தம்பி - சினிமா விமர்சனம்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
தம்பி - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், @sikarthi facebook page

மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம், பாபநாசம் படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப், மீண்டும் ஒரு த்ரில்லர் கதையுடன் களமிறங்கியிருக்கிறார்.

மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் சத்யானந்தத்தின் (சத்யராஜ்) மகன் சரவணன் 15 ஆண்டுகளுக்கு முன்பாகக் காணமல் போகிறான். கோவாவில் சின்னச்சின்ன தவறுகளைச் செய்து சம்பாதித்துவரும் விக்கி (கார்த்தி), காவல்துறையால் சரவணனாக அடையாளம் காணப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு வருகிறான்.

ஆனால், அந்த வீட்டிலிருக்கும் பாட்டி (சௌகார் ஜானகி), சரவணனின் நண்பன் கரண் (அன்சன் பால்)ஆகியோருக்கு இவன் உண்மையான சரவணன்தானா என்ற சந்தேகம் இருந்துகொண்டேயிருக்கிறது. இதற்கிடையில் திடீரென சரவணனை கொல்ல சிலர் முயற்சிக்கிறார்கள்.

உண்மையில் சரவணனுக்கு என்ன ஆனது, சரவணனாக நடிக்க விக்கியை அழைத்துவந்தது யார், ஏன் அவனை சிலர் கொல்ல முயல்கிறார்கள் என்பது மீதிக் கதை.

ஜீத்து ஜோசப்பிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான குடும்பக் கதை சார்ந்த த்ரில்லர் படம். த்ரிஷ்யம் அளவுக்கு ஒரு சிறப்பான த்ரில்லர் இல்லை என்றாலும் அந்தப் படத்தைவிட அதிக திருப்பங்களை, எதிர்பாராத தருணங்களைக் கொண்ட படம் இது.

படத்தின் முதல் பாதியில் திரைக்கதை சற்று மெதுவாக நகர்கிறது. அதைப் பிற்பாதியில் சரிசெய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர். படத்தில் சில பாடல்களே இருக்கின்றன என்றாலும், அந்தப் பாடல்களும் இல்லாமல் இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கக்கூடும்.

படத்தின் முக்கியமான பலம் இதன் துல்லியமான திரைக்கதை. அதற்கு அடுத்தபடியாக பொருத்தமான நடிகர்கள் தேர்வு. ஒட்டுமொத்த படத்திலும் தனித்து பிரகாசிக்கிறார் சத்யராஜ்.

இதற்கு அடுத்தபடியாக கார்த்தியும் ஜோதிகாவும் சிறப்பாக தங்கள் பாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள். சில காட்சிகளே வரும் அம்மு அபிராமிகூட, திருப்பு முனையான ஒரு காட்சியில் மனம்கவரும் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம், ராஜசேகரின் ஒளிப்பதிவு. காட்சிக் கோணங்களிலும் ஒளி அமைப்பிலும் ஒவ்வொரு ஃப்ரேமும் அட்டகாசமாக இருக்கிறது.

சற்று மெதுவாக படம் நகர்ந்தாலும் த்ரில்லர் பட ரசிகர்கள் நிச்சயம் ரசிக்கக்கூடிய படம் இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: