செர்னோபில் எச்பிஓ தொடர்: உண்மையில் நடந்த சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா? - களத்தில் இருந்தவரின் வாக்குமூலம்

செர்னோபில் தொடர்: உண்மையில் நடந்த சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா? படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செர்னோபில் அணு உலை

ஐ.எம்.டி.பி-யில் இதுவரை இல்லாத அளவுக்கு கொண்டாடப்பட்ட தொலைக்காட்சி குறுந்தொடர் செர்னோபில். இதுவரை, 150,000 பேர் ஐ.எம்.டி.பி இணையத்தில் ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

அப்போது சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைன் செர்னோபில் அணு உலையில் 1986ம் ஆண்டு நடந்த விபத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர் எச்.பி.ஓவில் ஒளிப்பரப்பாகியது.

செர்னோபில் விபத்தென்பது ஒரு பேரழிவு.

அந்த பேரழிவை இந்த தொலைக்காட்சி தொடர் மிக துல்லியமாக காட்சிப்படுத்தி உள்ளதா?

படத்தின் காப்புரிமை SKY UK LTD/HBO

”என்ன நடந்தது?”

1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி காலை நான்காவது அணு உலையின் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி கொண்டிருந்தார் அணு உலையின் முன்னாள் கட்டுப்பாட்டு அலுவலர் ஒலெக்ஸி ப்ரியுஸ். சில மணி நேரங்களுக்கு முன்புதான், அங்கு ஒரு வெடிப்பு நடந்து, கதிர்வீச்சு ரஷ்யா, வடக்கு ஐரோப்பா, சோவியத் ஆகிய இடங்களுக்கு பரவியது.

பிபிசி உக்ரேனியன் சேவையிடம் பேசிய ஒலெக்ஸி, "அணு உலை மிக மோசமாக சேதமாகி இருந்தது. இனி எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்தோம்." என்கிறார்.

இந்த காட்சிகளை கூட மிகத் துல்லியமாக இந்த தொலைக்காட்சி தொடரில் பதிவு செய்திருக்கிறார்கள் என்கிறார் ஓலெக்ஸி.

சரி. எல்லாவற்றையும் சரியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்களா? என்றால் "இல்லை" என்கிறார் ஓலெக்ஸி.

'மோசமான விபத்து'

அணு உலை வெடித்ததால் உடனடியாக 31 பேர் மரணித்தார்கள் என்றால், அணு கதிர்வீச்சு பல்லாயிரம் பேர் இறக்க காரணமாக இருந்தது.

"அந்த சமயத்தில் அனைவரும் அவ்வளவு இரக்கம் காட்டினர். அதிகாரிகள், தனி மனிதர்கள் என அன்புடன் நடந்து கொண்டனர்." என்கிறார் ஓலெக்ஸி.

படத்தின் காப்புரிமை Getty Images

'அவர்கள் தீயவர்கள் அல்ல'

செர்னோபில் முன்னாள் இயக்குநர் விக்டோர், முதுநிலை பொறியாளர் நிக்கோலாய் மற்றும் துணை முதுநிலை இயக்குநர் அனடோலி ஆகியோர் இந்த தொடரில் சரியாக சித்தரிக்கப்படவில்லை என்கிறார் ஓலெக்ஸி.

"அவர்களை வில்லன் போல இந்த தொடரில் சித்தரித்துள்ளனர். உண்மையில் அவர்கள் அவ்வாறானவர்கள் இல்லை" என்கிறார்.

அனடோலி கண்டிப்பானவர். அதனாலேயே தவறானவராக பலரால் புரிந்து கொள்ளப்பட்டார். ஆனால், அந்த புரிதலும் பின்னர் மாறியது என்று கூறுகிறார் ஓலெக்ஸி.

பாதுகாப்பு கட்டுப்பாட்டை இந்த மூன்று அதிகாரிகளும் மீறியதால்தான் விபத்து உண்டானது என்று கூறி 1987ம் ஆண்டு ஜூலை மாதம் தண்டனை விதிக்கப்பட்டது.

அணு இயற்பியலாளர் வெலெரி லெகஸோவ், செர்னோபில் குழுவின் முக்கிய நபராக இந்த தொடரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், உண்மையில் அவரை மிகவும் அரிதாகதான் செர்னோபில்லில் பார்த்திருக்கிறோம் என்கிறார் ஓலெக்ஸி.

