுப்பதே எங்கள் நோக்கம்." என்கிறார்.

லீலாவின் கணவர் சந்தோஷ். இவர் லீலாவுடன் கனவு பள்ளியில் படித்தவர். தற்காப்பு கலையை மாணவர்களுக்கு கற்று தந்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :