பிக் பாஸ்: மதுமிதா தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள யார் காரணம்? கமல் கூறியது என்ன?

பிக் பாஸில் வெளியேற்றப்பட்ட சரவணன் - அழுத சக போட்டியாளர்கள் படத்தின் காப்புரிமை Vijay Television

சரவணனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் மதுமிதா. அதுவும் கையில் காயத்துடன்.

நேற்றைக்கு முன் வரை

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட சில நடைமுறைகள் உள்ளன. முதலில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் நாமினேசன் செய்ய வேண்டும்.

பின் நிகழ்ச்சியின் நேயர்கள் யாருக்கு குறைவான வாக்களிப்பார்களோ அவர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார்கள். இதுதான் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து பின்பற்றப்பட்ட நடைமுறை. இப்படித்தான் ஃபாத்திமாபாபு முதல் சாக்ஷி அகர்வால் வரை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை VIJAY TV / FACEBOOK

ஆனால், இப்படி இல்லாமல் நிகழ்ச்சியின் பாதியிலிருந்து சரவணன் வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணம் ஒரு வாதத்தின் நடுவில், 'நானும் என் கல்லூரி காலத்தில் பெண்களை இடித்துள்ளேன்' என்ற தொனியில் பேசினார்.

இதற்கு சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்தது. பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த பிக் பாஸ் குழு சரவணனை மன்னிப்பு கோர வைத்தது. சரவணனும் மன்னிப்பு கேட்டார்.

பிரச்சனை அத்துடன் முடிந்தது என்று அனைவரும் கருதிய வேளையில், நிகழ்ச்சியின் பாதியிலிருந்து வெளியேற்றப்பட்டார் சரவணன். இது சக போட்டியாளர்களை வருத்தமடைய வைத்தது.

வார இறுதியில் சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்து விளக்கப்படும் என பிக் பாஸ் கூறி இருந்தார். ஆனால், இதுநாள் வரை அது குறித்து விளக்கப்படவில்லை.

சரி. இதுவெல்லாம் ஒரு வாரத்திற்கு முந்தைய கதை. நேற்று என்ன நடந்தது என பார்ப்போம். அதற்குமுன் ராசாத்தி குறித்து பார்ப்போம்.

'வாடி... ராசாத்தி'

கடந்தவாரம் "வாடி ராசாத்தி" என்ற பாடல் பில்டப்புடன் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார் வனிதா.

படத்தின் காப்புரிமை Vijay TV

அவர் வந்தவுடனே எல்லோரும் பதற்றம் அடைந்தார்கள். ஒரு வாரம் ஹோட்டால் டாஸ்க்கில் கெஸ்டாக வீட்டில் இருப்பார் என பிக் பாஸ் அறிவித்தார். ஒரு வாரம்தானே என்ற நம்பிக்கையில் இருந்த பிக் பாஸ் வீட்டினருக்கு, அவர் பிற டாஸ்க்கில் பங்கேற்க தொடங்கியதும் பதற்றம் பீதியாக மாறியது.

பார்வையாளர்களின் நம்பிக்கைக்கு எந்த பங்கமும் வந்துவிடாத வண்ணம் வனிதா தான் வந்த காரியத்தை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்.

கடந்த ஒரு வாரம்

ஒரு வாரத்திற்கு முந்தைய கதை போல இல்லாமல், கடந்த ஒரு வாரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் பெண் என பிரிந்து நின்றனர். "ஆண்கள் எல்லாம் பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்" என்ற பதத்தை மதுமிதா பயன்படுத்திய பின்பு பிக் பாஸ் வீட்டில் அனல் பறக்க தொடங்கியது.

இந்த அனலுக்கு காரணமாக தீக்குச்சியாக வீட்டுக்கு விருந்தாளியாக வந்த வனிதா இருந்தார் என்றால், எண்ணெய்யாக கஸ்தூரி இருந்தார்.

ஓர் உறைக்குள் இரண்டு கத்தி இருக்க முடியாது என்பது போல, வனிதா வீட்டுக்குள் வந்ததிலிருந்து கஸ்தூரி - வனிதா உறவு இறுக்கமாக இருந்தது.

பிக் பாஸ் வீட்டு புல்வெளியில் புதைக்கப்பட்ட கவினின் காதல் கதைகளும், முகென் அபிராமி ஊடல் கதையும் தோண்டி எடுத்து இந்த வாரம் அதற்கு உயிரூட்டப்பட்டன.

படத்தின் காப்புரிமை vijay tv

அபிராமி - முகென் பிரச்சனையை அலசி எடுத்து காயப்போட்டதில் கோபமடைந்த முகென் நாற்காலியை இறுக்கமாக பிடித்தார். சோஃபாவுக்கு அடுத்து நாற்காலி உடைய போகிறது என்று அச்சத்தில் இருந்த நிலையில் இறுதியில் முகென் உடைந்து அழுதார்.

அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பார்வையாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என தன்னுடைய கருத்தையும் சேர்த்து விவரித்தார்.

மொத்த பிக் பாஸ் வீடும் பல அணிகளாக பிரிந்து நின்றது. லொஸ்லியா, முகின், கவின், தர்ஷன் மற்றும் சாண்டி ஓரணி என்றால், எதிரில் ஒவ்வொருவரும் ஓரணியாக நின்றார்கள்.

யார் அணியில் சேருவது என்று தெரியாமல் வெண்டைக்காய் நறுக்கி யோசித்த சேரன், இறுதியில் மதுமிதாவை ஆதரித்தார்.

