நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கில் ஐசரி கணேஷிற்கு ரூ.10 லட்சம் அபராதம்

ஐசரி கணேஷ்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது வழக்கம். நாசர், விஷால் தலைமையிலான அணி கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது.

2018ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தலை கட்டடப் பணியை காரணம் காட்டி தள்ளிப் போடப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் 23ந்தேதி தேர்தலை நடத்த திட்டமிட்டார்கள். எதிர்ப்புகள் வராது என்று நினைத்திருந்த நேரத்தில் ஐசரி கணேஷ், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி நாசர், விஷால் அணியை எதிர்த்து களம் இறங்கியது.

தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இடத்துக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுத்ததால் விஷால் தரப்பு ஐகோர்ட்டை நாடியது. தேர்தலை கடந்த முறை நடத்திய மயிலாப்பூர் புனித எப்பாஸ் கல்லூரியில் நடத்துவதற்கு தேவையான காவல்துறை பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி சங்கத்தின் பொது செயலாளர் விஷால் தொடர்ந்த வழக்கை ஜூன் 22ந்தேதி மாலை 5 மணிக்கு அவசர வழக்காக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

இந்நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியின் பொது செயலாளர் வேட்பாளரான ஐசரி கணேஷ் சார்பாக இந்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டாம் என்று அனந்தராமன் என்பவர் அணுகியதாக நீதிபதி குறிப்பிட்டார்.

வக்கீல் அனந்தராமன் ஜூன் 22 மாலை மொபைல் மூலமாக நீதிபதியை தொடர்பு கொண்டும், பின்னர் நீதிபதி வீட்டிற்கு நேரிலும் சென்று வழக்கை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

நடிகர் சங்கம் நெருக்கடியில் இருந்த காலத்தில் மிகவும் உதவிகரமாக ஐசரி கணேஷ் இருந்ததால், அதற்கு கைமாறாக வழக்கை இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து, தேர்தலை தள்ளிவைக்கும்படி ஐசரி கணேசுக்காக அனந்தராமன் தன்னை அணுகியதாக நீதிபதி குறிப்பிட்டார். இதையடுத்து, இருவர் மீதும் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்தார்.

நீதி விசாரணை நடைமுறையில் முறைகேடாக தலையிட்ட ஐசரி கணேஷ், அனந்தராமன் இருவரையும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஏன் தண்டிக்க கூடாது என்பது குறித்து இருவரும் நான்கு வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். பின்னர் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று இருவர் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்ததுடன் இன்று (திங்கள்கிழமை) இருவரும் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி இன்று ஐசரி கணேஷ், அனந்தராமன் இருவரும் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து ஐசரி கணேஷ், அனந்தராமன் இருவரையும் நீதிபதி மன்னித்தார். அவர்களுக்கு அபராதமாக 10 லட்ச ரூபாய் விதிக்கப்பட்டது. இந்த தொகை சட்டபணிகள் ஆணையத்துக்கு தரப்பட்டு அங்கு இருந்து மாறுபாலினத்தவர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக செலவழிக்கப்படவும் உத்தரவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்