Annabelle Comes Home: சினிமா விமர்சனம்

Annabelle Comes Home: சினிமா விமர்சனம்
திரைப்படம் Annabelle Comes Home
நடிகர்கள் வெரா ஃபார்மிகா, பேட்ரிக் வில்ஸன், மெகன்னா கிரேஸ், மேடிஸன் ஐஸ்மென், கேடி சரீஃப்; கதை: ஜேம்ஸ் வான், கேரி டாபர்மேன்
ஒளிப்பதிவு மிச்செல் பர்கெஸ்
இயக்கம் கேரி டாபர்மேன்

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற பேய்ப் பட வரிசையான 'The Conjuring' பட வரிசையில் ஏழாவது படம் இது. அந்த வரிசைக்குள்ளேயே 'ஆனபெல்' பொம்மையை மையமாக வைத்து 'Annabelle', 'Annabelle' Creation என இரு படங்கள் வெளியாகின. அந்த வரிசையில் இது மூன்றாவது படம்.

'Annabelle Creation' படம் இரண்டாவதாக வெளியானாலும், கதைப்படி அதுதான் முதல் படம். அந்தப் படத்தில் பொம்மை தயாரிப்பவரான சாமூவேல் மல்லின்ஸ் - எஸ்தர் தம்பதியின் ஐந்து வயது மகளான அன்னாபெல் அடையாளம் தெரியாத ஒரு கார் மோதி இறந்து போகிறாள். இதற்குப் பிறகு, அவர்கள் வீட்டில் சகோதரி சார்லட்டும் ஆதரவற்ற ஆறு குழந்தைகளும் வந்து வசிக்க ஆரம்பிக்கிறார்கள்.

அதில் ஜானிஸ் என்ற குழந்தை, திறக்கக்கூடாத கதவைத் திறந்து ஒரு அறைக்குள் செல்ல அங்கு ஆனபெல்லின் ஆவி வடிவத்தில் இருக்கும் சாத்தான் ஜானிஸை பிடித்துக் கொள்கிறது. அந்த சாத்தானால், சாமூவேல் - எஸ்தர் தம்பதி கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்.

இதன் பிறகு, சார்லெட்டும் குழந்தைகளும் அந்த வீட்டிலிருந்து தப்புகிறார்கள். பொம்மையை காவல்துறை எடுத்துக்கொள்கிறது. சாத்தானால் பிடிக்கப்பட்ட ஜானிஸ் ஆனபெல் என்ற பெயரை வைத்துக்கொள்கிறாள். அவளை சான்டா மோனிகாவில் வசிக்கும் ஹிக்கின்ஸ் தம்பதி தத்தெடுக்கிறார்கள்.

Annabelle படத்தில் சான்டா மோனிகாவில் வசிக்கும் ஹிக்கின்ஸ் தம்பதியை, அவர்கள் தத்தெடுத்த மகளே கொலைசெய்கிறாள். அதற்குப் பிறகு அவளைக் காவல்துறை கொன்றுவிட, அவள் ஆவி ஒரு பொம்மைக்குள் செல்கிறது. அந்த பொம்மை ஜான் - மியா தம்பதியையும் அவர்களது குழந்தை லேவையும் குறிவைக்கும்.

மூன்றாவதாக வந்திருக்கும் 'Annabelle Comes Hom'e படத்தின் கதை, Annabelle கதை நிகழ்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1970ல் நடக்கிறது. பேயோட்டும் நிபுணர்களான வாரன் தம்பதி, இந்த ஆனபெல் பொம்மையை தூக்கிவந்து, பேய் தொடர்பான பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் தங்களுடைய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கின்றனர்.

அதற்குப் பிறகு ஒரு நாள் வெளியூர் செல்ல முடிவுசெய்யும் வாரன் தம்பதி, தங்கள் குழந்தை ஜூடியை பார்த்துக்கொள்ள மேரி ஆலன் என்ற இளம்பெண்ணை நியமிக்கின்றனர். அன்று இரவு மேரி ஆலனின் தோழி டேனியலாவும் அதே வீட்டில் வந்து தங்குகிறாள்.

சமீபத்தில் நடந்த விபத்தில் தந்தையை இழந்த டேனியலா, அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் மூலமாக தன் தந்தையின் ஆவியைத் தொடர்புகொண்டு பேச முயல்கிறாள்.

அப்போது ஆனபெல் பொம்மை வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பெட்டியையும் திறந்து, பொம்மையை வெளியில் விடுகிறாள்.

இதற்குப் பிறகு, அருங்காட்சியகத்தில் இருக்கும் பேய் தொடர்பான பொருட்களுக்கெல்லாம் உயிர்வந்து, தாக்க ஆரம்பிக்க வீட்டில் மாட்டிக்கொண்ட மூவரும் எப்படித் தப்புகிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.

படத்தின் துவக்கத்தில் வரும் ஒரு காட்சியைத் தவிர, இடைவேளைவரை படத்தில் எதுவுமே நடப்பதில்லை என்பதுதான் படத்தின் மிகப் பெரிய பிரச்சனை. ஆனால், ஏதோ நடக்கப்போகிறது என்பது போன்ற ஒரு எதிர்பார்ப்பை படம் முழுக்கத் தக்கவைத்திருக்கிறார்கள்.

பேய்கள் அட்டகாசம் செய்யும் படத்தின் பிற்பாதி, சற்று சொதப்பலான முற்பாதியை மறக்கச் செய்துவிடுகிறது.

'தி கான்ஜூரிங்' வகைப் படங்களைப் பொறுத்தவரை, திடீரென பேய்கள் வந்து சத்தத்துடன் பயமுறுத்துவது, திடீரென கோரமான முகத்துடன் திரையில் தோன்றுவது ஆகியவற்றின் மூலம் பயமுறுத்தாமல், கதைப் போக்கின் மூலமாகவே அச்ச உணர்வை ஏற்படுத்துபவை.

ஆனால், இந்தப் படத்தில் கட்டவிழ்த்துவிடப்படும் ஆனபெல் பொம்மைக்கு பெரிதாக நோக்கங்கள் இருப்பதாகக் காட்டப்படாததால், பெரிய பயம் ஏதும் ஏற்படாமல் ஏதோ ஒரு விளையாட்டைப் பார்ப்பதைப் போல இருக்கிறது.

'The Conjuring' பட வரிசையில் இதற்கு முன்பாக வெளிவந்த 'தி நன்', 'அவளின் சாபம்' போன்ற படங்கள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. இந்தப் படம், அந்த வரிசையின் மீது மீண்டும் ஒரு சிறு நம்பிக்கையை மட்டும் உருவாக்கியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்