பிக் பாஸ்: சரவணன் வெளியேற்றம் குறித்து கமல் ஹாசன் பேசாதது ஏன்?

பிக் பாஸ் - 3 சரவணன் படத்தின் காப்புரிமை VIJAY TV / FACEBOOK

பிக் பாஸ் 3 போட்டியாளர் சரவணனின் திடீர் வெளியேற்றம் குறித்து நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபற்றி ஒருவார்த்தைகூட அவர் பேசாதது நேயர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எதற்காக வெளியேற்றப்பட்டார் சரவணன்?

வாரயிறுதி நாட்களில் போட்டியாளர்களை சந்திக்கும் கமல் ஹாசன், இரு வாரங்களுக்கு முன்பு சேரன் - மீரா மிதுன் இடையேயான பிரச்சனையை சமரசம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென குறுக்கிட்டு பேசிய சரவணன், என்னுடைய கல்லூரி காலத்தில் நானும் பெண்களை இடித்துள்ளேன் என்று பேசினார். இது சமூக ஊடங்களில் பெரும் விவாத பொருளானது. சரவணனின் கருத்தை கமல் ஹாசன் கண்டிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும், இதை விஜய் டிவி எடிட் செய்திருக்கலாமே என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த நிகழ்ச்சி குழு, சரவணனை பகிரங்க மன்னிப்பு கோர வைத்தது. அவரும், "நான் என்னுடைய கருத்தை கமல் முன்னிலையில் முழுமையாக பதிவு செய்ய முடியவில்லை. நான் செய்தது போல் யாரும் செய்ய வேண்டாம் என்றே கூற எண்ணினேன். நான் பேசியது தவறுதான். அதற்காக பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்," என்றார்.

இச்சுழலில், சில தினங்களுக்கு முன்பு, நிகழ்ச்சியின் பாதியில் கன்ஃபஷன் அறைக்கு அழைக்கப்பட்டார் சரவணன். "மீரா மிதுன் - சேரன் பிரச்சனை குறித்து கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கும்போது, பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதற்காகவே சிலர் வருவது குறித்துப் பேசினார்.

அப்போது கையை உயர்த்திய நீங்கள், தானும் அப்படி நடந்திருப்பதாகக் கூறினீர்கள். அந்தத் தருணத்தில் மீரா - சேரன் பிரச்சனையால் இதைக் கவனிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு, ஜூலை 29ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இதற்காக மன்னிப்பும் கோரினீர்கள்.

ஆனால், இந்த நிகழ்ச்சி கோடிக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது. பெண்களை தவறாக நடத்துவதை அனுமதிக்க முடியாது. அதனை கண்டிக்கிறோம். இதன் காரணமாக, நீங்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப் படுகிறீர்கள். உங்களுக்கு இடதுபுறம் இருக்கும் கதவைத் திறந்து வெளியேறுங்கள்" என்று சொல்லப்பட்டது.

அழுது துடித்தவர்கள் கமலிடம் கேள்வி கேட்கவில்லை

சரவணனின் இந்த திடீர் வெளியேற்றம் குறித்து சக போட்டியாளர்களிடம் பிக் பாஸ் தெரிவித்தபோது, போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்து அழத் தொடங்கினார்கள். சிலமணி நேரங்கள் பிக் பாஸ் வீட்டில் அனைவரும் அமைதியாக இருந்தனர். மேலும், சிலர் இதுகுறித்து பிக் பாஸிடம் கேள்வி கேட்டனர். அதற்கு, சனிக்கிழமை நிகழ்ச்சியின்போது, சரவணன் வெளியேற்றப்பட்டது ஏன் என்ற காரணம் தெரியவரும் என்று பிக் பாஸ் கூறினார்.

சரவணன் வெளியேற்றத்துக்கு சனிக்கிழமை பதில் கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில் கமல் ஹாசன் அதுகுறித்து ஒருவார்த்தைகூட பேசவில்லை. சரவணன் வெளியேற்றம் குறித்து பிக் போட்டியாளர்கள் யாராவது கேள்வி எழுப்புவார்களா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு எதுவுமே நடக்காமல் போனது மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது.

படத்தின் காப்புரிமை vijay tv/ facebook

"பழையன கழிதலும், புதியன புகுதலும்"

சில தினங்களுக்குமுன், பிக் பாஸ் 3 போட்டியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நடிகை கஸ்தூரி இணைந்தார். இதை சனிக்கிழமை நிகழ்ச்சியின்போது சுட்டிக்காட்டிய கமல் ஹாசன், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழியை அவர் பாணியில் கூறினார். இதில் பழையது என்பதை சரவணனைதான் அவர் குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை.

பொதுவாக, நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறும் போட்டியாளர்கள் வாரயிறுதி நாட்களில் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கும் பிரியாவிடை பிக் பாஸ் குழு சார்பில் கொடுப்பது வழக்கம். சீசன் 1 போட்டியாளர்கள் பரணி, ஓவியாவுக்கு அப்படித்தான் நடந்தது. ஆனால், இம்முறை சரவணன் விஷயத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை இன்று (ஞாயிறு) ஒளிப்பரப்பாக போகும் நிகழ்வில் சரவணன் பேசுவாரா என்பது தெரியவில்லை.

கமலை ஒருமையில் பேசினாரா சரவணன்?

சரவணன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை தெரிவித்து அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட பிறகும் பிக் பாஸ் குழு அவரை வெளியேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியேற்றப்பட்டதற்கு, அவர் கமல் ஹாசனை ஒருமையில் பேசினார் என்ற காரணம் சொல்லப்படுகிறது. அதற்கு ஆதாரமாக ஒரு காணொளியும் இணையத்தில் பரவி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :