சுளுந்தீ, ரூஹ்: இந்த புத்தகங்களை வாசித்துவிட்டீர்களா? - 2019இல் கவனம் பெற்ற புத்தகங்கள்

இரா.முத்துநாகு படத்தின் காப்புரிமை இரா.முத்துநாகு

புத்தகங்கள் அற்ற ஒரு அறை, ஆன்மா இல்லாத உடலைப் போன்றது என்கிறார் ரோம தத்துவஞானி மார்கஸ் டுல்லியஸ் சிசரோ. உள்ளீடற்ற உடல்களை சொற்களே நிரப்புகின்றன.

வாசிப்பு குறித்து, புத்தகங்கள் குறித்து பலர் முன்பே பேசிவிட்டார்கள்.

கடந்தாண்டு இலக்கிய உலகில் நடந்த கவனிக்கத்தக்க விஷயங்களையும், பரவலாகப் பேசப்பட்ட கவனம்பெற்ற 10 புத்தகங்களையும் இங்கே தொகுத்துள்ளோம்.

வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது என்று கூறப்பட்டாலும், வாசிப்பு பழக்கம் வேறு வடிவத்திற்கு மாறி உள்ளதாகவே தோன்றுகிறது. அதற்கு அமேசான் கிண்டலின் 'பென் டூ பப்ளீஷ்' சாட்சி.

பென் டூ பப்ளீஷ்

படத்தின் காப்புரிமை லக்ஷ்மி சரவணகுமார்

'யுவ புரஸ்கார்' விருது பெற்ற லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய ரூஹ் முதல் வளர்ந்து வரும் எழுத்தாளர் இந்து லோகநாதனின் 'பிரியாணியிசம்' வரை பல நூல்கள் அமேசான் கிண்டலில் வெளியிடப்பட்டது. பரவலாக இந்த நூல்கள் குறித்து சமூக ஊடகங்களில் காத்திரமான உரையாடல்களும் நிகழ்ந்தன.

எந்த அளவுக்கு இந்த புத்தகங்கள் தாக்கம் செலுத்தியது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், கிண்டலில் வெளியிடப்பட்ட 'தோழர் சோழன்' புத்தகம் குறித்து அரசு விசாரணையே நடத்தியது.

அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் எஸ். சிவசங்கரால் எழுதப்பட்ட அந்த புத்தகம் தமிழ்த் தேசிய இயக்கங்கள் குறித்துப் பேசியது.

ஆங்கிலத்தில்...

அடுத்துக் குறிப்பிடப்பட வேண்டிய விஷயமென்றால், பல தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. உண்மையில் இதுவொரு புது அலைதான். தமிழ்மகனின் வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் And the Roots Go Deep... ஆக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

பெருமாள்முருகனின் பூனாச்சி கடந்தாண்டே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இவ்வாண்டு 'தோன்றாத்துணை' நூல் AMMAவாக ஆங்கிலத்தில் உயிர்பெற்றது.

ஸ்ரீவித்யா சுபாஷ், நந்தினி முரளி, கவிதா முரளிதரன், அஸ்வினி குமார் ஆகியோர் இந்த புத்தகங்களை மொழிப் பெயர்த்து இருந்தார்கள்.

ஜீரோடிகிரி, வெஸ்ட்லாண்ட் ஆகிய பதிப்பகங்கள் இதனை வெளியிட்டன.

யூ- டியூப்

படத்தின் காப்புரிமை Getty Images

இலக்கியக் கூட்டங்களை யூ-டியூபில் வெளியிடும் பழக்கம் கடந்த ஆண்டுகளிலேயே தொடங்கி இருந்தாலும், இந்தாண்டு அவை பரவலாகக் கவனிக்கப்பட்டன.

தமிழகத்தின் முக்கியமான கதை சொல்லியான பவா செல்லதுரையின் கதையாடல்கள் யூ- டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பரவலாகப் பகிரப்பட்டது.

ஸ்ருதி யு-டியூப் டிவி இதற்கான முன்னெடுப்புகளை செய்தது.

சரி... அச்சாக வெளிவந்து பரவலாகக் கவனம் பெற்ற புத்தகங்களை பார்ப்போம்.

அரசியலின் இலக்கணம்

இந்த ஆண்டு வெளியான முக்கியமான நூல்களில் இதுவும் ஒன்று. ஹெரால்டு ஜே.லாஸ்கியால் எழுதப்பட்ட `A Grammar of Politics' நூலின் தமிழாக்கம் இது. வரலாற்றில் பிராமண நீக்கம் உள்ளிட்ட பல நூல்களை மொழியாக்கம் செய்த க.பூரணச்சந்திரன் இதனைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். அரசியல் குறித்துப் புரிந்து கொள்ள பல்வேறு சாளரங்களை இந்த நூல் திறந்து விடுகின்றது. அரசு பற்றிய கோட்பாட்டில் உள்ள நெருக்கடியில் தொடங்கி, சமூக சீரமைப்பின் நோக்கம் இறையாண்மை, அரசியல் அதிகாரத்தின் வடிவங்கள் என அரசு தொடர்புடைய விஷயங்களை விரிவாகப் பேசுகிறது இந்த 856 பக்க நூல். முதல் உலகப் போருக்குப் பின்னர் வெளிவந்த அரசியல் கோட்பாட்டின் மீதான நூல்களில் முற்றுமுழுதான ஒன்று இந்த நூல்.

எதிர் வெளியீடு இதனை வெளியிட்டிருக்கிறது.

மாபெரும் தமிழ் கனவு

படத்தின் காப்புரிமை இந்து தமிழ் திசை

அண்ணாவின் எழுத்தும், அண்ணா குறித்து பிறர் கருத்தும் முழுமையாக இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கிறது. அண்ணாவின் நாடாளுமன்ற உரைகள் அன்றைய இந்தியா குறித்த ஒரு பார்வையையும் வழங்குகிறது. பிரேர்ணா சிங், செல்வபுவியரசன், டி.ஜே.எஸ். ஜார்ஜ், கர்கா சாட்டர்ஜி எனப் பலர் இந்த புத்தகத்தில் அண்ணா குறித்து எழுதி இருக்கிறார்கள்.அண்ணாவை முழுமையாக அறிந்து கொள்ள ஒரு புத்தகம் படிக்க விரும்பினால் இந்த புத்தகம் சரியான தேர்வாக இருக்கும்.

`தி இந்து தமிழ்த் திசை` பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.

சுளுந்தீ

இரா.முத்துநாகு எழுதி உள்ள சுளுந்தீ இந்த ஆண்டுகளில் வெளியான புனைவுகளில் முக்கியமான புத்தகம். நாவிதர் பரம்பரையில் வந்த ஒருவன் படைவீரனாக விரும்புவதுதான் கதையின் மையப்புள்ளி. இதன் ஊடாக ஒரு காலகட்டத்தின் அரசியலை மிக விரிவாகப் பேசுகிறது. கொஞ்சம் பிசகினாலும் புனைவுக்கான அழகியல் தடமாறிவிடக் கூடிய ஒரு கருவை மிக லாவகமாகக் கையாண்டிருக்கிறார் இரா.முத்துநாகு. 'ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு' புத்தகம் மருத்துவம் பார்த்த சமூகம் முடிதிருத்துபவர்கள் ஆனது எப்படி என்பது குறித்து விரிவாகப் பேசி இருக்கும். கோ. ரகுபதி தொகுத்த நூல் அது. இந்த நாவலிலும் இவை குறித்து விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.

ஆதி பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டிருக்கிறது.

எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை

ஜாதியற்றவரின் குரல், உங்கள் மனிதம் ஜாதியற்றதா? ஆகிய நூல்களின் ஆசிரியர் ஜெயராணி எழுதி உள்ள புத்தகம் இது. விளிம்பு நிலை மக்களுக்காகத் தொடர்ந்து எழுதியும், களத்தில் செயல்பட்டும் வருபவர் ஜெயராணி. சாதிய கொலைகள் முதல் மலக்குழி மரணங்கள் வரை நம் கண் முன்னர் நடக்கும், நாமும் அரசும் இந்த சமூகமும் காணாததுபோல கடந்து போகும் அவலங்களை மையப்படுத்தி நம் எல்லாரையும் கேள்விக்குள்ளாக்குகின்றன இந்தக் கட்டுரைகள்.

பாரதி புத்தகாலயம் இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.

நீர் எழுத்து

படத்தின் காப்புரிமை காடோடி

மறை நீர் குறித்து தமிழில் விரிவாக எழுதிய சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய புத்தகம் இது. திருடப்பட்ட தேசம், பால் அரசியல், கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர், காடோடி எனப் புனைவு, அல்புனைவு என அனைத்து இரண்டு தளங்களிலும் சூழலியல் குறித்தே தொடர்ந்து எழுதி வரும் நக்கீரன் இந்த நீர் எழுத்து நூலில் சங்க காலம் தொடங்கி சமகாலம் வரைக்கும் நீரைக் குறித்து 360 பாகை கோணத்தில் ஆய்வு செய்து எழுதி இருக்கிறார்.

காடோடி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது.

க்ரீஷ் கர்னாட் எழுதி பாவண்ணன் மொழிபெயர்த்த அனலில் வேகும் நகரம், ஆலிஸ் வாக்கரால் எழுதப்பட்டு ஷஹிதாவால் மொழியாக்கம் செய்யப்பட்ட அன்புள்ள ஏவாளுக்கு, டியானே காஃபே மற்றும் டீன் ஸ்பியர்ஸால் எழுதப்பட்டு செ. நடேசனால் மொழியாக்கம் செய்யப்பட்ட எங்கே செல்கிறது இந்தியா, சரவணன் சந்திரனின் லகுடு, தி.லஜபதி ராயின் நாடார் வரலாறு கறுப்பா? காவியா?, காசர்களின் அகராதி, தங்க ஜெயராமனின் காவிரி வெறும் நீரல்ல, அ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள் உள்ளிட்ட நூல்களும் பரவலாகக் கவனம் பெற்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்