எமிலி வாட்சன், சோவியத் இயற்பியலாளர் உலனா கொம்யூக் எனும் வேடத்தில் நடித்துள்ளார். செர்னோபில் விபத்து ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்று இந்த கதாபாத்திரம் விசாரிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நிஜத்தில் அப்படியான நபரே இல்லை.

இது குறித்து வாட்சனே விவரித்துள்ளார். அவர், "செர்னோபில் விபத்து குறித்து விசாரணை நடத்தியவர்களின் மொத்த உருவகம் இந்த பாத்திரம்." என்று தெரிவித்துள்ளார்.

இந்த தொடரின் பல காட்சிகள் குறித்து சிலாகித்தும் கூறுகிறார் ஒலெக்ஸி.

படத்தின் காப்புரிமை Sky UK Ltd/HBO
Image caption எமிலி வாட்சன்

"அணு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரிப்பும், காட்சிபடுத்துதலும் மிக அற்புதமாக இருந்தது. இதற்கு முன் அணு கதிர்வீச்சு குறித்து நிறைய விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அளவுக்கு தத்ரூபமாக யாரும் காட்சிப்படுத்தவில்லை" என்று இந்த தொடர் எடுக்கப்பட்டிருக்கும் விதம் குறித்து விவரிக்கிறார்.

விபத்து ஏற்பட்ட சில மணி நேரங்களில் ஓலெக்ஸி இரு நபர்களிடம் பேசி உள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் கதிர்வீச்சுக்கு உள்ளாகி மாஸ்கோ மருத்துவமனையில் இறந்துவிடுகின்றனர்.

அவர்கள் குறித்த விவரிப்பும் இந்த தொடரில் வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

'நெருப்பில்லை'

அணு உலையில் வெடி விபத்து உள்ளான பின், தீயணைப்பு வீரர்கள் அணு உலைக்கு அனுப்பபட்டுள்ளனர்.

இந்த தொடரில் அது குறித்து வரும் காட்சியில், மேற்கூரையில் நின்று நெருப்பை அணைப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது வெறும் புனைவுதான் என்கிறார் ஓலெக்ஸி.

நெருப்பு பரவியது உண்மைதான்.ஆனால், அது மேற்கூரையில் பற்றவில்லை. தீயணைப்பு வீரர்களின் தியாகம் போற்றுதலுக்கு உரியது என்கிறார் அவர்.

அணு உலை விபத்து நடந்த இரண்டு வார இடைவெளியில் 29க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் பலியாகினர். இவர்கள் அனைவரும் பழுதான அணு உலை அருகில் நின்று தங்கள் பணியை செய்தவர்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

'சாவு பாலம்'

கதிர்வீச்சின் ஆபத்தை உணராமல், அணு உலை அருகில் இருந்த கிராமமான பிரிப்யாபட்டை சேர்ந்த மக்கள் அருகில் இருந்த ரயில்வே பாலத்தில் ஏறி, தீ எரிவதை காணுவதாக இந்த தொடரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அது போல வானிலிருந்து, பனி போல விழும் கதிரியக்கமுடைய துகள்களை பிடித்து விளையாடுவதாகவும் காட்டப்பட்டுள்ளது.

இந்த பாலம் பின்னர் 'சாவிற்கான பாலம்' என்று அழைக்கப்பட்டது.

இந்த பாலத்தில் நின்று பார்த்தவர்கள் அனைவரும் கதிர்வீச்சினால் இறந்துவிட்டதாக ஒரு வதந்தி உள்ளது.

ஆனால், அதிகாரிகள் இதனை மறுக்கிறார்கள். ஓலெக்ஸியும் இது குறித்து சந்தேகம் தெரிவிக்கிறார்.

"பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் கதிர்வீச்சினால், அளவு கடந்த வெப்பத்தை எதிர்கொண்டது உண்மைதான். ஆனால், அவர்கள் சாகவில்லை" என்கிறார்.

படத்தின் காப்புரிமை SKY UK LTD/HBO
Image caption சாவு பாலம்

மேற்கத்திய புரிதல்

சோவியத் குறித்து மேற்கத்திய மக்களுக்கு உள்ள புரிதலையே இந்தத் தொடரும் வெளிப்படுத்துகிறது.

சோவியத் என்றாலே வோட்கா, கே.ஜி.பி என்ற எண்ணம் உள்ளது. அதனை இந்த தொடரும் வெளிப்படுத்துகிறது. ஆனால், சோவியத்தின் வெளிப்படையற்றதன்மை, அவர்களது மோசமான நிர்வாகம், இவைதான் இந்த விபத்துக்கு காரணம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை என்கிறார் ஓலெக்ஸி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :