தேவி - 2: சினிமா விமர்சனம்

தேவி - 2 படத்தின் காப்புரிமை DEVI - 2
திரைப்படம் தேவி - 2
நடிகர்கள் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா, நந்திதா ஸ்வேதா, ஆர்.ஜே. பாலாஜி, டிம்பிள் ஹயதி, அஜ்மல் அமீர்
இசை சாம் சி.எஸ்
இயக்கம் ஏஎல். விஜய்.

2016ஆம் ஆண்டில் வெளிவந்து ஓரளவுக்கு வெற்றிபெற்ற தேவி திரைப்படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் மனைவிக்கு பேய் பிடித்துவிட, கணவன் மனைவியை மீட்கப் போராடுவான். இந்தப் படத்தில் கணவனுக்கு பேய் பிடித்துவிட மனைவி போராடுகிறாள்.

மனைவி தேவியைப் (தமன்னா) பிடித்திருந்த ரூபி பேய் போன பிறகு, தேவி, குழந்தையுடன் அமைதியான வாழ்வை நடத்தி வருகிறான் கிருஷ்ணா (பிரபுதேவா). இருந்தபோதும் பேய் திரும்பவருமோ என்ற பயம் வருகிறது. அதனால், ஒரு சாமியாரிடம் யோசனை கேட்க, கடலால் சூழப்பட்ட பகுதிக்குள் பேய் வராது, அங்கு போய்விடு என்கிறார் சாமியார். அதனால், மும்பையிலிருந்து மொரீசியஸிற்கு மனைவி தேவியுடன் செல்கிறான் கிருஷ்ணா.

ஆனால், மொரீசியஸில் அலெக்ஸ், ரங்கா ரெட்டி என இரண்டு பேய்கள் கிருஷ்ணாவைப் பிடித்துக்கொள்கின்றன. அந்த இரண்டு பேய்களுடனும் ஒப்பந்தம் செய்து தேவி எப்படி கணவனை மீட்கிறாள் என்பது மீதிக் கதை.

முந்தைய பாகத்தோடு ஒப்பிட்டால் ரொம்பவும் சுமாரான படம்தான். பேயையே கண்ணில்காட்டாமல் திகிலும் நகைச்சுவையும் கலந்த ஒரு பேய்ப்படத்தை வழங்க முயன்றிருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், திகிலும் இல்லை; நகைச்சுவையும் இல்லை. தேவியும் கிருஷ்ணாவும் மொரீசியஸிற்கு வந்து, கிருஷ்ணாவைப் பேய் பிடித்திருப்பது தேவிக்குத் தெரியும்வரை கொஞ்சமாவது சுவாரஸ்யமாக நகரும் படம், அதற்குப் பிறகு சுத்தமாகப் படுத்துவிடுகிறது.

திரைக்கதை, நடிப்பு, காட்சிகள் எல்லாவற்றிலுமே ஒரு அலுப்பும் ஆர்வமற்ற தன்மையும் தென்படுகிறது. கிருஷ்ணாவை இரண்டு பேய்கள் பிடித்துக்கொண்ட பிறகு, விமான நிலையத்தில் வரும் ஒரு காட்சியைத் தவிர, எந்தக் காட்சியிலும் சுவாரஸ்யமே கிடையாது. இதற்கு நடுவில் சில பாடல்களைத் திணித்திருப்பது இன்னும் அலுப்பை ஏற்படுத்துகிறது.

படத்தின் காப்புரிமை Devi - 2

படத்தின் ஒரே ஒரு நல்ல அம்சம் பிரபுதேவா. ஒரே காட்சியில் அடுத்தடுத்து மூன்று நபர்களைப் போல நடிக்க வேண்டிய தருணங்களில், உண்மையிலேயே அசத்துகிறார். ஆனால், தமன்னா உள்ளிட்ட படத்தில் வரும் மற்றவர்களிடம் இதேபோன்ற ஆர்வம் இல்லை.

படத்தில் பின்னணி இசை பரவாயில்லை ரகம். ஆனால், எந்தப் பாடலும் மனதில் ஒட்டவில்லை. பாடல்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் மேம்பட்டிருக்கக்கூடிய படம் இது.

படம் முடியும்போது, அடுத்த பாகமும் வரக்கூடும் என்பதைப் போல சூசகமாகச் சொல்லி முடிக்கிறார்கள். படத்திலேயே இதுதான் மிகப்பெரிய திகில் காட்சி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்