"பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்": எஸ்.ஜே.சூர்யா

பிரியா பவானி ஷங்கர்

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் அடுத்த வாரம் மே-17ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் மான்ஸ்டர். எஸ்.ஜே.சூர்யா நடித்து முதல் முறையாக 'யு' சான்றிதழ் பெற்ற இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

"நான் ஒரு எலியாக இருந்தா எப்படி இருக்கும்?"

விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, "கதை சொல்லவந்த இயக்குநர் நெல்சன், நீங்கள் ஒரு எலி என்று ஆரம்பித்ததும் எப்படி இருக்குமோ? என்று நினைத்தேன். கதையைக் கேட்டதும் பிடித்திருந்தது. குழந்தைகளுக்கும்... செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்."

மேலும், "சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது." என்றார்.

"இயக்குநர் ஒவ்வொரு காட்சியிலும் கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும், என்னுடைய காதுகூட எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுவார்" என்றார்.

"எஸ்.ஜே.சூர்யாவோடு நடிக்க தயங்கினேன்"

மான்ஸ்டர் படத்தின் நாயகி பிரியா பவானி சங்கர் பேசும்போது, "இந்த படத்தில் கிடைத்த அனுபவம், எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார். சங்கர் கூறியதுபோல் என்னை பாதுகாப்பாக வைத்திருந்தார்."

மான்ஸ்டர் திரைப்படத்தின் 'அந்தி மாலை நேரம்' பாடலின் லிரிக் விடியோ யு டியூபில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்