பெண்களின் மார்பகங்கள் குறித்த கதைகளை இன்ஸ்டாகிராமில் வரையும் ஓவியர்
- கீதா பாண்டே
- பிபிசி

பட மூலாதாரம், Indu Harikumar
எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலான ஆண்கள் மார்பகங்கள் மீது பைத்தியமாக இருப்பது குறித்து கூறுவார்கள்.
ஆனால், பல பெண்களுமே தங்கள் மார்பகங்கள் மீது ஆசையோடு இருப்பதாக தெரிவிக்கிறார் கலைஞர் இந்து ஹரிகுமார்.
கடந்த இரு மாதங்களாக ஐடென்டிட்டி (Identitty) என்ற கலைத்திட்டம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் இந்து.
பட மூலாதாரம், Indu Harikumar
"ஒரு ஆண்டிற்கு முன்பாக, இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் மார்பகங்கள் குறித்து பேச ஆரம்பித்தோம். என்னுடன் பேசிக் கொண்டிருந்த பெண், அவரது மார்பகங்கள் பெரிதாக இருப்பது குறித்தும், ஆண்கள் ஒரு மாதிரி பார்ப்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு நான், என் மார்பகங்கள் சிறிதாக இருப்பது குறித்து கவலைப்பட்டேன்," என்று அவர் நினைவுக் கூர்கிறார்.
எங்கள் அனுபவங்கள் வேறு வேறாக இருந்தாலும், இறுதியில் ஒரே புள்ளியில்தான் முடிந்தது. உடனே இது குறித்து ஏதேனும் ஒரு ப்ராஜெக்ட் செய்யலாமா என்று கேட்டதற்கு அவர் ஒப்புக் கொண்டார்.
பட மூலாதாரம், Indu Harikumar
பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் தனது படைப்புகளை பதியும் மும்பையை சேர்ந்த இந்து, பெண்களிடம் அவர்கள் மார்புகளின் தனிப்பட்ட கதைகளை, அதாவது மகிழ்ச்சியான மற்றும் சோகமான கதைகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
இதில் கலந்து கொள்பவர்கள், தங்கள் மார்பகங்களின் படங்களை அனுப்ப வேண்டும். ஆடை இல்லாமலோ, ஆடையுடனோ, லேஸ், பூக்கள் அல்லது மருதாணி எதனுடன் வேண்டுமானாலும் மார்பகங்களைப் படம்பிடித்து அனுப்பலாம். அவர்கள் முகத்தை காண்பிக்கலாமா அல்லது மறைத்திருக்க வேண்டுமா என்பதையும் அவர்களே தேர்வு செய்யலாம்.
பலரிடம் இருந்து படங்கள் வந்ததாக கூறுகிறார் இந்து ஹரிகுமார். ஏனெனில் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் மார்பு குறித்து ஒரு கதை உள்ளது என்று கூறும் அவர் தமது கதையையே தாமே விளக்குகிறார்.
பட மூலாதாரம், Indu Harikumar
"நான் பதின்ம வயதில் இருக்கும் போது மெலிதாக இருந்தேன். எப்போது எனக்கு மார்பகங்கள் வரும் என்று கவலையாக இருப்பேன். இளைஞர்கள் நல்ல வடிவுள்ள மார்புகள் இருந்த பெண்கள் மீதுதான் கவனம் செலுத்துவார்கள். அதுவே தட்டையாக மார்பு கொண்ட என் போன்ற பெண்களை யாரும் காதலிக்க மாட்டார்கள். என் உடலில் ஏதோ குறைபாடு இருப்பதாக நினைத்தேன். அதனால் பல தீங்கான உறவுகளில் இருந்திருக்கிறேன். யாரும் என்னை காதலிக்க மாட்டார்கள் என்று எண்ணி, எனக்கு கிடைத்தவர்களுடன் உறவில் இருந்தேன்," என்கிறார் அவர்.
தற்போது 30களில் இருக்கும் அவர், தனக்கு அழகான உடல் இருப்பதாக நம்புகிறார். ஆனால், இந்த நிலைக்கு வர நீண்ட காலமானதாகவும் கூறுகிறார்.
அதனால்தான், சிறிய மார்பகங்கள் கொண்ட ஒருவர், எனக்கு எழுதியபோது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 384 பிரிட்டன் பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தியபோது, அதில் 44 சதவீத பெண்கள் பெரிய மார்பகங்கள் வேண்டும் என்று நினைப்பதாகவும், 31 சதவீத பெண்கள் சிறிய மார்புகள் வேண்டும் என்று கூறியதும் தெரிய வந்தது.
பட மூலாதாரம், Indu Harikumar
சிறு மார்பகங்கள் கொண்ட பெண்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்திய அதே நேரத்தில், பெரிய மார்புகள் கொண்ட பெண்களும் அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டனர்.
"ஒரு பெண்ணுக்கு அவரது மார்பின் அளவு 36D. அவர் டி ஷர்ட் அணியவே மாட்டார். மார்பகங்களை சிறியதாக காண்பிக்க, இறுக்கமான உள்ளாடை அணிந்தார். அவரது பெரிய மார்பகங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அவருக்கு பிடிக்கவில்லை."
மற்றொருவர் இன்ஸ்டாகிராமில் எழுதும்போது, "பெரிய மார்பகங்கள் அனைவரையும் ஈர்க்கும் என்று கூறுவது கொடுமையான பொய். நான் ஓடும்போது, ஜிம் செல்லும்போதும் அடைந்த சங்கடத்தை நான் அறிவேன். அதுவும் தற்போது, நான் என் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால், என் மார்பு தற்போது மேலும் பெரிதாகிவிட்டது."
இந்தக் கதைகளில் எல்லாம் வலி இருந்தாலும், இந்த ஓவியங்களில் பெண்களின் உடல் குறித்த பெருமையும் மகிழ்ச்சியும் இருப்பதாக கூறுகிறார் இந்து ஹரிகுமார்.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் ரமலான் மாதத்தில் இயல்பாக இருக்க முடியுமா?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்