எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை நிகழ்ச்சி: இஸ்லாமிய புத்தாண்டில் எதிர்ப்புக்கு பிறகு நேரத்தை மாற்றிய மலேசிய அரசு

எஸ்.பி. பாலசுப்ரமணியம் படத்தின் காப்புரிமை Facebook
Image caption எஸ்.பி. பாலசுப்ரமணியம்

எதிர்வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற இருந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சிக்கான நேரத்தை மாற்றும்படி அந்நாட்டின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான துறை (ஜாகிம் - JAKIM) திடீரென உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாமியர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இசை, கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுவது இன நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடும் என்று அத்துறை விளக்கம் அளித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு 7 மணி முதல் 11 மணி வரை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் பல நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தனர். இதையடுத்து நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனையும் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தேவையின்றி விவாதிக்க விரும்பவில்லை என்றும், மலேசியாவின் அடையாளமாகத் திகழும் இன, மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சியின் நேரத்தை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை என மாற்றி உள்ளதாகவும் அதன் ஏற்பாட்டாளர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

இஸ்லாமிய விவகாரங்களுக்கான துறையின் திடீர் உத்தரவு

இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் ஆகஸ்ட் 31ஆம் தேதி இஸ்லாமிய புத்தாண்டுக்கான பொது விடுமுறை நாள் என்பதைச் சுட்டிக்காட்டிய இஸ்லாமிய விவகாரங்களுக்கான துறை, இசை நிகழ்ச்சியை வேறு தேதிக்கு மாற்றும்படியும், இல்லையெனில் நிகழ்ச்சிக்கான நேரத்தை மாற்றும்படியும் அறிவுறுத்தியது.

இது குறித்து வெளிநாட்டு கலைஞர் விவகாரங்களைக் கையாளும் புஸ்பால் (PUSPAL) என்ற அரசு நிறுவனத்துக்கும் குறிப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து இந்த அறிவுறுத்தலை ஏற்றுக் கொள்வதாக புஸ்பால் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை dinesh kumar

"இஸ்லாமிய புத்தாண்டு கொண்டாடப்படும் நாளில், தொழுகை வேளையில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவது சரியல்ல. இதனால் இன ரீதியிலான பதற்றம் ஏற்பட வாய்ப்புண்டு," என்று ஜாகிம் தெரிவித்ததாக மலேசிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நிலைப்பாடு என்ன?

இந்நிலையில் திடீரென எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நிகழ்ச்சியைக் குறிவைத்து ஜாகிம் இவ்வாறு அறிவுறுத்துவது நியாயம் அல்ல என்று அதன் ஏற்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டதாக ஒரு தகவல் வெளியானது.

அதே சமயம், இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிப்பதாகவும், அவர்களை அவமதிக்க விரும்பவில்லை என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாக மற்றொரு மலேசிய ஊடகமும் தெரிவித்தது.

இந்நிலையில் 'இளைய நிலா' என்ற தலைப்பிலான இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தினேஷ் குமாரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.

படத்தின் காப்புரிமை dinesh kumar

அப்போது இஸ்லாமிய விவகாரங்களுக்கான துறையின் அறிவுறுத்தலை ஏற்று நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தை மாற்றி அமைத்திருப்பதாக தெரிவித்தார்.

"நிகழ்ச்சியின் நேரத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தோமா? அதை ஏற்றுக் கொண்டோமா? என்பதையெல்லாம் விவாதிக்க எங்களுக்கு நேரமில்லை. எங்களைப் பொறுத்தவரை இவ்வாறு நேரத்தை மாற்றி இருப்பது அனைவருக்கும் தெரிய வேண்டும்.

"நுழைவுச்சீட்டு வாங்கியவர்களுக்கு இத்தகவலை தெரியப்படுத்தி வருகிறோம். அனைவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவாகப் பேசுவது உற்சாகம் அளிக்கிறது.

"பெரும்பாலானோர் நிகழ்ச்சிக்கு வருவதாகத் தெரிவித்துள்ளனர். 99 விழுக்காடு நுழைவுச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. எனவே இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும் என நம்புகிறோம்," என்றார் தினேஷ் குமார்.

இந்த நேர மாற்றம் குறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியத்திடம் தெரிவித்து விட்டதாகவும், அவரும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நேர மாற்றத்தை ஏற்றுக் கொண்டதாகவும் தினேஷ் குமார் மேலும் தெரிவித்தார்.

'அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் சிக்கல்கள் எழாது'

இதற்கிடையே, இஸ்லாமியர்களுக்கான முக்கியமான நாட்கள் குறித்த அறிவிப்பை ஜாகிம் முறைப்படி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால், இத்தகைய குழப்பங்கள் வராது என ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.

"இது குறித்து முன்பே தெரிய வந்திருந்தால், இந்தத் தேதிகளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யாமல் இருந்திருக்க முடியும். வெளிநாடுகளில் இருந்து கலைஞர்களை வரவைப்பது, நிகழ்ச்சி நடத்துவது, அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வது ஆகியவற்றுக்கு பெருந்தொகை செலவாகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கையை இஸ்லாமிய விவகாரங்களுக்கான துறை பரிசீலிக்க வேண்டும்," என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

'சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்று வெடித்த சர்ச்சை'

இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்று வெடித்த ஒரு சர்ச்சையை சிலர் நினைவூட்டுகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மலேசியா முருகன் கோயில் முன் செல்ஃபி எடுக்கும் இஸ்லாமியப் பெண்

அச்சமயம் மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சியான அம்னோ (UMNO), தீபாவளி தினத்தன்று தனது கட்சி மாநாட்டை நடத்தியது. இதற்கு இந்திய சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பொது விடுமுறை தினத்தன்று, அதிலும் இந்தியர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று கட்சி மாநாட்டை நடத்துவது சரியல்ல என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இது பெரும் விவாதப் பொருளாகவும் மாறியது.

அன்று குரல் எழுப்பியவர்கள், இன்று இஸ்லாமியர்களுக்கு முக்கியமான தினத்தன்று கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்படுவதை எவ்வாறு எதிர்க்க முடியும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்