அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவது ஏன் மகிழ்ச்சியைத் தருகிறது?

அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவது ஏன் மகிழ்ச்சியைத் தருகிறது? படத்தின் காப்புரிமை Getty Images

பெரும்பாலான மக்கள் தினசரி வாழ்வில் ஒரு பகுதியை அறிமுகம் இல்லாதவர்களுடன் செலவிடுகிறார்கள். தினசரி பயணத்தின் போதே, பூங்கா அல்லது காபி கடையில் அமர்ந்திருக்கும் போதோ அல்லது சூப்பர் மார்க்கெட்டிலோ அறிமுகம் இல்லாதவர்களை சந்திக்கிறார்கள்.

இருந்தபோதிலும் அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவது இருவருக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் நம்மில் பலர் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்கிறோம்.

இந்த நம்பிக்கைகள் தேவையற்றவை. உண்மையில், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதால் நமக்கும் மற்றவர்களுக்கும் தரக் கூடிய ஆக்கபூர்வ தாக்கம் பற்றி நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்று எங்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.

உதாரணத்துக்கு, நீங்கள் வேலைக்குச் செல்லும் வழியில், அறிமுகம் இல்லாத ஒருவருடன் உரையாடுவது, நீங்கள் நினைப்பதைவிட இருவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

சிகாகோவில் ரயில் மற்றும் பேருந்துப் பயணிகளிடம், காலையில் பயணத்தின்போது தனியாக அமர்ந்திருப்பது அல்லது வழக்கமாக இருப்பதைப் போல ஏதாவது செய்து கொண்டிருப்பதைவிட, உரையாடிக் கொண்டு செல்வது பற்றி எப்படி உணர்கிறீர்கள் என்று நாங்கள் கேட்டோம். பேசிக் கொண்டிருப்பது குறைந்தபட்ச மகிழ்வை தரும்பயணமாக இருக்கும் என்று பெரும்பாலானோர் நினைத்தனர்.

இருந்தபோதிலும், நாங்கள் உண்மையில் பரிசோதனை நடத்தியபோது, தொடர்பின்றி தேர்வு செய்யப்பட்ட நபர்களுடன் பேசியதில், அதிக மகிழ்வான பயணத்தை உணர்ந்தார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

மற்றவர்களுக்கு உரையாடலில் ஆர்வம் இருக்காது என்றோ அல்லது உங்களை அவர்களுக்குப் பிடிக்காது என்றோ நினைப்பது, அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கச் செய்கிறது.

உண்மையில், ஆரம்ப உரையாடலைத் தொடர்ந்து புதிய நபர் எந்த அளவுக்கு நம்மை விரும்புவார்கள் என்பது குறித்து நாம் தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறோம் என்று ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.

அறிமுகம் இல்லாதவர்களின் உள்ளார்ந்த வாழ்வு

பேருந்துகளிலும் டாக்சிகளிலும் நடத்திய தனித்தனி ஆய்வுகளில் ஒரே மாதிரி முடிவுகள் வந்தன; அறிமுகம் இல்லாதவர்களுடன் தனிப்பட்டவர்கள் தொடர்பு கொள்வது ஆச்சர்யப்படத்தக்க வகையில் மகிழ்வானதாக இருந்தது.

நீங்கள் பேசக் கூடிய நபருக்கும் நேர்மறை தாக்கம் பரவுகிறது. காத்திருக்கும் அறை ஒன்றில் நடத்திய வேறொரு பரிசோதனையில், பேசும்படி நாங்கள் ஊக்குவித்தவர்களுக்கு அதிக மகிழ்வான அனுபவம் கிடைத்தது மட்டுமின்றி, அவர்களுடன் பேசிய மற்றவர்களுக்கும் மகிழ்வு ஏற்பட்டது.

தேவையில்லாமல் கவனம் செலுத்துவதை யாரும் விரும்ப மாட்டார்கள்தான்.

ஆனால் சக மனிதரிடம் சாதாரணமாக ஹலோ என்று சொல்வது, நாம் நினைப்பதைவிட நல்ல வரவேற்பைப் பெறும். அறிமுகம் இல்லாதவர்களுடன் சிலர் உரையாடலைத் தொடங்குவார்கள். ஆனால் நீங்கள் நல்ல எண்ணத்துடன் அணுகினால், பேசுவதில் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

அடுத்தவருடன் பேசும்போது அறிமுகம் இல்லாதவர்களின் குரலைக் கேட்கும்போது, அவர்களுடைய பலமான உள்ளார்ந்த வாழ்வின் எண்ணங்கள், உணர்வுகள், முகபாவனைகள் மற்றும் அனுபவங்கள் நம்மைப் போலவே இருக்கின்றன என்ற உணர்வைத் தருகின்றன.

அறிமுகம் இல்லாதவர்களுடனான இந்தக் குறுகிய கால தொடர்புகள், வாழ்வின் துயரத்தை மாற்றி, சுபிட்சத்தைக் கொண்டு வந்துவிடும் என்று சொல்ல முடியாது. இருந்தபோதிலும் தினசரி பயணத்தின் இறுக்கம் - போன்ற மகிழ்வற்ற தருணங்களை - அதிக மகிழ்வான தருணங்களாக மாற்றக் கூடும்.

மனிதர்கள் மரபு ரீதியாகவே சமூக விலங்குகள். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது மகிழ்வாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கக் கூடியவர்கள். மாறாக தனிமையாக உணர்வது மன அழுத்தம் தரும். புகைபிடித்தல் மற்றும் உடல் பருமனைக் காட்டிலும் அதிக இதய பாதிப்பைத் தரும்.

மகிழ்ச்சிக்கு முக்கியமான தேவையாக இருப்பது நேர்மறையான சமூக தொடர்புகள்தான் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைவிட இதுதான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

எதிர்பார்ப்புகளை சுயமாகப் பூர்த்தி செய்து கொள்வது

படத்தின் காப்புரிமை Getty Images

மற்றவர்களுடன் தொடர்பை நாடுபவர் மட்டுமே பயன் பெறுகிறார் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.

உண்மையில், தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட சூழல்களில், தொடர்பு கொள்பவரும், அடுத்தவரும் மகிழ்வாக உணர்ந்தார்கள் என்பது பல பரிசோதனைகளில் தெரிய வந்திருக்கிறது.

பயணம் செல்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். எந்த அளவுக்கு அவர்களாக தொடர்பு கொள்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படுவதில்லை.

மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் உங்களுடைய ஆளுமை அதிக தடையாக இருக்காது என்றாலும், உங்களுடன் பேசுபவர் இந்தக் கலந்துரையாடலின் நேர்மறை விளைவுகளை குறைத்து மதிப்பிட்டால் அது உங்களுடைய எதிர்பார்ப்புகளைப் பாதிப்பதாக இருக்கலாம்.

முக்கியமாக, உங்களுடைய அனுபவங்களைக் காட்டிலும், உங்களுடைய ஆளுமை தான் உங்களின் எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறது.

நமது எதிர்பார்ப்புகள் சுய-பூர்த்தி தன்மை கொண்டதாக இருக்கலாம். அறிமுகம் இல்லாதவருடன் பேசுவது மகிழ்ச்சிக்குரியதாக இருக்காது என்று நீங்கள் நினைத்தால், ஒருபோதும் முயற்சிக்க மாட்டீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகள் தவறானவை என்பதை ஒருபோதும் கண்டறிந்து கொள்ள மாட்டீர்கள். இதனால் நாம் தவறுதலாக தனிமைப்படுத்தப்பட்டு, மற்றவர்களிடம் தொடர்பு இல்லாதவர்களாக்கப் பட்டுவிடுவோம்.

பெருநகரங்களில் அடுத்தவரை அதிக நெரிசல் இருந்தாலும் மக்கள் அடுத்தவரை கண்டுகொள்ளாதது ஏன் என்பதைப் புரிந்து கொள்ள இது உதவும். பூங்கா இருக்கைகளில் அறிமுகம் இல்லாதவர்கள் அமர்ந்து செல்போன்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நகரின் தெருக்களில் புன்னகை இல்லாமல் அல்லது யாருக்கும் ``ஹலோ'' சொல்லாமல் நடந்து செல்கிறார்கள்.

தொடர்பில்லாத அன்பின் வெளிப்பாடுகள்

இந்தத் தவறான புரிதல்கள் பொதுப் போக்குவரத்தையும் தாண்டி நமது வாழ்வில் பல அம்சங்களுக்கும் பரவுகிறது. பொதுவாகவே மற்றவர்களை நாடுவதில் உள்ள ஆக்கபூர்வ தாக்கத்தை நாம் தொடர்ந்து குறைத்து மதிப்பிடுகிறோம்.

நன்றி கூறும் கடிதம் எழுதும் நபர்கள், தொடர்பில்லாது அன்பை வெளிப்படுத்துகிறார்கள் அல்லது தொடர்ந்து பாராட்டுதல்களை தெரிவிக்கிறார்கள், அதைப் பெறக் கூடியவர் உண்மை நிலையைவிட மகிழ்ச்சி குறைவாக இருப்பார் என்று நம்புகிறார்கள்.

மற்றவருடன் தொடர்பு கொள்வதால் கிடைக்கும் நேர்மறை தாக்கத்தை குறைத்து மதிப்பிடுவது, நம்முடைய மற்றும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்துக்கு உகந்தது கிடையாது.

படத்தின் காப்புரிமை Getty Images

நீங்கள் பார்க்கும் எல்லோருடனும் பேச வேண்டும் அல்லது உங்களை அணுகும் அனைவருடனும் ஈடுபாடு காட்ட வேண்டும் என்று எங்களுடைய ஆய்வு முடிவுகள் கூறவில்லை.

மாறாக, அடுத்த முறை அறிமுகம் இல்லாதவருக்கு உதவி செய்ய நீங்கள் விரும்பும் போது அல்லது உரையாடலை தொடங்க நினைக்கும்போது, ஆனால் அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படாமல் உரையாட முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் எதிர்பார்த்ததைவிட அது நன்றாகவே இருக்கும். உங்கள் இருவரையும் மகிழ்ச்சியாக்கி, நல்ல தொடர்பை ஏற்படுத்தும் என்று எங்கள் ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.

இந்தக் கட்டுரை பற்றி:

வெளி நிறுவனத்துக்கு பணியாற்றும் நிபுணர்கள் மூலம் பிபிசியால் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது.

(நிகோலஸ் எப்லெய், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும், முடிவெடுத்தல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநருமாவார். ஜூலியானா ஸ்ச்ரோடர், பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அமைப்புகள் மேலாண்மைக் குழு பேராசிரியராக உள்ளார்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :