தடம் - சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்: தடம் படத்தின் காப்புரிமை Twittter
திரைப்படம் தடம்
நடிகர்கள் அருண் விஜய், தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஃபெப்சி விஜயன், யோகி பாபு, ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால்
ஒளிப்பதிவு கோபிநாத்
இசை அருண் ராஜ்
இயக்கம் மகிழ் திருமேனி

'தடையறத் தாக்க' படத்திற்குப் பிறகு, இயக்குநர் மகிழ் திருமேனியும் அருண் விஜயும் இணைந்திருக்கும் இரண்டாவது படம்.

ஆள்மாறாட்டத்தால், ஒருவர் செய்த தவறு அதேபோன்ற தோற்றம் கொண்ட மற்றொருவரின் மீது சுமத்தப்படுவதை சுற்றிப் பின்னப்பட்ட கதைகள் பல வெளியாகியிருந்தாலும் இந்த படத்தில் அதைச் சொல்லியிருக்கும் விதத்தில் தனித்து நிற்கிறார் மகிழ் திருமேனி. கவின் ஒரு கட்டடப் பொறியாளர். ஒரு நிறுவனத்தில் பணியாற்றியபடி தனியாகவும் தொழில் செய்ய ஆரம்பிக்கும் இளைஞன். தீபிகா என்ற பெண்ணைக் காதலிக்கிறான். கவினைப் போலவே தோற்றம் கொண்ட எழில் ஒரு திருடன். மற்றொரு திருடனான சுருளியுடன் சேர்ந்து திருட்டு வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறான். எழிலுக்கு சூதாடும் பழக்கமும் உண்டு.

இந்தத் தருணத்தில் ஆகாஷ் என்ற இளைஞன் கொல்லப்படுகிறான். அவனைக் கொன்றதாக எழில் கைது செய்யப்படுகிறான்.

கொலை நடந்த வீட்டிலிருந்து எழில் வெளியேறும் புகைப்பட காட்சியும் கிடைக்கிறது. ஆனால், அதே தோற்றமுடைய கவினும் காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட, பிரச்சனை சிக்கலாகிறது.

இதனை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி

படத்தின் காப்புரிமை Twitter

கோபாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே எழில் மீது கோபம். அதனால், எழிலை இந்த வழக்கில் சிக்கவைக்க நினைக்கிறார். அவருக்குக் கீழே பணியாற்றும் விசாரணை அதிகாரியான மலர்விழி, இதில் மிக ஆர்வத்துடன் துப்புதுலக்குகிறாள். ஆனால், யார் கொலை செய்தது என்பதை கடைசிவரை கண்டுபிடிக்க முடிவதில்லை.

இயக்குனர் மகிழ் திருமேனி, படத்தின் கதாநாயகன் அருண் விஜய் ஆகிய இருவருக்குமே இது மிக முக்கியமான திரைப்படம். வழக்கமான ஒரு 'கொலைசெய்தது யார்?' என்ற மர்மத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதைதான். ஆனால், அந்தக் கதைக்குள் ஒரே தோற்றமுள்ள இரட்டையரால் ஏற்படும் குழப்பத்தையும் திணித்து, படத்தின் துவக்கம் முதல் இறுதிவரை ஒரே மாதிரியான வேகத்தில் படத்தை எடுத்துச் செல்கிறார் மகிழ்.

ஆனால், சம்பவங்களை முன்னும் பின்னுமாக கோர்த்திருப்பதால் படத்தை கூர்மையாகக் கவனிக்க வேண்டியிருப்பது சில சமயங்களில் அயற்சியை ஏற்படுத்துகிறது. ஆனால், தடையறத் தாக்க படத்திலும் இதே போலவே இருப்பதால், அதனை இயக்குநரின் பாணியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

படம் துவங்கி வெகு நேரத்திற்குப் பிறகே பிரதானமான பிரச்சனைக்குள் நுழைகிறது கதை. இதனால், மிக மெதுவாக நகரும் உணர்வை திரைக்கதை ஏற்படுத்துகிறது. அதேபோல, சோனியா அகர்வாலின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர்கள். ஆனால், படத்தின் பிற்பாதியில் உள்ள விறுவிறுப்பு இவற்றையெல்லாம் சரிக்கட்டிவிடுகிறது.

படத்தின் காப்புரிமை Twitter

இந்த சின்னச் சின்ன பிரச்சனைகளை விட்டுவிட்டால் இந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக இந்தப் படத்தை நிச்சயமாகச் சொல்லலாம். ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர் வேடத்தில், பெரிய வித்தியாசம் காட்ட முடியாத நிலையில், வெவ்வேறு நபராக நடிப்பது மிகக் கடினம். அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் அருண் விஜய். அவரது திரைவாழ்வை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படமாகவும் இதைச் சொல்லலாம்.

படத்தில் தான்யா, வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட் என மூன்று கதாநாயகிகள் இருந்தாலும் காவல்துறை துணை ஆய்வாளராகவரும் வித்யா பிரதீப்பிற்கே கூடுதல் வாய்ப்பு. இருந்தபோதும் கிடைத்த சிறிய நேரத்தில் தான்யாவும் ஸ்மிருதியும் ஸ்கோர் செய்கின்றனர். யோகி பாபு இருந்தாலும் பெரிதாக காமெடிக்கு வாய்ப்பில்லை. ஆனால், சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் புன்னகைக்க வைக்கிறார்.

இந்தப் படத்தில் சிறு சிறு பாத்திரங்களில் வருபவர்கள்கூட மிகச் சிறப்பாக நடித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. குறிப்பாக காவலராக வருபவர்கள், தடயவியல் துறை அதிகாரி போன்ற பாத்திரங்களில் வரும் பெயர் தெரியாதவர்கள் அசத்துகிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பாளர் ஆகியோர் இயக்குநருக்கு இணையாக பாராட்டத்தக்கவர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்