பிகில் - சினிமா விமர்சனம்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
விஜய்

தெறி, மெர்சல் படங்களுக்குப் பிறகு இயக்குநர் அட்லியும் நடிகர் விஜய்யும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது. ட்ரெய்லர், போஸ்டர்களில் இருந்து பலரும் யூகித்ததைப்போல விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட படம்தான்.

மைக்கல் (விஜய்) ஒரு லோக்கல் ரவுடி. அமைச்சரையே அலற வைப்பார். அவருடைய நண்பரான கதிர் (கதிர்) ஒரு கால்பந்தாட்ட கோச். கதிரும், மைக்கலும் ஒன்றாக சென்று கொண்டிருக்கும்போது நடக்கும் ஒரு தாக்குதலில் கதிர் படுகாயமடைகிறார். அதனால், அவர் கோச்சாக இருந்து வழிநடத்த வேண்டிய ஒரு கால்பந்தாட்ட அணிக்கு மைக்கல் கோச்சாகிறார். ஒரு ரவுடி எப்படி கோச்சாக முடியும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்குத்தான் ஒரு பெரிய ஃப்ளாஷ் பேக்.

அந்த ஃப்ளாஷ் பேக் முடிந்த பிறகு, வழக்கம்போல மைக்கலின் அணியில் இருப்பவர்கள் மைக்கலை ஏற்க மறுக்கிறார்கள், மைக்கல் அவர்களது நம்பிக்கையைப் பெறுகிறார், பிறகு பந்தயத்தில் வெல்கிறார். இதற்கு நடுவில் வில்லன்களையும் சமாளிக்கிறார்.

பட மூலாதாரம், Twitter

விஜய் நடித்த படங்களில் சமீப காலத்தில் எந்தப் படமும் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில்லை. இந்தப் படம் குறித்த சின்னச் சின்ன அப்டேட்களுக்குக்கூட ரசிகர்கள் பெரிதும் காத்துக்கிடந்தார்கள். அவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் 'ம்ஹூம்' என்பதுதான் பதில்.

ஒரு கால்பந்தாட்ட வீரனாக இருந்து, சூழல் காரணமாக அதிலிருந்து விலகிய ஒருவன், ஒரு கால்பந்தாட்ட அணிக்கு கோச்சாக மாறி அந்த அணியை வெற்றிபெற வைப்பது என்ற ஒற்றை வரிக் கதை நாம் பல படங்களில் பார்த்ததுதான். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த கனாகூட இந்த ஒற்றை வரிக்கு நெருக்கமான படம்தான்.

ஆனால், இந்த ஒற்றை வரியை இயக்குநர் எப்படி முழு நீளத் திரைப்படமாக்குகிறார் என்பதில்தான் அந்தப் படம் சுவாரஸ்யமாக இருக்கிறதா இல்லையா என்பது அமையும். அட்லி இதில் கோட்டைவிட்டிருக்கிறார்.

படத்தின் பிரதானமான பிரச்சனை, நீளம். தேவையே இல்லாமல் மூன்று மணி நேரம் ஓடுகிறது படம். அதில் இடைவேளைக்கு முன்பாகவே நான்கு சண்டைகள், இரண்டு பாடல்கள். படத்தில் உள்ள ஏகப்பட்ட சண்டைகளையும் பாடல்களையும் நீக்கியிருந்தால் அல்லது குறைந்திருந்தால் படத்தில் அரை மணிநேரம் குறைந்திருக்கும்.

முதல் பாதி சண்டையும் பாட்டுமாகக் கழிந்ததென்றால், இரண்டாவது பாதியில் எந்த சுவாரஸ்யமும் இல்லாத ஒரு நீண்ட கால்பந்தாட்ட போட்டியை வைத்து ஒப்பேற்றி அனுப்புகிறார் அட்லி.

படத்தில் விஜய்க்கு தந்தை - மகன் என இரண்டு வேடங்கள். தந்தைக்கும் மகனுக்கும் குரலிலும் மீசையிலும் மட்டும் சின்ன வித்தியாசம்.

பட மூலாதாரம், Twitter

தந்தை ராயப்பனாக வரும் விஜய், வில்லனான ஷர்மாவோடு (ஜாக்கி ஷராஃப்) மோதும் காட்சி ஒன்று வருகிறது. பாட்ஷா படத்தில் ரஜினி தன் தங்கையை வெளியில் அனுப்பிவிட்டு, மருத்துவக் கல்லூரியின் தாளாளரிடம் பேசும் காட்சி நினைவிருக்கிறதா? கிட்டத்தட்ட அதற்கு இணையான மோதல் காட்சியாக வர வாய்ப்புள்ள காட்சி. ஆனால், அந்தக் காட்சி மிகச் சாதாரணமாக கடந்துபோகிறது.

நயன்தாரா கதாநாயகி என்பதால் இரண்டு பாடல் காட்சிகளில் வருகிறார். பிறகு எதுவும் செய்யாமல் விஜய் கூடவே இருக்கிறார். அவ்வளவுதான். யோகிபாபு, ஆனந்த்ராஜ், விவேக், தேவதர்ஷினி, கு. ஞானசம்பந்தன் ஆகியார் தலா இரண்டு காட்சிகளில் வருகிறார்கள்.

யோகிபாபு, விவேக் ஆகியோர் இருந்தும் சிறு புன்னகைக்குக்கூட நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. சில இடங்களில் விஜய் நகைச்சுவைக்கு முயற்சிக்கிறார். ஆனால், சிரிப்பு வரவில்லை.

இந்தப் படத்தில் வில்லனாக வரும் ஷர்மாவின் நோக்கம் என்ன என்பது தெளிவாக இல்லை. சாதாரண இளைஞர்களுக்கு கால்பந்தாட்ட அணியில் காசு வாங்காமல் இடம்தர விருப்பமில்லையென்றால், எதற்காக வந்து இந்திய அணியில் இடம் தருவதாக கதாநாயகனிடம் சொல்கிறார்? பிறகு, வீணாக வாங்கிக்கட்டிக் கொள்கிறார்?

இரண்டாம் பாதியில் வில்லன் மீண்டும் ரீ - என்ட்ரி கொடுக்கும்போது அவர் விஜயகாந்த் பட வில்லன்களைப் போல மாறிவிடுகிறார். சிவப்பு லைட் எரியும் ஒரு குடோன். நான்கு குண்டர்கள். அவர்களை வைத்து ஆள்களைக் கடத்துவது, போதை மருந்து ஏற்றுவது என ஏதேதோ நடக்கிறது.

படத்தின் இரண்டாம் பாதி முழுக்க கால்பந்தாட்டம்தான். அப்படியான கதையில், அந்த ஆட்டத்தின் நுணுக்கங்களை வைத்து ஏதாவது நடக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றம்தான். அதனாலேயே கனா, சென்னை - 28, கில்லி, வெண்ணிலா கபடிக் குழு போன்ற படங்களில் இருந்த சுவாரஸ்யம் இதில் இல்லை.

சிங்கப்பெண்ணே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் இந்தப் பாடல்கள் படத்தின் போக்கிற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.

விஜய் ரசிகர்கள் ரசிக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: