ஸ்டார் வார்ஸ் படத்தில் இரு பெண்கள் முத்தமிடும் காட்சியை நீக்கியது சிங்கப்பூர்

இரு பெண்கள் முத்தமிடும் காட்சிக்கு சிங்கப்பூர் தடை

பட மூலாதாரம், LUCASFILM

ஸ்டார் வார்ஸ் படங்களின் ஒரு பாகமான தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் என்ற திரைப்படத்தில் ஒரே பாலினத்தவர்கள் நீண்ட நேரம் முத்தமிடும் காட்சியை சிங்கப்பூர் தணிக்கை குழு நீக்கியுள்ளது.

தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் திரைப்படத்தில் பல கதாபாத்திரங்களுக்கு மத்தியில் இரு பெண்கள் முத்தமிடும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது. இவ்வாறான காட்சி ஸ்டார் வார்ஸ் படங்களில் முதல் முறையாக படமாக்கப்பட்டுள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சிங்கப்பூரில் மட்டும் இந்த காட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிஸ்னி நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் இந்த முத்தக் காட்சியை நீக்கியதால், பெற்றோரின் அனுமதியுடனேயே 13 வயதுக்கு குறைவானவர்கள் இந்த திரைப்படத்தை காண அனுமதிக்கப்படுகிறது என பிபிசியிடம் பேசிய சிங்கப்பூரின் ஊடக கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

மேலும் இந்த காட்சியை நீக்காமல் இருந்திருந்தால் படம் பார்க்கும் வயதினருக்கான குறைந்தபட்ச வயது வரம்பு அதிகரித்திருக்க கூடும் என்று சிங்கப்பூரின் ஊடக கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், வேறு எந்த நாடுகளில் இந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விவரம் அளிக்கவில்லை. ஆனால் சீனாவில் இந்த காட்சியை நீக்காமல் திரைபடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த பிபிசியின் கேள்விகளுக்கு டிஸ்னி நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை.

பட மூலாதாரம், LUCASFILM FACEBOOK

சிங்கப்பூரில் திரைப்பட தணிக்கை குழு 6 பிரிவுகளின் கீழ் திரைப்படங்களை வகைப்படுத்துகின்றனர்.

  • G - அனைவரும் பார்க்கும் திரைப்படம்.
  • PG - பெற்றோர் அனுமதியுடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.
  • PG13 - 13 வயதுக்கும் குறைவானவர்கள் பெற்றோர் அனுமதியுடன் திரைப்படத்தை பார்க்கலாம்.
  • NC16 - 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திரைப்படம் பார்க்க தடை.
  • M18 - 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு திரைப்படம் பார்க்க தடை.
  • R21 - 21 வயதை கடந்தவர்கள் மட்டுமே திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரே பாலுறவுக்காரர்கள் திருமணம் சிங்கப்பூரில் அங்கீகரிக்க படவில்லை. இரு ஆண்கள் பாலுறவு கொள்வதும் சட்டவிரோதமாக உள்ளது. ஆனால் இது குறித்த சட்டங்கள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை.

ஆண் ஒரு பாலுறவுக்காரர்களுக்குகாண மதுபான விடுதிகள் மற்றும் கிளப்புகளுக்கு சிங்கப்பூரில் தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: