பிக் பாஸ் 3ல் பேருந்தில் பெண்களை இடித்த பேச்சு: கண்டித்த கமல், மன்னிப்பு கோரிய சரவணன்

கமல் ஹாசன்

பிக் பாஸ் 3 போட்டியாளர் சரவணன் கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ச்சியின் போது, தன்னுடைய கல்லூரி நாட்களில் பேருந்துகளில் பெண்களை இடித்திருக்கிறேன் என்று கமல் ஹாசன் முன்னிலையில் கூறியது பெரும் சர்ச்சையானது.

இச்சூழலில், அது பெரும் விவாதத்துக்குள்ளானது. இன்று திங்கள்கிழமை ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில், சரவணனை கன்ஃபஷன் அறைக்கு அழைத்த பிக் பாஸ் கமல் ஹாசன் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருமாறு வேண்டினார். அதற்கு சரவணன், "நான் பேசியது மிகப் பெரிய தவறு. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் இளம் வயதில் செய்தது போல் யாரும் செய்யக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே நினைத்தேன். தயவு செய்து மக்கள் என்னை மன்னித்துவிடுங்கள்." என்றார்.

என்ன நடந்தது?

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கின்போது, இயக்குநர் சேரனுக்கும் மற்றொரு போட்டியாளரான மீரா மிதுனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இயக்குநர் சேரன் தன்மீதான முன்பகையால் டாஸ்கின் போது கடுமையாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், நிகழ்ச்சியின்போது அவர் சேரன் மீது குற்றச்சாட்டை வைத்த விதம் அங்கிருந்த போட்டியாளர்கள் மற்றும் நேயர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வாரயிறுதியில் போட்டியாளர்களை சந்திக்கும் கமல் ஹாசன், இருவருக்குமிடையேயான பிரச்சனை குறித்து விரிவாக அலசினார். சேரன் மீதான மீரா மிதுனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசுகையில், அப்படி என்றால் தங்களால் பேருந்துகளில் நெரிசலின் போது செல்ல முடியாது என்றும், அங்கு யாரும் வேண்டுமென்று வந்து இடிப்படிதில்லை சிலர் உரசுவதற்காகவே வரலாம் என்றும் கூறியிருந்தார்.

அப்போது சேரன் மீரா இருவருக்கும் இடையே அமர்ந்திருந்த சரவணன் கையை உயர்த்தி, என்னுடைய கல்லூரி காலத்தில் நான் அவ்வாறு இடித்துள்ளேன் என்று கூற கூட்டத்தினரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

சரவணனின் இந்த கருத்தை கேட்டு கமல் ஹாசன் அதிர்ச்சி அடைந்தாலும் அவர் எதார்த்தமாக எடுத்து கொண்டதும், இப்படியொரு காட்சியை விஜய் டிவி ஒளிபரப்பியதும், சரவணின் கருத்தை வரவேற்று பார்வையாளர்கள் கைத்தட்டியதும் பெரும் விவாவதத்தை கிளப்பியுள்ளது.

கடுப்பான சின்மயி

சரவணின் தெரிவித்த கருத்துக்கு இணையத்தில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சின்மயி, "பொதுமக்கள் புழங்கக்கூடிய பேருந்து சேவையில், ஒருவர் பெருமையாக பெண்களை இடிப்பதற்காக செல்வேன் என்கிறார். அதையும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒளிப்பரப்பியுள்ளது. இது பார்வையாளர்களுக்கும், கைத்தட்டும் பெண்களுக்கும், சம்பவந்தப்பட்டவருக்கு நகைச்சுவையாக இருக்கிறது." என்று ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தார்.

"6 வயதில் எனக்கு இப்படி நடந்தது"

பல பெண்கள் சின்மயிக்கு தங்கள் எதிர்கொண்ட அனுபவங்களை அனுப்பி வருகின்றனர். சின்மயியும் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் இந்த கதைகளை பகிர்ந்து வருகிறார்.

அதில் ஒருவர், "இதை நகைச்சுவை என்று எப்படி எடுத்துகொள்ள முடியும். என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. எனக்கு 6 வயதான போது, முதல்முறையாக இப்படியொரு சூழலை எதிர்கொண்டேன். ஒரு வயதானவர் எனக்கு அப்போது முளைத்திருக்காத மார்பகங்களை அழுத்தினார். அவர் என்ன செய்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்போது நான் உதவி கேட்ட இன்னோருவர், நான் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததை பார்த்து என்னை தன்பக்கம் இழுத்துகொண்டார். இப்போது, அந்த முதியவரைவிட மிக அழுத்தமாக என்னுடைய நெஞ்சை அழுத்த ஆரம்பித்தார். நான் பல நாட்கள் இந்த சம்பவத்தை எண்ணி வேதனைப்பட்டுளேன்," என்று தனக்கு பேருந்தில் நேர்ந்த அவலம் குறித்து பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Chinmayi Sripaada

கமல் ஹாசனுக்கு எதிராக திரண்ட பாஜகவினர்

இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ள பாஜக தொண்டர்கள் இணையத்தில் தங்களது கண்டனங்களை பதிந்து வருகின்றனர். பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, கமல் ஹாசன் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், பொது வாழ்விலிருந்து வெளியேற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்து பிக் பாஸ் ஒருங்கிணைப்பாளர்கள் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை ஹாட் ஸ்டாரிலிருந்து நீக்கியுள்ளனர்.

இலங்கையில் இருந்து BIGG BOSS நிகழ்ச்சிக்கு Losliya சென்றது எப்படி?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :