சந்திரயான் - 2: இந்தியாவின் கனவு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய பெண்கள் யார்?

சந்திரயான் - 2 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய பெண்கள் யார்? படத்தின் காப்புரிமை STAR PLUS / TED TALKS / GETTY IMAGES

இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஜூலை 15 ஆம் தேதி காலை 02.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான் - 2 செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்ப உள்ளது.

இதற்கு முன்பு, அக்டோபர் 2008ல், சந்திரயான்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ நிலவுக்கு அனுப்பியது.

சந்திரயான் - 2 செயற்கைக்கோளின் மொத்த கமாண்ட்களும் இரண்டு பெண்களின் கையில் இருப்பது இதன் இன்னொரு சிறப்பம்சமாகும்.

இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. சிவன் கூறுகையில் "நாங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே எந்த பாலின வேறுபாடும் பார்ப்பது கிடையாது. இங்கே வேலை பார்க்கும் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்களே ஆவர்" என்றார்.

பெண்கள் செயற்கைக்கோள் தயாரிப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பது இது முதன்முறை அல்ல. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய செயற்கைக்கோளில் பெண்கள் இதுபோல முக்கிய பொறுப்பில் இருந்துள்ளனர்.

இந்தமுறை சந்திரயான்-2 செயற்கைக்கோள் திட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ரிது கரிதல் மற்றும் எம். வனிதா. யார் இந்த இரு பெண்கள்?

இந்தியாவின் ராக்கெட் பெண்மணி 'ரிது'

படத்தின் காப்புரிமை ASIF SAUD
Image caption ரிது கரிதல்

சந்திராயனின் மிஷன் இயக்குனர் ரிது கரிதல் இந்தியாவின் ராக்கெட் பெண்மணி என அழைக்கப்படுகிறார். இவர் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷனின் போது உதவி இயக்குனராக இருந்தவர். கரிதல் லக்னோ பல்கலைக்கழகத்தில் விண்வெளித்துறை பொறியியல் படிப்பு முடித்துள்ளார்.

2007ல் அவர் இஸ்ரோவின் இளைய விஞ்ஞானி என்ற பட்டத்தை முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமிடமிருந்து பெற்றுயுள்ளார்.

ரிது அறிவியலில் சிறுவயது முதல் நாட்டம் கொண்டிருந்தார். செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் முடிந்ததும் பிபிசியிடம் பேசியபோது, "நிலவின் நளினம் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இந்த இருண்ட விண்வெளியைத் தாண்டி உள்ள உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.

ரிதுவுக்கு இயற்பியலும், கணக்கும் மிகவும் பிடித்த பாடங்கள் ஆகும். அவர் செய்தித்தாளில் வரும் நாசா மற்றும் இஸ்ரோவின் செய்திகளை சேகரித்து வைத்துக்கொள்வார். அவர் விண்வெளி அறிவியல் குறித்த சிறு சிறு விஷயங்களை புரிந்துகொள்ள முயற்சி செய்வார்.

அறிவியல் மற்றும் விண்வெளியின் மீது அவருக்கு இருந்த காதல் அவரை இஸ்ரோவுக்கு கொண்டு வந்தது.

”என்னுடைய பட்ட மேற்படிப்பு முடித்தவுடன் இஸ்ரோவில் வேலைக்கு விண்ணப்பித்தேன். இவ்வாறு விண்வெளி விஞ்ஞானியாக மாறினேன். இந்த 20 - 21 ஆண்டுகளில் இஸ்ரோவின் நிறைய திட்டங்களை நிர்வகிக்க வேண்டியிருந்தது. அதில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய செயற்கைக்கோள் மிக முக்கியமானது.” என்கிறார் ரிது பெருமிதத்தோடு.

செவ்வாய் கிரகத்தின் பெண்

படத்தின் காப்புரிமை Getty Images

"தன்னுடைய குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லையென்றால், தன்னுடைய குறிக்கோளை அடைந்திருக்க முடியாது" என்கிறார் ரிது கரிதல்.

ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை என மொத்தம் ரிதுவுக்கு இரண்டு குழந்தைகள். தாயான பிறகு, வீட்டிலிருந்து வேலை செய்யும்போது அவருடைய கணவர் குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் உதவுவதாக கூறுகிறார் ரிது.

"உங்களுடைய பற்றையும், ஈடுபாட்டையும் உங்கள் குடும்பம் பார்த்தால், உங்களுடன் கைக்கோர்த்து நிற்கும்" என்கிறார் அவர்.

"என்னுடைய மகனுக்கு 11 வயது, மகளுக்கு 5 வயது. அப்போது நான் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்தேன். வேலையில் என்னுடைய ஆற்றல் குறைந்தாலும், வீட்டிற்கு வந்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்." என்று கூறுகிறார் ரிது.

"எல்லோரும், ஆண்கள் செவ்வாயை சேர்ந்தவர்கள், பெண்கள் வெள்ளியை சேர்ந்தவர்கள் என்று பொதுவாக கூறுவார்கள். ஆனால், செவ்வாய் கிரகத்துக்கு செயற்கோளை அனுப்பிய பிறகு அனைவரும் இப்போது பெண் விஞ்ஞானிகளை செவ்வாய் கிரகத்தின் பெண்கள் என கூறுகின்றனர்." என்கிறார் அவர்.

"நான் இந்த பூமியை சேர்ந்தவள், இந்திய பெண்ணாக இந்த வாய்ப்பை பெற்றதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்" என்று கூறுகிறார் ரிது.

”பெண்களுக்குள் தன்னம்பிக்கை வளர்ப்பது இப்போதுதான் மிக சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய பெற்றோர் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தனர். கிராமத்திலோ நகரத்திலோ பெண்களுக்கு அவர்கள் பெற்றோரின் ஒத்துழைப்பு இருந்தால் போதும் அவர்கள் நீண்ட தூரம் செல்வார்கள் என நாம் எடுத்து கூற வேண்டும்,” என்று ஸ்டார் பிளஸ் நடத்திய 'டெட் டாக்ஸ்' எனும் நிகழ்ச்சியில் ரிது கூறியுள்ளார்.

திட்ட இயக்குனர் எம். வனிதா

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வனிதா

சந்திரயான்-2 திட்டத்தின் திட்ட இயக்குனர்தான் எம்.வனிதா. வடிவமைப்பு பொறியாளராக பயிற்சியில் ஈடுபட்டு சிறந்த பெண் விஞ்ஞானி என இந்திய வானியல் கழகத்தால் விருந்தளிக்கப்பட்டார். நிறைய வருடங்களாக அவர் செயற்கைக்கோளுக்காக வேலை செய்துவந்துள்ளார்.

"செயற்கைக்கோளின் முழுப்பொறுப்பும் ஒரு திட்ட இயக்குனரின் தோளில்தான் இருக்கும்" என அறிவியல் வல்லுநர் பல்லவ் பாக்லா கூறியுள்ளார். பொதுவாக, ஒரு மிஷனுக்கு ஒரு இயக்குனரே இருப்பார். ஆனால், சில மிஷன்களுக்கு ஆர்பிட் இயக்குனர், செயற்கைக்கோள் இயக்குனர், ராக்கெட் இயக்குனர் என நிறைய பேர் இருப்பார்கள். ரிது கரிதலுக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டது என இதுவரை தெளிவாக தெரியவில்லை.

இந்த திட்டம் சரியாக வெற்றிகரமாக நடக்கிறதா என்று பார்த்துக்கொள்வது வனிதாவின் வேலை. இந்த திட்டத்தின் எல்லா வேலைகளும் வனிதாவின் மேற்பார்வையில்தான் முடிக்கப்படும். இந்த திட்டத்தின் இரண்டாவது முக்கிய பதவியில் வனிதா இருந்துள்ளார்.

சந்திரயான் - 2 என்றால் என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

சந்திரயான் - 2 ஒரு சிறப்பு வாய்ந்த செயற்கைக்கோளாக கருதப்படுகிறது. இது ஆர்பிட்டர், 'விக்ரம்' என்ற லேண்டர் மற்றும் 'பிரக்யான்' என்ற ரோவரை கொண்டுள்ளது. மிகவும் கடினமான ஆய்வாக கருதப்படும் நிலவில் தரையிறங்கும் ஆராய்ச்சியை இந்தியா முதன்முதலாக மேற்கொள்கிறது.

இத்திட்டத்தில், சுமார் 600 கோடி ரூபாய்க்கும் மேலான பணம் செலவிடப்பட்டுள்ளது. 3.8 டன்கள் எடை கொண்ட சந்திரயான்-2, ஜிஎஸ்எல்வி மார்க் III ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளது.

நிலவில் இந்தியாவின் தடத்தை பதிக்க உள்ளதால் இந்த திட்டம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் வெற்றியடையும் என இஸ்ரோ நம்புகிறது.

நரேந்திர மோதியுடன் நடந்த திருமணம்: பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட யசோதாபென்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :