நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போனது

கொலையுதிர் காலம் படத்தின் காப்புரிமை Facebook

நயன்தாரா கதாநாயகியாக நடித்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொலையுதிர் காலம் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்தப் படம் இன்று, ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

நயன்தாரா, பூமிகா, பிரதாப் போத்தன், ரோகிணி ஆகியோர் நடிக்க, சக்ரி டோலடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கொலையுதிர் காலம். சக்ரி டோலடி ஏற்கனவே உன்னைப் போல் ஒருவன், பில்லா - 2 ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

Hush என்ற ஆங்கிலப் படத்தின் ரீ-மேக்கான இந்தப் படம் தமிழில் கொலையுதிர் காலம் என்ற தலைப்பிலும் இந்தியில் காமோஷி என்ற பெயரிலும் உருவாக்கப்பட்டது. இந்தியில் தமன்னா, பிரபுதேவா ஆகியோர் நடித்திருந்தனர்.

காது கேட்காத, வாய் பேச முடியாத பெண் ஒருவரை ஒரு மர்ம மனிதன் கொல்ல முயல்கிறார். தனியாக வீட்டிற்குள் மாட்டிக்கொள்ளும் அந்தப் பெண் எப்படி தன்னைக் கொல்ல முயல்பவனிடமிருந்து தப்புகிறாள் என்பதுதான் கதை.

கொலையுதிர் காலம், காமோஷி ஆகிய இரு படங்களுமே ஜூன் 14ஆம் தேதி வெளியாகுமென முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொலையுதிர் காலம் என்ற தலைப்பைப் பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதால், ஜூன் 14ஆம் தேதி அந்தப் படம் வெளியாகவில்லை. ஆனால், காமோஷி வெளியாகிவிட்டது.

படத்தின் காப்புரிமை Facebook

இதற்குப் பிறகு, ஜூலை 26ஆம் தேதி இந்தப் படம் வெளியாகுமென சொல்லப்பட்டது. வெகு சீக்கிரத்திலேயே அந்தத் தேதி மாற்றப்பட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்திற்கான முன்பதிவும் துவங்கி, நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், நேற்று திடீரென படத்திற்கான முன்பதிவு நிறுத்தப்பட்டது. படம் எப்போது வெளியாகுமென இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்தியில் வெளியான காமோஷி சரியான வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுவருகிறது.

இந்த வாரம் மொத்தமாக 9-10 படங்கள் வெளியாகுமென வாரத் துவக்கத்தில் அறிவிப்புகள் வெளியாகின. பிறகு பல படங்கள் பின்வாங்கிவிட, கழுகு - 2, ஜாக்பாட், ஐ-ஆர் 8, தொரட்டி, Fast & Furious: Habbs and Shaw ஆகிய படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்