'அப்பாவையும், ரஜினியையும் சேர்த்து இயக்க ஆசை'- அக்‌ஷரா ஹாசன்

அக்‌ஷரா ஹாசன்

இந்தியில் அமிதாப்பச்சனுடன் 'ஷமிதாப்', தமிழில் அஜித்துடன் 'விவேகம்' ஆகியவை திரையுலகில் அக்க்ஷரா ஹாசனின் விசிட்டிங் கார்டுகள். தற்போது விக்ரமுடன் நடித்திருக்கும் 'கடாரம் கொண்டான்' படத்தின் ரிலீஸை அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்

பிபிசி தமிழுக்காக அக்‌ஷரா ஹாசனுடனான நேர்காணல்

கேள்வி: எப்படி நடிக்க வேண்டும் என்று அப்பா கமல்ஹாசன் சொல்லித் தருவாரா... அவருடைய ஆலோசனைகள்?

பதில்: 'கடாரம் கொண்டான்' படத்துக்கு மட்டும் சில காட்சிகளுக்குப் பயிற்சி கொடுத்தார். அது தயாரிப்பாளராக அவர் எடுத்துக் கொண்ட அக்கறையாகவும் இருக்கலாம். மற்றபடி இதுவரைக்கும் பிற படங்களுக்கு அவர் சொல்லி எல்லாம் கொடுத்ததில்லை... (சிரிக்கிறார்)

ஆனால், நடிக்கப் போகிறேன் என்று முடிவெடுத்ததும் சில அறிவுரைகள் சொல்லி இருக்கிறார். அமிதாப் அங்கிளுடன் நடிக்கிறேன் என்று சொன்னதுமே அவரிடம் நிறைய கற்றுக் கொள் என்று சொன்னார். ஒரு நடிகையாக நிறைய படங்களில் நடிக்கலாம்... நீ பத்தாவது படத்தில் நடித்தாலும் சரி, எத்தனையாவது படத்தில் நடித்தாலும் சரி, அப்படி நடிக்கும் ஒவ்வொரு படத்தையுமே எப்போதும் உன்னுடைய முதல் படமாக நினைத்து, முதல் படத்திற்கு தேவையான அர்ப்பணிப்பு, உழைப்பு எல்லாவற்றையும் செலுத்தி சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்றார்.

எல்லா படத்துக்கும் நம்முடைய அதிகபட்ச உழைப்பையும், அர்ப்பணிப்பையும் தர சொன்னார். எது செய்தாலும் சிறப்பாக செய்யவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

கேள்வி: திரைப்படங்களை விட அக்‌ஷரா நிறைய இணையத் தொடர்களில் தானே அதிகமாக தென்படுகிறார். சென்சார் கட்டுப்பாடுகள் இல்லாத இணைய தொடர்கள் ஆரோக்கியமானதா?

பதில்: இணைய தொடர்களில் நடிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. அடுத்தும் ஒரு இணைய தொடரில் நடிக்க இருக்கிறேன். சினிமாவில் நாம் எல்லாவற்றையும் சொல்லி விட முடியாதே... நாம் எதை எல்லாம் சினிமாவில் சொல்ல முடியாதோ அவற்றை எல்லாம் இணைய தொடரில் சொல்ல முடிகிறது. அதே நேரத்தில் எனக்கு வசதியான ஒன்றை மட்டுமே செய்கிறேன். இணைய தொடராக இருந்தாலும் எல்லை மீறாமல் இருக்க வேண்டும்.

கேள்வி: ரொம்பவும் தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்கிற மாதிரியாக தெரிகிறது. அக்‌ஷரா அதிகமான படங்களில் நடிக்கவில்லையே?

பதில்: எனக்கு வரும் கதைகளில் மனதுக்கு பிடித்த கதையையே தேர்ந்தெடுக்கிறேன். நான் நடிகையாக அறிமுகமானதே அமிதாப்பச்சனுடன். என்னுடைய அறிமுகம் பெரிதாக இருந்ததால் அதற்கு தகுந்தாற் போல் அடுத்து அடுத்து நடிக்கும் படங்கள் தரமான படங்களாகவும், நல்ல கதாபாத்திரங்களாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படித் தேர்ந்தெடுப்பது சிரமமாக இருந்தது. மிகவும் குறைவான படங்களில் நான் நடித்திருப்பதற்கான காரணம் இது தான்.

'கடாரம் கொண்டான்' படத்தின் கதையை ராஜேஷ் சொன்னார். என் இந்தி படத்தைப் பார்த்து விட்டு, இந்த நல்ல கேரக்டரை எனக்கு கொடுத்தார். கதைப்படி, அபிஹசன் மனைவியாக, கர்ப்பிணியாக வருகிறேன். கர்ப்பிணியாக நடிக்க ரொம்ப பயிற்சி எடுத்தேன். அம்மா சரிகாவிடம் நிறைய சந்தேகம் கேட்டேன். வயிற்றில் துணி வைத்து கட்டிக் கொண்டு, நடந்து வசனம் பேசி பயிற்சி எடுத்தேன்.

நான் பிறப்பதற்கு முன்பே ராஜ் கமல் நிறுவனம் தொடங்கிவிட்டது. எங்கள் கம்பெனியில் நடிப்பது பெருமை. நடிப்பதற்கு முன்னால் வொர்க் ஷாப்பில் கலந்து கொண்டேன். அப்பாவும் பயிற்சி கொடுத்தார். வீட்டில் தான் அப்பா, மகள். வெளியில் இருவருமே நடிகர்கள். அவரை சார் என்று தான் வெளியிடத்தில் பேசுவேன்.

வீட்டில் தமிழ், இந்தி, இங்கிலீஷ் என்று 3 மொழிகள் பேசிக் கொள்வோம். அம்மாவுடன் இங்கிலீசில் பேசுவேன். இந்த படத்தில் நடிப்பதற்காக நியாயமான சம்பளத்தை அப்பாவிடம் வாங்கி விட்டேன்.

கேள்வி: எப்பொழுதாவது கமல் மகள் என்பதை சங்கடமாக உணர்ந்திருக்கிறீர்களா? கமல் மகள் என்பதால் உங்களுடைய திரைவாழ்க்கையில் ஒரு அழுத்தம் இருக்குமே?

பதில்: கமல் மகள் என்பதனால் மட்டும் கிடையாது . எந்த ஒரு பிரபலமான குடும்பத்தில் பிறந்தாலும் அழுத்தங்கள் இருக்கத் தான் செய்யும். ஆனால் என்னை கமல் மகள் என்றோ சரிகாவின் மகள் என்றோ பார்ப்பதை நான் எப்பொழுதுமே விரும்பவில்லை.

ஆரம்ப காலங்களில், மும்பையில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்த போதே எனது அடையாளங்களை மறைத்து தான் பணிபுரிந்திருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்கிறது. அது வெளிப்பட வேண்டும். இதைத் தான் எங்களிடம் அப்பாவும் வலியுறுத்துவார். நாங்கள் இருவருமே தனியாக சொந்தக் காலில் நிற்கத் தான் விரும்புவார். கமல் மகள் என்பது சிறந்த ஒன்று. ஆனால் தனியாக, அக்‌ஷராவாக நான் என்ன சாதித்தேன் என்பது தான் எனக்கான அடையாளம். இன்னும் சொல்லப் போனால், கமல் மகள் என்பதால் எனக்கு பொறுப்புகள் கொஞ்சம் அதிகம் தான்.

கமல், சரிகா மகள் என்ற தகுதி இருந்தாலும், சினிமாவில் ஜெயிக்க அது மட்டும் போதாது. கடினமான உழைப்பும் வேண்டும். என் மீதான அழுத்தம் என்கிற ரீதியில் நான் யோசித்தால், கமல், சரிகா, ஸ்ருதி, சாருஹாசன், மணிரத்னம், சுஹாசினி, அனுஹாசன் என்று நான் எங்கள் வீட்டிலேயே தாண்ட வேண்டிய உயரம் ரொம்ப பெரியது.

கேள்வி: உதவி இயக்குனராக இருந்திருக்கிறீர்கள். அப்பா கமலை வைத்து படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா? இயக்கினால் எந்த மாதிரியான படமாக இருக்கும்?

பதில்: அப்பா எல்லா விதமான வேடங்களிலும் நடித்து விட்டார். அவரை வைத்து சூப்பர் ஹீரோ கதை பண்ண ஆசை இருக்கிறது. அவரே ஒரு சூப்பர் ஹீரோ தான். அப்பாவையும் ரஜினியையும் சேர்த்து வைத்து ஒரு படம் இயக்க விரும்புகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பண்ணுவேன். அதற்கான கதையைக் கூட தயார் செய்து வைத்திருக்கிறேன்.

கேள்வி: அரசியலில் ரஜினியையும் கமலையும் இணைக்க விருப்பம் உண்டா?

பதில்: இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்தால் சூப்பர். இல்லாவிட்டாலும் கூட சூப்பர் தான். இதை பற்றி நான் பெரிதாக யோசிக்கவில்லை. இருவரும் சேர வேண்டும் என்று மற்றவர்கள் போலத்தான் விரும்புகிறேன்.

கேள்வி: தமிழ்நாட்டு அரசியலில் என்னென்ன மாற்றங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அப்பாவின், மக்கள் நீதி மய்யம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நான் மும்பையில் இருந்ததால் ஓட்டு போடுவதற்காக சென்னைக்கு வரவில்லை. மக்கள் நீதி மய்யம் பற்றிய செய்திகளை அதிகம் படிக்கிறேன். மக்கள் ஒரு மாற்றத்திற்கான எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. தமிழகத்தில் மாற்ற வேண்டியது நிறைய இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கிடையாது.. இந்தியாவிலேயே மாற்ற வேண்டியது நிறைய இருக்கிறது.... நிறைய மாற வேண்டும். ஆனால் அதைப் பற்றி எல்லாம் சொல்லும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை.

கேள்வி: அக்கா ஸ்ருதி கடவுள் நம்பிக்கை உடையவர். ஆனால் நீங்கள் அதற்கு நேர் எதிர். வீட்டில் இருவரும் சண்டை போட்டுக் கொள்வீர்களா?

பதில்: (சிரிக்கிறார்) எல்லா வீடுகளிலும் நடப்பது போல் தான் எங்கள் வீட்டிலும் நடக்கும். பயங்கரமாக சண்டை போடுவோம். ஆனால் அடித்துக் கொள்ள மாட்டோம். சில நாட்கள் பேசாமல் இருப்போம். பின்னர் அப்பா, எங்களிடம் ஏன் என்ன ஆனது? என்று கேட்டு எங்கள் இருவரையும் சமாதானப்படுத்துவார். நிஜம் பேசணும்னா, ஸ்ருதிக்கு நான் தம்பி. நான் தான் குடும்பத்துக்கு பாதுகாப்பு என்று அடிக்கடிச் சொல்வாள். நான் அப்படித் தான் பக்குவமாக நடந்துக் கொள்வேன்.

கேள்வி: நடிகர் கமல், அப்பா கமல், அரசியல்வாதி கமல், யாரை பிடிக்கும்?

பதில்: அப்படி தனித்தனியாக எல்லாம் என்னால் அவரைப் பிரித்து பார்க்க முடியாது. எல்லா கமலையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் அவர் எல்லா ரோல்களையுமே சிறப்பாக செய்கிறார்.

கேள்வி: வாழ்க்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: வாழ்க்கை முழுக்க முழுக்க சவால்களால் நிரம்பியது. அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான்... நீங்கள் யார் என்பது முடிவு ஆகும். உங்களுக்கு பிடிக்காத, எதிர்பாராத விஷயங்களை கூட சந்திக்க நேரலாம். எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

கேள்வி: மற்ற நடிகைகளின் படங்களைப் பார்ப்பீர்களா? எந்த நடிகையை பார்த்தால் பொறாமையாக இருக்கும்?

பதில்: பொறாமை என்று சொல்ல முடியாது. ஆனால் கங்கனா ரணாவத் ரொம்ப பிடிக்கும். அவர் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கேள்வி: அப்பா நன்றாக சமைக்கத் தெரியும் என்பார். நீங்கள் சமைப்பீர்களா?

பதில்: அப்பா ரொம்ப பிரமாதமாக சமைப்பார். அது தான் சொன்னேனே... அவர் எல்லோ ரோல்களையுமே மிகவும் நேர்த்தியாக செய்வார். தெரியாத விஷயமாக இருந்தாலும் முழுவதும் தெரிந்துக் கொண்டு அதில் ஒரு நேர்த்தியைக் கொண்டு வந்து விடுவார். நான், வீட்டில் அவ்வப்போது சமைப்பேன். இந்திய உணவுகள், பாஸ்தா, மகாராஷ்டிரா, தமிழ்நாட்டு உணவுகள், செட்டிநாடு உணவுகள், கேக் போன்றவை செய்வேன். அம்மா, அப்பா தான் என் சாப்பாட்டின் முதல் ரசிகர்கள். அதே சமயம் அவர்கள் தான் என் கைப்பக்குவத்தின் முதல் விமர்சகர்களும் கூட!

கேள்வி: மும்பையில் ஹீரோயின்கள் சீக்கிரத்தில் காதலில் சிக்கி விடுவார்களே... உங்களுடையது காதல் கல்யாணமாக இருக்குமா?

பதில்: எங்கள் குடும்பத்தில் காதலுக்கு எப்போதுமே எதிர்ப்பு கிடையாது. பல காதல் திருமணங்கள் எங்கள் குடும்பத்தில் நடந்துள்ளது. சினிமாவில் சாதித்த பிறகே எனக்கு திருமணம் நடக்கும்.

கேள்வி: சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நல்ல விஷயங்களும் இருக்கின்றன. ஏகப்பட்ட கெட்ட விஷயங்கள் கொஞ்சம் அதிகமாக வருகிறது. அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். ஏதாவது தவறான செய்திகள், மோசமான கமெண்ட்கள் வந்தால், உடனே அதை அழித்து விடுவேன். அது தான் நமக்கும் நல்லது. சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சனைகள் வருகிறது. அந்த நேரத்தில் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். தவறுகளை தைரியமாக தட்டிக் கேட்க வேண்டும்.

நான் சமூகத்தில் தனித்துவமுடன் தைரியமாக வளர வேண்டும் என்பதே அப்பாவின் ஆசை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :