X - MEN: DARK PHOENIX: சினிமா விமர்சனம்

X - MEN: DARK PHOENIX: சினிமா விமர்சனம் படத்தின் காப்புரிமை Dark Phoenix
திரைப்படம் X - MEN: DARK PHOENIX
நடிகர்கள் ஜேம்ஸ் மெக்கவே, மிச்செல் ஃபாஸ்பென்டர், ஜெனிஃபர் லாரன்ஸ், நிக்கோலஸ் ஹால்ட், சோஃபி டர்னர்
மூலக்கதை ஸ்டான் லீ
இயக்கம் சிமோன் கின்பெர்க்

எக்ஸ் - மென் பட வரிசையில் பன்னிரண்டாவது படம். 2016ல் வெளியான X-Men: Apocalypse படத்திற்கு அடுத்த பாகம். X-Men: Apocalypse படத்தில், எக்ஸ் மென்களில் ஒருவனான 'என் சபா நூர்' புதிய உலகைப் படைப்பதற்காக மனித குலத்தையே அழிக்க நினைப்பான். அதை எக்ஸ்-மென்கள் எப்படி முறியடிப்பார்கள் என்பது கதை. இந்தப் படம் அதற்கு அடுத்த சாகசம். 

1990களில் நடக்கிறது கதை. விண்வெளிக்கு மனிதர்களுடன் பயணிக்கும் ஒரு ராக்கெட், திடீரென ஏற்படும் சூரியப் புயலால் பாதிக்கப்படுகிறது. அந்த விண்கலத்தில் உள்ள வீரர்களைக் காப்பாற்ற எக்ஸ் - மென் குழு அனுப்பப்படுகிறது. அப்போது அந்தக் குழுவில் இருந்த ஜீன் க்ரேவை மர்மமான பிரபஞ்ச சக்தி தாக்குகிறது. பூமிக்குத் திரும்பிய பிறகு, எதிர்பாராத தருணங்களில் பெரும் சக்தியை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறாள் ஜீன் க்ரே (சோஃபி டர்னர்). காவல்துறை, ராணுவத்தினரையும் தாக்கிவிடுகிறாள். இதனால், எக்ஸ் - மென்களை கைதுசெய்ய உத்தரவிடுகிறது அரசு. 

இதற்கிடையில், அந்த பிரபஞ்ச சக்தியைப் பெற்று பூமியை அழித்துவிட்டு புதிய கிரகத்தை படைக்க வேற்றுக்கிரக உயிரினங்களும் வருகின்றன. அவற்றிடமிருந்து ஜீன் க்ரேவை எக்ஸ் மேன் குழு எப்படி மீட்கிறது என்பது மீதி சாகஸம். 

படத்தின் காப்புரிமை foxmovies

படத்தின் துவக்கத்தில் வரும் விண்வெளி சாகஸமும் க்ளைமாக்ஸில் வரும் மோதல்களும் நிச்சயம் ரசிக்கத்தக்கவை. ஆனால், இந்த இரு சாகஸங்களுக்கு இடையிலும் உள்ள கதையை மிக விறுவிறுப்பான கதை எனச் சொல்ல முடியாது. 

ஜீன் க்ரேவிடம், அவளை வளர்த்த சேவியர் பொய் சொல்லியிருக்கிறான் எனத் தெரிந்த பிறகு நடக்கும் உணர்ச்சிமயமான காட்சிகள், இந்த சூப்பர் ஹீரோ கதைக்கு பொருந்தவில்லை. அதன் பின், வழக்கம்போல அயல்கிரகவாசிகளை களத்தில் இறக்கிவிட்டு, அவர்களும் இதே எக்ஸ் மேன்களைப் போன்ற சக்திகளுடன் திரிவதும் முடிவில் எல்லா சூப்பர் ஹீரோ படங்களிலும் வருவதைப் போல, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மோதலை, கிராஃபிக்ஸ் உதவியுடன் பார்ப்பதும் அவ்வளவு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கவில்லை. 

கதையின் மையப்புள்ளியான ஜீன் க்ரேவாக வரும் சோஃபி டர்னர், கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியலில் 'சன்ஸா'வாக வந்து மனம்கவர்ந்தவர். சோஃபியின் ரசிகர்களும் எஸ்க் - மென் படங்கள் எப்படி இருந்தாலும் சிலாகிப்பவர்களும் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கலாம். 

X2 படம் அளவுக்கு சிறப்பான படம் இல்லை. ஆனால் X MEN - Last Stand அளவுக்கு மோசமான படமும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்