பிகில் பாடல் வெளியீடு: “உம்முன்னு இருப்பாரா இல்லை ஜம்முன்னு இருப்பாரா?”- பாடல் வெளியீட்டு நிகழ்வுகளும், விஜய் பேச்சுகளும்

விஜய் படத்தின் காப்புரிமை AGS

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்கிறது.

தொடர்ந்து பாடல்கள் வெளியீட்டு விழாவில் அரசியல் கருத்துகள் கூறி வரும் விஜய் இந்த நிகழ்வில் என்ன பேசுவார் என ரசிகர்கள் சமூக ஊடகத்தில் விவாதம் நடத்தி வருகின்றனர். ட்விட்டரில் #ThalapathySpeech என்ற ஹாஷ்டாகும் ட்ரெண்ட் ஆனது.

சர்க்கார் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவில், "நிஜத்தில் முதல்வரானால், நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன்" என்று கூறி இருந்தார்.

அந்த திரைப்படமே அவரது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதாக இருந்ததாக விமர்சகர்கள் கூறி இருந்தனர்.

சரி... இதற்கு முன்னால் நடந்த நிகழ்வுகளில் விஜய் என்னவெல்லாம் பேசி இருக்கிறார் எனப் பார்ப்போம்.

'சர்க்கார்'

இந்த நிகழ்வில் பேசிய விஜய், "'மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்தது, சர்க்கார்ல அரசியல்ல மெர்சல் பண்ணி இருக்கோம்." என்றார்.

வழக்கமாக விழா மேடைகளில் அடக்கி வாசிக்கும் விஜய், சர்க்கார் வெளியீட்டு விழாவில் நிறைய பேசினார்.

விஜய், "தேர்தல்ல எல்லாம் போட்டியிட்டு சர்க்கார் அமைப்பாங்க, நாங்க சர்க்கார் அமைத்துவிட்டு தேர்தலை நிற்க போறோம்." என்றவர்...பின், "நான் படத்திற்கு சொன்னேன்... புடிச்சு இருந்தா ஓட்டு போடுங்க" என்றார்.

மேலும் அவர், "அரசியலுக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன்... ஒழிப்பது கஷ்டம்தான் ஆனால் ஒழிப்பேன்" என்றார்.

இறுதியாக நிகழ்வில், "தர்மம் ஜெயிக்கும், நியாயம் ஜெயிக்கும், ஆனா லேட்டா ஜெயிக்கும். புழுக்கம் வந்தா மழை வரும். அந்த மாதிரி ரொம்ப நெருக்கடி ஏற்பட்டா ஒருத்தன் வருவான். அவன் லீடரா மாறுவான். அவன் தலைவன் ஆவான். அதான் இயற்கை. அந்த இயற்கையை ஒன்னும் பண்ண முடியாது. அவனுக்கு கீழ நடக்குற சர்க்கார் வேற மாதிரி இருக்கும்," என்றார்.

இந்த நிகழ்வில், "உசுப்பேத்துபவர்கள்கிட்ட உம்மென்னும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்" என்று அவர் கூறியது அப்போது பிரபலமானது.

'ஆளப் போறான் தமிழன்'

மெர்சல் திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக்காக, 'ஆளப் போறான் தமிழன்' பாடல் வெளியான போதே... இந்தப் படத்தில் அரசியல் இருக்கிறது என்று அனைவரும் முணுமுணுக்க தொடங்கினர்.

படத்தின் காப்புரிமை Thenandal Films

மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானும் தன் பங்குக்கு, "இந்த படத்தில் ஆளப் போறான் தமிழன் என்ற பாடல் இருக்கு. அத உண்மை ஆக்கி காட்டுங்கள்" என்றார்.

நிகழ்வில் பேசிய விஜய், "வாழ்க்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்கன்னு கேக்குறாங்க. அதவிட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். ஆனாலும் அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும்தான். எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சிடும் நண்பா" என்றார்.

மேலும் இந்த நிகழ்வில், "எல்லாருக்கும் நம்மை பிடிச்சுட்டா வாழ்க்கை 'போர்' அடிச்சிடும். நம்மை பிடிக்காதவர்களும் இருக்க வேண்டும்" என்றார்.

இந்த நிகழ்வில், "உங்களிடம் எதுவும் இல்லாதபோது இலக்கில் குறிக்கோளாக இருங்கள். உங்களிடம் எல்லாம் இருக்கும்போது உங்கள் அணுகுமுறையில் கவனமாக இருங்கள். இந்த விஷயத்தை நான் கடைப்பிடிக்கிறேன்" என்றார்.

மெர்சல் படம் மருத்துவமனைகள் தனியார் மயமாவது குறித்து விஜய் பேசி இருந்தார். "கோயில்களைவிட மருத்துவமனைகள் முக்கியம்" என்று விஜய் பேசுவதுபோல ஒரு வசனம் வரும்.

அந்த சமயத்தில் பா.ஜ.க தலைவர் எச்.ராஜா, "விஜய் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர். தேவாலயங்களைவிட மருத்துவமனைகள் முக்கியம் என்று அவர் பேசி இருக்கலாம். ஆனால், இந்துக்களைப் புண்படுத்தும் விதமாக பேசி உள்ளார்" என்றார். விஜயை ஜோசப் விஜய் என்றே எச்.ராஜா குறிப்பிட்டிருந்தார்.

இது அப்போது சர்ச்சையானது.

தெறிக்கு முன்பு வெளியான பைரவா திரைப்படத்திற்குப் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவில்லை.

'உயரங்களைத் தொட வேண்டும்'

புலி பட தோல்விக்குப் பின் தெறி படம் வெளியானது.

இந்த பாடல் வெளியீட்டு விழாவில், "என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் பல்வேறு உயரங்களைத் தொடவேண்டும் என்பதுதான் என்னுடைய நீண்டநாள் ஆசை. அடுத்தவர்கள் தொட்ட உயரங்களை உங்களது இலக்காக எடுத்துக் கொள்ளாமல், நீங்கள் தொட்ட உயரங்களை மற்றவர்களுக்கு இலக்காக வையுங்கள்." என்றார்.

"நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தில் ஒரு பெரிய உயரத்தைத் தொடவேண்டும். உங்கள் வாழ்க்கையில் கர்வங்களை விட்டு வாழுங்கள்" என்றவர் இந்த நிகழ்ச்சியில் ஒரு கதை சொன்னார், "மாவோ சாலையில் செல்லும் போது ஒரு கடை முழுவதும் தன் புகைப்படமே இருப்பதைக் காண்கிறார். பூரித்துப் போன மாவோ அந்த கடை பையனிடம், "என் மீது பாசம் இருப்பது புரிகிறது. ஆனால் என் படம் மட்டுமே விற்கக் கூடாது. மற்றவர்கள் படமும் விற்க வேண்டும்" என்கிறார். இதற்கு அந்த பையன் மற்றவர்கள் படம் எல்லாம் விற்றுவிட்டது. இந்த படம் மட்டும்தான் விற்கவில்லை" என்கிறார் அந்த கடை பையன்" என்று கர்வம் குறித்துக் கதை சொன்னவர். "யாரும் கர்வத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள்" என்றார்.

நான் ஏன் ஹிஜாப் அணிந்து ஆபாச படத்தில் நடித்தேன்: மியா கலிஃபா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்