காஷ்மீரில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் என்னென்ன?

காற்று வெளியிடை

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை ரத்து செய்யப்பட்டு, அவை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றியபோது காஷ்மீரில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினார்.

அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கையின் மூலம் ஏற்படக்கூடிய பலன்களை விளக்கிய நரேந்திர மோதி, இந்த முடிவால், ஜம்மு & காஷ்மீரில் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பெருமளவில் நடக்கும் என்றார்.

இதனால் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினார் மோதி.

இதற்கு முன்னர், காஷ்மீரில் எடுக்கப்பட்ட சில தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

காற்று வெளியிடை

மணி ரத்னத்தின் எழுத்து மற்றும் இயக்கத்தில் கார்த்திக், அதிதி ராவ் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் பகுதியளவு காட்சிகள் ஜம்மு & காஷ்மீரில் படமாக்கப்பட்டன.

தொடக்கத்தில் தமிழகத்தின் நீலகிரி, ஊட்டி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், பிற்பகுதியில் ஜம்மு & காஷ்மீரில் உள்ள லே, லடாக் ஆகிய பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

தமிழ் மொழியில் வெளியான அதே நாளில் இந்த திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு 'செழியா' என்ற பெயரில் வெளியானது.

வாகா

ஜி. என். ஆர். குமரவேலன் இயக்கத்தில், விக்ரம் பிரபு மற்றும் ரன்யா ராவ் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் வாகா.

கதைப்படி, தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்திய ராணுவத்தில் இணைந்தவுடன், ஜம்மு & காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியமர்த்தப்படுகிறார். அங்கு உள்ளூர் பெண் ஒருவர் மீது காதல் கொள்ளும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை கடும் பாதுகாப்பு நிறைந்த எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் ராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் படமாக்கியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இருமுகன்

ஆனந்த் சங்கர் எழுத்து மற்றும் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியானது இருமுகன் திரைப்படம்.

விக்ரம் உடன் நயன்தாரா இணைந்து நடித்த இந்த திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகள் சென்னை, பாங்காங், மலேசியா மட்டுமின்றி லடாக் பகுதியிலும் படமாக்கப்பட்டன.

இந்த திரைப்படத்தின் தமிழில் வெளியான அதே நாளில், தெலுங்கு மொழியில் இன்க்கொக்கடு என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மேற்குறிப்பிட்டுள்ள திரைப்படங்கள் மட்டுமின்றி வேலாயுதம், அலைபாயுதே, அன்பே வா, ராமன் தேடிய சீதை, தேன் நிலவு உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்கள் அல்லது சில காட்சிகள் ஜம்மு & காஷ்மீரில் படமாக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதை தவிர்த்து 3 இடியட்ஸ், ராஸி, ஜப் தக் ஹை ஜான், பஜ்ரங்கி பைஜன், ஹைவே, ஹைதர் உள்ளிட்ட பல்வேறு பிரபல பாலிவுட் திரைப்படங்களும் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்