பிக்பாஸ் 3: தப்பித்த கவின், வெளியேறிய வனிதா, பொதுத் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்த கமல்ஹாசன்

கமல் படத்தின் காப்புரிமை Vijay Television

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பொதுத் தேர்வுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் குரல் கொடுத்தார் கமல் ஹாசன்.

பொதுத் தேர்வு

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை அறிவித்துள்ளது தமிழக கல்வித் துறை. இதனை நேரடியாகக் குறிப்பிடாமல் மய்யமாக மாணவர்கள் இடைநிற்றலுக்கு பொதுத் தேர்வு வழிவகுக்கும் என்றார் கமல்.

இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள் என்று குறிப்பிட்டார் கமல்ஹாசன்.

குழந்தை தொழிலாளர்கள்

அவர், "உலகெங்கும் பல நாடுகள் தேர்வு முறையை நீக்கி கொண்டு வருகின்றனர். இப்போது ஒரு கணக்கெடுப்பைப் பார்த்தோமானால், பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் கல்வி தடைப்பட்டு வேறு வேலைகளுக்குப் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

அதனால்தான் இதனைப் பேசுகிறேன். நான் அரசியல் பேசவில்லை. இது நம் குழந்தைகளின் வாழ்வாதாரம்." என்றார்.

"படிக்க விருப்பம் இல்லாத மாணவர்களை ஈர்த்து படிக்க வைக்க காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டம் வகுத்தனர். அந்த முயற்சிகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் புதிய திட்டங்கள் வரக்கூடாது" என்றார்.

நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், "இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பே இல்லை. கல்வியாளர்கள் அத்தனை பேரும் அன்றைய கால கட்டத்தில் ஒன்றிலிருந்து 8-ம் வகுப்புவரை பொதுத்தேர்வைச் சந்தித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு ஆட்சேபம் இல்லை. வேறு இடத்திலிருந்துதான் இது போன்ற கருத்துகள் வருகின்றன." என்று கூறி இருந்தார்.

அதுபோல சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ குறித்து பேசிய கமல், சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கப்படுவதற்கு எதிராக உறுதியான கருத்துகளை வெளியிட்டார்.

சாலையோர பேனரால் கோயம்புத்தூரில் 2017ஆம் ஆண்டு ரகு பலியானதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கட் அவுட்டால் தம் ரசிகர் ஒருவர் பலியானதை நினைவு கூர்ந்தார்.

பலியான ரசிகர்

"என்னுடைய ரசிகர் ஒருவர் என்னுடைய பெரிய கட் அவுட்டில் ஏறி, கீழே விழுந்ததில், வேலிகளில் இருந்த கம்பிகள் கழுத்தில் குத்தி பலியானார். துக்கம் விசாரிக்க அவர்கள் வீட்டுக்குச் சென்ற போது, அந்த குடும்பம் எட்டுக்கு எட்டு வீட்டில் ஏழ்மையான சூழலில் வசித்ததைக் கண்டேன். அப்போது இனி என் படங்களுக்கு இது போன்ற கட்அவுட்டுகள் இருக்கக் கூடாது என முடிவு செய்தேன்." என்றார் கமல்.

பேனர் கலாசாரத்துக்கு எதிராக மக்கள் உறுதியான குரல்கள் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.

கால்மேல் கால்

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த லொஸ்லியா தந்தை, கமல் முன்னால் எப்படி கால் மேல் கால் போட்டி அமரலாம் என லொஸ்லியாவை கண்டித்தார்.

படத்தின் காப்புரிமை Vijay Television

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய கமல், "கால்மேல் கால் போட்டு அமருவதால் மரியாதை கெடாது. காலம் மாறுகிறது. நமக்குக் கிடைத்த கல்வி வேறு. அவர்களுக்குக் கிடைக்கும் கல்வி வேறு. அவர்கள் டிஜிட்டல் யுகத்தில் இருக்கிறார்கள். மரியாதை மனதிலிருந்தால் போதும். உங்கள் உடைக்கு எப்படி அமருவது செளகர்யமோ அப்படி அமருங்கள்." என்றார்.

வெளியேறிய வனிதா, தப்பித்த கவின்

கடந்த வாரம் பிக்பாஸில் வீட்டுக்குள், பங்கேற்பாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வந்தனர்.

வனிதாவின் இரு மகள்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பின், வனிதா குறித்த புரிதல் ரசிகர்களுக்கு மாறியது. இதனைக் குறிப்பிட்டுப் பேசிய கமல், "வனிதாவை அன்னையாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்" என்றார்.

படத்தின் காப்புரிமை Vijay Television

கவினின் நண்பரும், திரைப்பட நடிகருமான பிரதீப் ஆண்டனி வந்தார்.

அவர் கவின் மற்றும் சக போட்டியாளர்களிடம் பேசிவிட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் ஆண்டனி செல்லும் நேரத்தில், "நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு. ஆனால், எனக்குக் கடமை ஒண்ணு பாக்கி இருக்கிறது," என்று கூறிக்கொண்டே கவின் முன்னால் சென்று நின்றார்.

பின்பு கவினை பார்த்து, "நீ கேவலமா ஆடுன கேமுக்கு... நீ மட்டமா ஒண்ணு பண்ணதுக்கு... உன்ன நம்புனவங்களை கைவிட்டதுக்கு... இங்க இருக்குறவங்களை காயப்படுத்தியதுக்கு... நான் ஒண்ணு செய்யலாம்னு இருக்கேன்... பிக்பாஸ் டைட்டில் ஜெயிச்சிட்டு, நீ பெரிய ஆளா வந்துட்டனா மேடைக்கு என்னை கூப்பிட்டு என்னை திருப்பி அடிச்சிக்கோ. அப்படி இல்லனா இந்த அடி தகுதியானதுதான்," என்று சொல்லியபடியே கவினின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

இப்படியான சூழலில் இந்த வாரம் யார் பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கவின் காப்பாற்றப்பட்டார். வனிதா வெளியேற்றப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்