பேட்ட முதல் அசுரன் வரை: 2019இல் ரசிகர்களை ஈர்த்த 10 திரைப்படங்கள்

2019 திரைப்படங்கள்

2019ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 190க்கும் மேற்பட்ட நேரடித் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் பல படங்கள் வசூல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் குறிப்பிடத்தக்கவை.

2019ஆம் ஆண்டில் தமிழில் மொத்தமாக 191 திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இது தவிர, பிற மொழிகளில் இருந்து சுமார் 15 திரைப்படங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கின்றன. 2018ஆம் ஆண்டில் சுமார் 180 நேரடி தமிழ்ப் படங்களும் 6 மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களும் வெளியான நிலையில், இந்த ஆண்டு திரைப்படங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு 3 திரைப்படங்கள் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு 7 திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கின்றன. ஆனால், பெரிய அளவில் வசூல் இருப்பதாலேயே அவை, லாபம் அளித்த திரைப்படங்கள் என்று சொல்லிவிட முடியாது. இந்த ஆண்டில் பிகில், பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்கள் அதிக வசூல் செய்த முதல் மூன்று திரைப்படங்களாக இருக்கின்றன.

இப்படி வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள் ஒருபுறமிருக்க, கலை ரீதியாக தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஈடுபட்ட திரைப்படங்களும் இந்த ஆண்டு வெளியாகியிருக்கின்றன. அப்படியான 10 திரைப்படங்களின் பட்டியல் இது.

1. பேட்ட:

படத்தின் காப்புரிமை Sun pictures

1990களின் ரஜினியை மீண்டும் ரசிகர்களுக்குக் காட்ட நினைத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தத் திரைப்படம், சமீபத்தில் வெளிவந்த ரஜினியின் திரைப்படங்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படமென்று சொல்லலாம். சீரியஸாக ஏதோ செய்யப்போகும் எந்த பாவனையுமின்றி தன் ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ, அதைச் செய்திருந்தார் ரஜினி. படத்தின் துவக்கக் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை அவரது நடிப்பும் மேனரிசமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தன. இந்தப் படத்தின் மூலம் பழைய பாணிக்கு திரும்பிய ரஜினி, தனது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை இந்தப் படத்தின் மூலம் அதிகரித்தார். வசூலிலும் குறிப்பிடத்தக்க சாதனை படைத்த படம் இது.

விமர்சனம் படிக்க: பேட்ட - சினிமா விமர்சனம்

2. விஸ்வாசம்:

படத்தின் காப்புரிமை SATHYAJOTHIFILMS/TWITTER

அஜீத் - சிவா கூட்டணி தொடர்ந்து தோல்விப் படங்களையே தந்துவந்த நிலையில், இந்தப் படம் அஜீத் ரசிகர்களை வெகுவாக சந்தோஷத்தில் ஆழ்த்தியது. கலகலப்பான கிராமத்துவாசி, யாரையும் அடிக்கும் முரட்டுத்தனம், குடும்பத்திற்காக ஏங்கும் கணவன், குழந்தைக்காக ஏங்கும் தந்தை என இந்தப் படத்தில் சிக்ஸர் அடித்திருந்தார் அஜீத். அவரைவிட்டுவிட்டு, ஒரு சினிமாவாகப் பார்த்தால், சற்று ஏமாற்றமளிக்கும் திரைப்படம்தான். திரைக்கதையிலும் புதுமையான திருப்பங்களோ, எதிர்பாராத தருணங்களோ கிடையாது. இருந்தபோதும் இந்த ஆண்டில் வசூசில் சாதனை படைத்த திரைப்படம் இது.

விமர்சனம் படிக்க; விஸ்வாசம் - சினிமா விமர்சனம்

3. சூப்பர் டீலக்ஸ்:

2011ஆம் ஆண்டில் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் திரையுலகின் பார்வையை தன் மீது திருப்பிய தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த திரைப்படம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு வெளியானது. சூப்பர் டீலக்ஸ். அடிப்படையில் காமமும் ஆசையுமே வாழ்வை நகர்த்திச் செல்கின்றன, மற்றபடி வாழ்வில் நடக்கும் எல்லா சம்பவங்களுமே தற்செயலானவை என்பதை சொன்ன இந்தப் படம், இந்த ஆண்டின் ஒரு குறிப்பிடத்தக்க படம். ஆனால், ஆரண்ய காண்டத்தில் இருந்த இயல்பான தன்மை இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனங்கள் இருந்தன. ஆனால், திறந்த மனதுடன் திரையரங்கிற்குச் சென்றவர்களுக்கு ஏமாற்றமில்லை.

விமர்சனம் படிக்க; சூப்பர் டீலக்ஸ்: சினிமா விமர்சனம்

4. காஞ்சனா - 3:

2007ஆம் ஆண்டில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற முனி படத்தை அடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளிவந்த நான்காவது பேய்ப் படம் இது. இந்த முனி - காஞ்சனா வரிசை படங்கள் எல்லாமே ரசிகர்களை முழுக்க முழுக்க திகிலில் ஆழ்த்தும் நோக்கத்தில் உருவாக்கப்படுபவை அல்ல. நகைச்சுவையும் திகிலும்கூடிய பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்குவதே இந்தப் படங்களின் நோக்கம். ஆனால், இந்தப் படத்தில் திகிலும் இல்லை. சொல்லத்தக்க வகையில் நகைச்சுவையும் இல்லை. இருந்தபோதும் வசூலில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தது இந்தப் படம். அதைத் தவிர, வேறு எதற்காகவும் நினைவுகூரத்தக்க படமல்ல இது.

விமர்சனம் படிக்க: காஞ்சனா - 3: சினிமா விமர்சனம்

5. கடாரம் கொண்டான்:

À bout portant என்ற பெயரில் ஒரு ஃபிரெஞ்சு மொழியில் வெளியான திரைப்படம் கொரிய மொழியிலும் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டு, இந்த ஆண்டு தமிழிலும் கடாரம் கொண்டானாக ரீ - மேக் செய்யப்பட்டது. ஒரு முழு நீள ஆக்ஷன் - த்ரில்லர் திரைப்படத்தை முடிந்த அளவு சிறப்பாகச் செய்திருந்தார் இயக்குனர் ராஜேஷ். படத்தில் பல பலவீனங்கள் இருந்தன. ஆனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு, வெளிவந்த கச்சிதமான த்ரில்லர் என்ற வகையில் குறிப்பிடத்தக்க படம் இது.

விமர்சனம் படிக்க: கடாரம் கொண்டான் - சினிமா விமர்சனம்

6. நேர் கொண்ட பார்வை:

விஸ்வாசம் வெற்றியால் ஏற்கனவே குஷியில் இருந்த ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியது இந்தப் படம். இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக்காக இந்தப் படம் வெளியானது. பிரபல கதாநாயகர்கள் பெரும்பாலும் பெண்கள் குறித்து பழமைவாத அறிவுரைகளையே சொல்லிவரும் நிலையில், இந்தப் படம் அதிலிருந்து மாறுபட்டு நவீனமான பார்வையை முன்வைத்தது. அஜீத்தின் திரைவாழ்க்கையில் காதல் கோட்டை, வாலி படங்களைப் போல இதுவும் ஒரு முக்கியமான, திருப்புமுனை படம் என்றே சொல்லலாம். படத்திற்கு சிறப்பான வசூலும் இருந்தது.

விமர்சனம் படிக்க: நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்

7. அசுரன்:

பூமணி எழுதிய வெக்கை நாவலின் திரைவடிவம்தான் அசுரன். வெக்கையின் கதையிலிருந்து பெருமளவு படம் விலகியிருந்தது. ஆனால், அந்த நாவலில் இருந்த அதே உக்கிரம் படத்தில் வெளிப்பட்டது. கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை என ஒரு திரைப்படத்தின் எல்லா அம்சங்களிலும் ரசிகர்களுக்கு களிப்பூட்டிய இந்தப் படம் இயக்குனர் வெற்றி மாறனுக்கும் கதாநாயகனாக நடித்த தனுஷிற்கும் மிக முக்கியமான படைப்பாக அமைந்தது.

விமர்சனம் படிக்க: அசுரன்: சினிமா விமர்சனம்

8. பிகில்:

படத்தின் காப்புரிமை TWITTER

விஜய் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படம், இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படங்களில் ஒன்று என நிச்சயம் சொல்லலாம். ஆனால், கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படம், திரைப்படம் என்ற வகையில் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. இருந்தபோதும் வசூலில் பெரும் சாதனை படைத்தது பிகில். இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் பிகில் என தயாரிப்புத் தரப்புச் சொல்கிறது. ஆனால், இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படமும் இதுதான் என்பதால் படத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு லாபம் கிடைத்ததா என்பதில் தெளிவான பதில் இல்லை.

விமர்சனம் படிக்க: பிகில் - சினிமா விமர்சனம்

9. கைதி:

படத்தின் காப்புரிமை TWITTER

இந்த ஆண்டில் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் என்றால், நிச்சயம் கைதி படத்தைச் சுட்டிக்காட்டலாம். ஒரு road-thrillerதான் கதை என்றாலும் அதைச் சொன்ன விதத்தில் வியக்கவைத்தார் இயக்குனர் லோகேஷ். முழுக்க முழுக்க இரவிலேயே நகரும் இந்தப் படம், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே லாபம் ஈட்டிக் கொடுத்தது.

விமர்சனம் படிக்க; கைதி - சினிமா விமர்சனம்

10. இராண்டம் உலகப் போரின் கடைசி குண்டு:

ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் கடந்த ஆண்டில் வெளிவந்த மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக இருந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் வெளியான இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படமும் குறிப்பிடத்தகுந்த கவனத்தைப் பெற்றிருக்கிறது. போரில் சம்பந்தப்படாத ஒரு தேசத்திலும், அந்த யுத்தத்தின் தாக்கம் இருக்கும் என்பதைச் சொல்லவந்த படம் இது.

இந்தப் பத்துப் படங்கள் தவிர, பேரன்பு, கே - 13, 100, கொலைகாரன், ஜீவி போன்ற படங்களும் இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க படங்களாக இருந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :