உலகப் புகைப்பட தினம்: 'பதிவுசெய்ய முடியாத காட்சிகள் நம் நினைவில் இருந்து மறைவதில்லை'

உலகப் புகைப்பட தினம் படத்தின் காப்புரிமை AYASHOK SARAVANAN

'வேலையை விட்டு விட்டு, முழு நேர புகைப்படக் கலைஞராகப் போகிறேன்'. இந்த வசனத்தை சமீப காலங்களில் நாம் அதிகமாகவே கேட்டிருப்போம்.

அந்த அளவுக்கு புகைப்பட கலை பலரை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. அந்தத் துறையில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள் என்றால் விடை, கேள்விக்குறியாகவே இருக்கும்.

ஆனால், கார்ப்பரேட் பணியை கைவிடாமல், புகைப்பட கலை மீதான தனது ஈடுபாட்டை மேம்படுத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் அசோக் சரவணன்.

தினமும் புகைப்படங்கள் எடுத்து அதை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவது இவருக்கு வாடிக்கையாக உள்ளது. இருக்கும் வேலையை உதறி விட்டு, புகைப்பட பணியை மட்டும் செய்ய விரும்பவில்லை என்பது இவரது வாதம்.

காரைக்குடியை பூர்விகமாக கொண்ட இவர், சென்னைக்கு வந்த பிறகு ஆரம்பத்தில் ஸ்ட்ரீட் போட்டோகிராபியில் தனது புகைப்பட தொகுப்புகளை உருவாக்கினார்.

மனிதர்கள், அவர்களின் கலாசாரம், வாழ்க்கை முறை என மானுடவியலில் தொடர்பான புகைப்பட தொகுப்புகளை அதிகமாக வழங்கும் இவர், அதற்கான காரணத்தையும் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

படத்தின் காப்புரிமை AYASHOK SARAVANAN
Image caption புகைப்பட கலைஞர் அசோக் சரவணன்

இந்தியாவின் பல இடங்களுக்கு செல்லும் நீங்கள், கேமிராவில் கிளிக் செய்யாத காட்சி என எதை கருதுகிறீர்கள்?

ஒருமுறை பெங்களூரில் இருந்து கூர்க் அருகே உள்ள யானைகள் சரணாலயத்துக்கு சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு பெளத்த பிக்கு (buddhist monk ) பல வண்ண குடைகளுடன் நின்று கொண்டிருந்தார் . அவரை சூழ்ந்தபடி ஏராளமான பசுக்கள் இருந்தன. சாலையின் இரு பக்ககங்களிலும் மரங்கள் அடர்ந்து காணப்பட்டன. அதிகாலை சூரிய ஒளி அவரின் வண்ண குடை வழியாக பல வண்ண நிறங்களாக பிரதிபலித்தன. ஆனால் அந்த யானை முகாமுக்கு குறிப்பிட்ட நேரம்வரை மட்டுமே அனுமதி உண்டு.

எனவே அங்கு சென்றுவிட்டு திரும்பும்போது இவரை படம் எடுக்கலாம் என முடிவெடுத்தேன். ஆனால் திரும்பி வந்து பல மணி நேரம் காத்திருந்தும் அங்கு யாரும் வரவில்லை. அத்தகைய காட்சி மீண்டும் அமையவில்லை. அவரை பல இடங்களில் தேடி அலைந்திருக்கிறேன். ஆனால் பலன் இல்லை. நாம் பார்க்கும் காட்சிகளையும் அனைத்தையும் நம்மால் படமாக்க முடியும் என நம்புகிறேன்.

பல காட்சிகள் நம் முன் தோன்றி மறைகின்றன. தவறவிட்ட காட்சியை ஒரு நாள் நிச்சயம் தேடி சென்று பதிவுசெய்வேன் . பொதுவாக நாம் பதிவு செய்த காட்சிகளை மறந்துவிடுவோம் . ஆனால் பதிவுசெய்ய முடியாத காட்சிகள் என்றும் நம் நினைவில் இருந்து மறைவதில்லை.

படத்தின் காப்புரிமை ayashok photography

மல்டிபிள் exposure முறையில் உங்கள் மனைவி மற்றும் மகளை வைத்து எடுத்த புகைப்படங்கள் குறித்து கூற முடியுமா? அந்த அனுபவத்தை விவரிக்கிறீர்களா?

2007-இல் என் நன்பர் ஒருவர் எஃபெல் கோபுர காட்சியை என்னிடம் காண்பித்தார். ஃபோட்டோஷாப்பில் அந்த படம் எடிட் செய்யப்பட்டிருந்தது என நினைத்தேன். பிறகு அந்த படம் குறித்து பல நண்பர்களுடன் சேர்ந்து உரையாடியபோது, multiple exposure என்ற தொழில்நுட்பம் மூலம் அது எடுக்கப்பட்டது என அறிந்தேன். அதாவது இரண்டுக்கும் மேலான புகைப்படங்களை நாம் ஒரே காட்சியில் blend செய்யமுடியும், பிறகு 2013ல் நான் வாங்கிய புதிய கேமராவில் இந்த வசதி இருந்ததை தெரிந்து கொண்டேன். உடனே ஒரு மாடலை வைத்து அந்த தொழில்நுட்பத்தை பயன் படுத்தி பார்க்கவேண்டும் என முடிவு செய்தேன்.

மேலும் இதில் இரண்டு காட்சிகளை blend செய்ய முடியும் எனபதால், இரண்டு நபரின் உறவை குறித்து அல்லது ஒரு தனிமனிதனின் அடையாளம் குறித்து பதிவுசெய்யலாம் என்ற யோசனை தோன்றியது. எனவே என் மகள் மற்றும் மனைவியை ஒரே காட்சியில் பதிவு செய்ய முடிவு செய்தேன். அவர்களை மட்டும் மையமாக வைத்து 2013ல் இருந்து இன்று வரை பல காட்சிகளை உருவாகி இருக்கிறேன்.

Multiple Exposure-இல் பல சவால்களும் உள்ளன, அதனால் தான் அதை தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். இவ்வாறான புதிய தொழிநுட்பத்தை நம்மை சார்ந்தவர்கள் வைத்து நம்மால் எளிதாக கற்றுக்கொள்ள முடியும் , மேலும் இந்த புகைப்படங்கள் அவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும். நம் தொழிலை தவிர்த்து நாம் செய்யும் கலை சார்ந்த விஷயங்கள் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என்பதை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

படத்தின் காப்புரிமை AYASHOK SARAVANAN

என் மகள் பிறந்த 17-ஆவது நாளில் அவரை புகைப்படம் எடுக்கத் துவங்கினேன்.. அவளின் எல்லா செயல்களையும் பதிவு செய்துள்ளேன். சமீப காலமாக அவரும் ஒரு சிறிய கேமராவில் புகைப்படம் எடுக்கத் தொடங்கியிருக்கிறார். அதனால் அவரை இப்போதெல்லாம் தொந்தரவு செய்வதில்லை..

இந்த தொழில்நுட்பத்தை அவர்களை வைத்து தொடர்ந்து பயிற்சி எடுக்கும்போது அது பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன.

சமீபத்தில் கஜுரஹோ குறித்த சில வரலாறை படித்துவிட்டு அங்கு சென்றிருந்தேன். பல ஆண்டுகளாக கஜுரஹோ சிற்பங்கள் மற்றும் கோவில்கள், காடுகள் சூழ்ந்த இடமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்தபோது வியப்பாக இருந்தது. அந்த இடத்தை மீண்டும் காட்சிப்படுத்தி பார்க்க விரும்பினேன். Multiple Exposure மூலம் அது சாத்தியமானது..

படத்தின் காப்புரிமை AYASHOK SARAVANAN

மறக்கமுடியாத பயண அனுபவங்கள் என்ன?

ஆக்ரா தாஜ்மஹால் முன்பு தொழிலாளர்கள் கூர்மையான ஆயுதங்களுடன் வேலை செய்துகொண்டிருந்தார்கள், அவர்களை தாஜ்மஹால் உடன் சேர்த்து புகைப்படம் எடுக்க விரும்பினேன். ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார்கள். எடுக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்ததால். அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அந்த புகைப்படத்தை நான் நினைத்தவாறு காட்சிப்படுத்தி, Making of தாஜ் என்று தலைப்பு கொடுத்தேன்.

தாஜ் மஹால் கட்டிய காட்சியை நம்மால் பார்க்க முடியவில்லை, அவ்வாறான காட்சியை உருவாக்கவும் முடியாது, ஆனால் அது நம்முன் தோன்றும்போது அதை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். பாபர் மசூதி தாக்குதலுக்கு பிறகு எந்த ஒரு பழமையான கட்டடம் அல்லது வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் ஆயுதங்கள் அல்லது கூர்மையான பொருட்கள் அனுமதிப்பதில்லை, எனவே இவ்வாறான காட்சிகள் அமைவது அரிது . நாம் எந்த இடத்திற்கு பயணம் மேற்கொண்டாலும் குறைந்த பட்சம் அதன் வரலாறு, அரசியல் , கலாசாரம் என சிலவற்றை தெரிந்துகொள்ள வேண்டும்.

படத்தின் காப்புரிமை AYASHOK

சென்னையில் உள்ள பல கட்டடங்கள் மற்றும் மெட்ரோ ரயில் கட்டமைப்பு, இந்தியாவின் வட மாநில தொழிலாளர்களின் உழைப்பு இல்லாமல் சாத்தியமாகாது என கூறும் அளவுக்கு, நவீன சென்னையை உருவாக்கியதில் அவர்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. மேலும் எனது சிறு வயதில் எனது உறவினர்கள் பலர் வளைகுடா நாடுகளுக்கு கட்டட வேலை பார்க்க சென்றார்கள். அந்த மஞ்சள் நிற தலை கவசத்தை பார்க்கும்போது , எங்களை விட்டு தூரம் சென்ற உறவினர்களே நினைவுக்கு வருவார்கள். தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல தொழிலாளர்கள் வாழ்வதால் அவர்களைப் பற்றிய பதிவுகள் மிகவும் அவசியம் என கருதினேன்.

படத்தின் காப்புரிமை ayashok photography

கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கையர் பங்கேற்கும் திருவிழாவை காட்சிப்படுத்த சென்றிருந்தேன். முதல் முறை அங்கு செல்வதற்கு முன்பு அவர்களை காட்சிப்படுத்துவதில் ஒரு பயமும் தயக்கமும் இருந்தது. ஆனால் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு அமைந்தது. அக்கா என்று அழைத்து பேச துவங்கிய பிறகு, அவர்களில் சிலர் தாமாக முன்வந்து படம் எடுக்க ஒத்துழைத்தார்கள்.

திருவிழாவின் அங்கமாக தாலி கட்டிக் கொள்ளும் சடங்கும் மறுநாள் கணவர் இறந்ததாக கருதி தாலியை அகற்றும் வழக்கத்தின்போது அனைவரும் கதறி அழுவார்கள். அந்த விழாவை முழுமையாக பதிவு செய்தேன். அதில் அவர்கள் திருமணத்துக்கு தயார் ஆகும் நிகழ்வுகள் உண்டு. அங்குள்ள ஏரியில் நீராடுவது போல் காட்சிகளை பதிவு செய்தேன். பிறகு அவர்களிடம் நான் எடுத்த புகைப்படங்களை காட்டியபோது மிகவும் மகிழ்ந்தார்கள். நாம் எங்கு யாரை புகைப்படம் எடுத்தாலும் அவர்களின் அனுமதி மிகவும் அவசியம். இரு தரப்பினருக்கும் அது நிம்மதி தரும்.

படத்தின் காப்புரிமை ayashok photography
படத்தின் காப்புரிமை ayashok photography

சென்னையின் Photowalk அமைப்புகள், புகைப்பட கலைஞர்களுக்கு எந்த வகையில் பயன் தருகிறது?

ஒருவர் புதிய இடத்துக்கு தனியே சென்று எல்லோரிடமும் பேசி பழக்கி அவர்களின் வாழ்வியலை பதிவு செய்வது சாதாரன விஷயம் அல்ல . ஆரம்ப காலத்தில் எல்லோரிடத்திலும் பேசுவதற்கு ஒரு தயக்கம் இருக்கும்.

அவ்வாறு photowalk மூலம் செல்லும்போது புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அனைத்து வயதினருடனும் பழக்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்த கலையில் உள்ள உத்திகள் சிலவற்றை கற்றுக்கொள்ள முடியும்.

இன்னும் சில இடங்களில் தங்களுடைய குழந்தைகளை வெளிநபர் ஒருவர் புகைப்படம் எடுப்பதை சிலர் விரும்பமாட்டார்கள். அந்த சூழ்நிலையில் வார விடுமுறை நாட்களில் இவ்வாறு கூட்டமாக செல்லும்போது அந்த பகுதியில் இருப்பவர்களிடம் பேசி, பழகி நண்பர்களாக முடியும் . சமயத்தில் நாங்கள் அந்த இடத்தை விட்டு திரும்பும்போது அங்குள்ள சிலர் வற்புறுத்தி எங்களை சாப்பிட வைத்து அனுப்பி இருக்கிறார்கள்.

நண்பர்களாக சேர்ந்து ஒரு இடத்தை அணுகும்போது யாருக்கும் அச்சமோ தயக்கமோ ஏற்பட வாய்ப்பு இல்லை. உறவினர்கள் போல சிலர் பழகுவதால், நாங்கள் எடுக்கும் புகைப்படங்களை திரும்பி அதே இடத்துக்குச் சென்று பிரதி எடுத்து அவர்களுக்கு அளிப்போம்.

அதை photowalk அமைப்புகள் மூலம் ஆரம்பத்தில் செய்து வந்தோம். இன்று பல புகைப்பட கலைஞர்கள் சென்னையில் அவ்வாறு செய்து வருகிறார்கள். அது மிகவும் ஆரோக்கியமான பழக்கம் என நினைக்கிறேன். நான் உட்பட நண்பர்கள் பலர் பிரதி எடுத்து கொடுத்த தங்களின் குழந்தைகள் அல்லது அவர்களின் வீட்டில் உள்ள முதியவர்களின் புகைப்படங்கள், அவர்களின் வீட்டில் மிக முக்கியமான இடத்தை பெற்றிருக்கும் என நம்புகிறேன்.

படத்தின் காப்புரிமை AYASHOK

சமூக வலைத்தளங்களில் நாம் பதிவு செய்யும் எந்த புகைப்படத்திற்கும் அழிவு இல்லை. அதே போல் பல வீடுகளிலும், சாலைகளில் உள்ள குழந்தைகளுக்கு, நாங்கள் கொடுத்த அவர்களின் புகைப்படங்களுக்கும் கூட நிச்சயம் அழிவு இல்லை. யாரோ ஒருவரின் வாழ்க்கையில் நல்ல நினைவுகளை வழங்கியிருக்கிறோம் என்பதுதான் புகைப்பட கலைஞர்களுக்கு கிடைக்கும் முக்கியமான மன நிறைவு.

புகைப்பட கலைஞர்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி, "உலக புகைப்பட தினமாக" கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் அசோக் சரவணன், தனது அனுபவங்களை நினைவுகூரும் இந்த கட்டுரையை பிபிசி தமிழ் வெளியிட்டுள்ளது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்