த கர்ஸ் ஆஃப் வீப்பிங் வுமன் (அவளின் சாபம்): சினிமா விமர்சனம்

The Curse Of The Weeping Woman (அவளின் சாபம்): சினிமா விமர்சனம் படத்தின் காப்புரிமை Google
திரைப்படம் The Curse Of The Weeping Woman (அவளின் சாபம்)
நடிகர்கள் லிண்டா கார்டெல்லினி, ரேமண்ட் க்ரஸ், பாட்ரீசியா வேலஸ்க்வெஸ், மாரிசோல் ராமிரெஸ், சீன் பாட்ரிக் தாமஸ்
இயக்குனர் மிச்செல் சாவேஸ்

The Curse of La Llorona என்ற பெயரில் சில நாடுகளிலும் The Curse Of The Weeping Woman என்ற பெயரில் சில நாடுகளிலும் தமிழில் அவளின் சாபம் என்ற பெயரிலும் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். The Conjuring பட வரிசையில் ஆறாவது படம் இது.

மெக்ஸிகோவின் நாட்டுப் புறக் கதை ஒன்றை அடிப்படையாக உருவாக்கப்பட்ட படம் இது. மெக்ஸிகோவின் கிராமம் ஒன்றில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக மரியா என்ற அழகான, இளம்பெண் வசித்துவந்தாள். அந்த கிராமத்திற்கு வந்த பணக்கார இளைஞன் ஒருவன் அவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு வேறு ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்துகொள்கிறான்.

இதனால் மனமுடைந்த மரியா, தன் மகன்கள் இருவரையும் நதியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு, அவளும் தற்கொலை செய்துகொள்கிறாள். அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் அவள் அழுதபடி அலைவதாகவும் குழந்தைகளைத் தூக்கிச் சென்று தண்ணீரில் மூழ்கடிப்பதாகவும் கதைகள் உண்டு. இந்தக் கதையை அடிப்படையாக வைத்து ஏற்கனவே சில படங்கள் வெளியாகியிருக்கின்றன.

1970களின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம். விதவையும் சமூக சேவகியுமான ஆன்னாவுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு நாள், பாட்ரீஷியா என்ற பெண் தன் இரு குழந்தைகளைத் துன்புறுத்துவதாக செய்திவருகிறது. அதை விசாரிக்கச் செல்கிறாள் ஆன்னா. அந்தக் குழந்தைகளை மீட்டுவந்து காப்பகத்தில் வைக்கிறாள். ஆனால், அந்தக் குழந்தைகள் அடுத்த நாள் ஆற்றில் இறந்துகிடக்கிறார்கள்.

இந்த விபரீத சம்பவத்திற்குப் பிறகு, ஆன்னாவின் குழந்தைகளை ஒரு உருவம் கைப்பற்றிச் செல்ல முயற்சிக்கிறது. பாட்ரீசியாவின் குழந்தைகள் எப்படிக் கொல்லப்பட்டன, ஆன்னாவின் குழந்தைகளைத் துரத்துவது எது, ஆன்னா எப்படித் தன் குழந்தைகளைக் காப்பாற்றுகிறாள் என்பது மீதிப் படம்.

படத்தின் காப்புரிமை Google

ஹாலிவுட்டில் மார்வெல் பட வரிசைக்குப் பிறகு வெற்றிகரமான வரிசையாக இருப்பது The Conjuring பட வரிசைதான். ஆனால், இம்மாதிரியான படங்கள், பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதுபோல இருக்கிறது. அபாயத்தில் இருக்கும் குழந்தைகள், நிராதரவான அன்னைகள், ஏதோ சோகத்தால் இறந்துபோய், பழிவாங்கும் பேய்கள், பேயோட்டிகள் என எல்லாமும் இந்தப் படத்தில் உண்டு. இருந்தபோதும் இந்த The Conjuring பட வரிசையின் முதல் சில படங்கள் தந்த திகில் இந்தப் படத்தில் இல்லை.

படத்தின் துவக்கம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நேரம் செல்லச்செல்ல மிகச் சாதாரணமான ஒரு பேய்ப் படமாக மாறுகிறது இது. The Conjuring பட வரிசையின் மிக முக்கியமான அம்சமே, பேய் வரும் காட்சிகள் மட்டுமல்லாது, படம் நெடுகவே ஒரு திகில் நீடித்திருக்கும் என்பதுதான். திடீர் திடீரெனக் குதித்து அச்சுறுத்துவதற்குப் பதிலாக, ஒரு சிறிய நிழல், ஒரு பட்டுப்போன மரம் ஆகியவைகூட முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும். ஆனால், இந்தப் படத்தில் ரொம்ப பழைய பாணியில் சத்தத்துடன் கோரமான பேயை கண்முன் நிறுத்துவது, கோரமான காட்சிகளின் மூலம் பயமுறுத்துவது என்றே படத்தை நகர்த்திக்கொண்டு போகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Google

குறிப்பாக பேயோட்டும் சாமியாராக வரும் ரேமண்ட் க்ரஸ் ரொம்பவுமே கடுப்பேத்துகிறார். வீட்டிற்குள் பேய் திரிந்துகொண்டிருக்கும்போது, மொக்கையாக நகைச்சுவை வசனங்களைப் பேசுகிறார். படத்தில் உள்ள கொஞ்சநஞ்ச திகிலையும் இம்மாதிரி காட்சிகள் இல்லாமல் செய்துவிடுகின்றன.

The Conjuring வரிசை படங்கள் ஏதற்காக பிரபலமாயினவோ, அதற்கு எதிரான திசையில் செல்கிறது இந்தப் படம். ஆனாலும், வழக்கமான பேய்ப் படங்களைப் பார்த்து ரசிக்கும் விருப்பமும் மன திடமும் உள்ளவர்கள் ஒரு முறை பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :