அலாதீன்: சினிமா விமர்சனம்

அலாதீன் படத்தின் காப்புரிமை Aladdin Movie
திரைப்படம் அலாதீன்
நடிகர்கள் வில் ஸ்மித், மேனா மசூத், நவோமி ஸ்காட்
இசை ஆலன் மென்கன்
இயக்கம் கெய் ரிட்சி

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை பல வடிவங்களில் பல மாறுதல்களோடு பல முறை எழுத்திலும் சினிமாவிலும் சொல்லப்பட்டுவிட்ட நிலையில், சில புதிய மாறுதல்களோடு இந்தக் கதையை மீண்டும் படமாக்கியிருக்கிறது டிஸ்னி.

ஒரிஜினல் கதையில், அலாவுதீனின் சித்தப்பா என்று சொல்லிக்கொண்டுவரும் மந்திரவாதி, அலாவுதீனை அழைத்துச் சென்று ஒரு குகைக்குள் தள்ளி விளக்கை எடுத்துத்தரச் சொல்வார். இந்தப் படத்தில் அக்ரபா கற்பனை தேசத்தில் நடக்கிறது கதை. அலாதீன் (மேனா மசூத்) தன் குரங்கான அபுடன் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டுவருபவன். அந்த நாட்டு இளவரசியான ஜாஸ்மினுடன் (நவோமி ஸ்காட்) அவனுக்கு அறிமுகம் ஏற்படுகிறது. அக்ரபாவின் ராஜதந்திரியான ஜாஃபருக்கு சுல்தானை வீழ்த்தவிட்டு தானே ராஜாவாக ஆசை. அதைச் சாதிக்க அற்புத விளக்குத் தேவைப்படுகிறது.

அந்த வேலைக்கு அலாவுதீனை அனுப்புகிறான் ஜாஃபர். ஆனால், விளக்கை எடுத்துக்கொண்ட அலாவுதீன், விளக்கிலிருந்து பூதத்தை (வில் ஸ்மித்) வரவழைத்து தன்னை ஒரு இளவரசனைப் போல மாற்றிக்கொண்டு ஜாஸ்மினை பெண் கேட்டுச் செல்கிறான்.

இதை அறிந்த ஜாஃபர் என்ன செய்தான், அலாவுதீனும் ஜாஸ்மினும் இணைந்தார்களா, விளக்கிலிருந்து வரும் பூதத்திற்கு என்ன ஆகிறது என்பது மீதிக் கதை. ஒரிஜினல் கதையில் இல்லாத குரங்கு, புலி, கிளி என பல ஜாலியான மிருகங்களும் இந்தக் கதையில் உண்டு.

படத்தின் காப்புரிமை Aladdin Movie

1992ல் டிஸ்னியே தயாரித்த அனிமேஷன் படமான அலாதீனுடன் ஒப்பிட்டால் இந்தப் படம் சற்று சுமார் ரகம்தான். படத்தில் கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் அரண்மனை, நகரம், விளக்கு உள்ள குகை ஆகியவை ரொம்பவும் சாதாரணமாக இருப்பதால் எந்த பிரமிப்பையும் ஏற்படுத்தவில்லை. வில்லன் ஜாஃபர் எந்த அச்சத்தையும் ஏற்படுத்தாமல், தோற்பதற்கென்றே வரும் அடியாளைப் போல இருக்கிறார்.

இந்தப் பிரச்சனைகளையெல்லாம் மீறி, இது ஒரு ரசிக்கத்தக்க திரைப்படம்தான். பூதமாக வரும் வில் ஸ்மித்தும் இளவரசியாக வரும் நவோமி ஸ்காட்டும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தக்கவைக்கிறார்கள் (1992ஆம் வருடப் படத்தில் பூதமாக வந்த ராபின் வில்லியம்ஸ் நினைவுக்கு வந்தால், இந்தப் படத்தில் பூதமாக வரும் வில் ஸ்மித் சற்று குறைவாகத்தான் தெரிவார் ). பல இடங்களில் வசனங்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. படத்தின் நாயகனாக வரும் மசூதும் வசீகரிக்கும் முகம்தான்.

இது ஒரு மியூசிக்கல் என்பதால் நினைத்தபோதெல்லாம் பாடல்கள் வருகின்றன. வேறு மொழியில் பார்ப்பவர்களுக்கு சற்று எரிச்சலாக இருக்கலாம்.

ஆனால், முப்பரிமாணத்தில் ஒரு கற்பனை நகரம், மாய விளக்கு, பூதம், குரங்கு, பறக்கும் கம்பளம் ஆகியவற்றுடன் கூடிய ஒரு சாகஸத்தைப் பார்ப்பது ரொம்பவும் ஜாலியான அனுபவம்தான்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்