ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி: நாட்டில் நிறைய பிரச்னைகள் இருக்கே என்ற கேள்விக்கு அவரது பதில் என்ன தெரியுமா?

ரஹ்மான் படத்தின் காப்புரிமை Getty Images

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தம்முடைய இசைக்கல்லூரியில் 'தa Futures' என்கிற திட்டத்தை அவருடைய பிறந்த நாளான நேற்றைய தினம் அறிமுகப்படுத்தினார். எம்ஐடி கல்லூரி, இயக்குநர் பரத்பாலா மற்றும் கே.எம் இசைக் கல்லூரி சேர்ந்து கிரியேட்டிவாக ஒரு ப்ராஜக்ட் பண்ண வேண்டும் என நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்த 'தa Futures' என்கிற அறிமுகத்தோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார் அவர். அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்தார்.

கே : தa Futures மூலமாக என்னவெல்லாம் பண்ணலாம் என நினைக்கிறீர்கள்?

ப : இது தமிழ்நாடு கலாசாரம் அதிலும் குறிப்பாக சென்னை கலாசாரம் பற்றியது. இன்றைய காலத்து குழந்தைகளின் அறிவு, அவர்களுடைய ஆர்வம் போன்றவற்றை இந்தத் திட்டம் மூலமாக வெளிக் கொண்டு வர முடியும் என நினைக்கிறேன். நான் சினிமா உலகத்தில் இருக்கிறேன், அதில் நிறைய ஊக்கம் தரக் கூடிய விஷயங்கள் உண்டு. ஆனால் தற்பொழுது இந்த உலகத்தில் குழந்தைகளைச் சுற்றி ஒரு நெகட்டிவ் எனர்ஜி, போராட்டம்னு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவர்களுடைய மனதில் எவ்வித குழப்பமும் இருக்கக்கூடாது. அப்படி குழப்பங்கள் இல்லாமல் இருந்தால் தான் அவர்களால் ஒரு விஞ்ஞானியாகவோ, இசையமைப்பாளராகவோ அல்லது ஒரு அரசியல்வாதியாகவோ மாற முடியும். அப்படியான சுற்றுப்புறத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிதான் இது.

கே : பழங்கால இசை தொடர்பாக ஒரு ஆராய்ச்சி பண்ணியிருந்தீங்க.. அது தொடர்பானதுதான் தான் இந்த ப்ராஜக்டா ?

ப : அதோடு தொடர்புடையதுன்னு சொல்லலாம். இந்த திட்டம் எங்கே முடியும் என்பது எங்களுக்கே தெரியாது. ஏனென்றால் இதை நான் ஒரு விதையாகவே பார்க்கிறேன். அந்த விதைக்குள் தோட்டமே இருக்கலாம். அப்படியானதொரு நல்ல விஷயத்தையே எதிர்பார்க்கிறேன்.

கே : யாரெல்லாம் இதில் பங்கேற்க முடியும்?

ப : இது திறந்த புத்தகம்தான். யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இதை ஒரு கண்காட்சி மாதிரியாக்க நினைக்கிறேன். ஒரு இருபதாண்டு காலம் கழித்தும் மக்களுக்கு இது மிகப்பெரிய ஊக்கமாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

கே : நெகட்டிவ் எனர்ஜி என சொன்னீர்கள்.. அதற்கான காரணம் ?

பதில் : (ஐயா.. ஆளை விடுங்க என்றவர் சிரித்துவிட்டு பதில் கூறத் தொடங்கினார்) இந்த உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கலைஞனுடைய வேலை அழகான ஒன்றை உருவாக்குவது. அதனால்தான் இப்படியொரு மாற்று உலகத்தை இந்த சமூகத்தில் உண்டாக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எந்தக் கேள்விக்கு வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

கே : பழைய பாடல்களில் சொற்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது உள்ள திரைப்படப் பாடல்களில் இசை அதிகமாக இருக்கிறது. சொற்கள் புரிவதில்லை. இது பாடல்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறதே ?

ப : எல்லா பாடல்களும் அப்படி அமைக்கப்படவில்லை. சிலப் பாடல்களில் அதன் சூழலுக்கு ஏற்ப மாற்றி இசையமைக்கப்படுகிறது. ஒரே மாதிரியான பார்வையில் மட்டுமே இதனை அணுகக்கூடாது.

கே : நாட்டில் நிறைய பிரச்னைகள் இருக்கே ?

ப : எல்லாப் புகழும் இறைவனுக்கே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்