படத்தின் காப்புரிமை Vijay Tv

சாண்டி குழுவின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று "நான் யார் அணியிலும் இல்லை. எனக்கென ஒரு கருத்து இருக்கிறது. நான் அதில் நிற்கிறேன்" என்று சொல்லாமல் சொன்னார் ஷெரீன்.

இப்படியாக போய் கொண்டிருந்த பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற்றார் மதுமிதா.

இந்த சூழலில், முகென் வனிதாவை தாக்கிவிட்டதாக ட்வீட்டுகள் வெள்ளிக்கிழமை பரவலாக பரவின.

ஏதோ பெரிதாக நடந்தவிட்டது என பார்வையாளர்கள் சனிக்கிழமை நிகழ்ச்சிகாக காத்திருந்த வேளையில், வழக்கமாக சனிக்கிழமை பிக் பாஸ் ப்ரமோ வெளியாகும் நேரத்தில் வெளியாகவில்லை. இது பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பை கூட்டியது.

கையில் கட்டுடன் மதுமிதா

இப்படியான சூழலில் சனிக்கிழமை மாலை 4.40க்கு வெளியான ப்ரமோவில் கையில் கட்டுடன் மதுமிதா தோன்றினார். கமலும் "உங்களுடைய தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றார்.

பிக் பாஸ் வீட்டில் ஏதோ பெரிய கலாட்டா நடந்திருக்கிறது என அனைவரும் ஸ்டார் தொலைக்காட்சி, ஹாட் ஸ்டார் என கிடைத்த மீடியங்களில் எல்லாம் சனிக்கிழமை இரவு ஒளிப்பரப்பான நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்.

எந்த பில்டப்பும் இல்லாமல் நேரடியாக மதுமிதா விவகாரத்திலிருந்தே நிகழ்ச்சியை தொடங்கினார் பிக் பாஸ்.

பிக்பாஸ் சொன்ன காரணம் என்ன?

டாஸ்க்குக்கு பின் நடந்த ஒரு விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக் பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எரிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார் என என பிக்பாஸ் அறிவித்தார்.

பின் நிகழ்ச்சியில் தோன்றினார் மதுமிதா.

படத்தின் காப்புரிமை Vijay Tv

அப்போது பேசிய கமல், "கொஞ்ச நாட்கள் முன்பு வரை வெற்றி வாய்ப்பு உள்ளவர்கள் பேரில் உங்கள் பெயரும் அடிபட்டது. வெளியே மட்டும் அல்ல உள்ளே இருப்போர் (பிக்பாஸ் வீட்டில் இருப்போர்) முன் வைத்த பேரிலும் உங்கள் பெயர் இருந்தது. இப்போதும் கேப்டன்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை வெளியேற்றுவதற்கான அனைத்து வாய்ப்பும் அகன்று, தட்டில் வைத்து கொடுக்கப்பட்ட இந்த வெற்றியை தட்டிவிட்டுவிட்டு இங்கே வந்து நிற்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது," என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய மதுமிதா, "நான் தைரியமான பெண் என்று எல்லாருக்கும் தெரியும். என் தைரியம் எந்த அளவுக்கு சோதிக்கப்பட்டிருந்தால் இந்தவொரு முடிவுக்கு வந்திருப்பேன்," என்றார்.

மேலும் அவர், "இதுகுறித்த காட்சிகளில் ஒளிப்பரப்பலாமா அல்லது வேண்டாமா என்பதை அவர்கள் (விஜய் டீவி தரப்பு) முடிவு செய்யட்டும். நான் என் கருத்தை நான் அங்கு வெளிப்படுத்தினேன். என்னை எவ்வளவு இழிவாக, கீழ்தரமாக பேச முடியுமோ அவ்வளவு பேசி என்னை முட்டாள், கேப்டன்சிக்கு தகுதி இல்லாதவள், நான் இருந்தால் நாங்கள் இருக்கமாட்டோம் என பேசிய போது, யார் முட்டாள் என தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதற்காக இப்படி செய்தேன்," என்றார்.

உள்ளே நடந்த விவாதங்களை சேரனும், கஸ்தூரியும் தடுத்த நிறுத்த சிரமப்பட்டதாகவும் மதுமிதா கூறினார்.

கமல், "இதன் மூலமாக நிரூபிக்கப்பட்டது உங்கள் கெட்டிக்காரத்தனமா அல்லது முட்டாள்தனமா?" என மதுமிதாவிடம் கேள்வி எழுப்பினார்.

இந்த மாதிரியான முன் உதாரணத்திற்கு மதுமிதா காரணமாக இருந்திருக்க கூடாது என்றார்.

பின் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் பேசிய மதுமிதா, "எனக்கு சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர வேறு யாரையும் பார்க்க விருப்பமில்லை," என்றார்.

நிகழ்ச்சியில் என்ன நடந்தது என விவரிப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிகழ்ச்சியில் ஏன் மதுமிதா தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார் என்பது குறித்தம் காட்சிகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

தனக்கு ஆதரவாக சேரன் மற்றும் கஸ்தூரிதான் நடந்து கொண்டார்கள் என்று மதுமிதா கூறி உள்ளார். ஆகையால், இவர்கள் மதுமிதா தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ள காரணமில்லை. மதுமிதாவும் நேற்றைய நிகழ்ச்சியில் குறிப்பாக இவர்கள்தான் என்று யாரையும் சுட்டிக்காட்டி பேசவில்லை.

இன்றைய நிகழ்ச்சியிலாவது இதுகுறித்த காட்சிகள் வெளியிடப்படுமா அல்லது சரவணன் வெளியே சென்றபோது அதற்கான காரணத்தை கமல் விவரிக்காமல் போனது போல இதற்கும் ஆகுமா என்பது இன்று தெரியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்