ஆர்.கே. செல்வமணி பேட்டி: "தமிழ் சினிமா ஷூட்டிங் வெளி மாநிலங்களில் நடப்பதால் தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி இழப்பு"

செல்வமணி பேட்டி படத்தின் காப்புரிமை RK SELVAMANI / FACEBOOK

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு திரைப்படத்துறை மூலம் கிடைக்கவேண்டிய ரூ.3,000 கோடி வருமானம் வெளிமாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்றும், இதனால் தமிழ் சினிமா தொழிலாளர்களின் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி.

பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் வெளிமாநிலங்களில் படமாக்கப்படுவதால் தமிழகத்தை சேர்ந்த திரைத்துறை தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்றும் சமீப காலங்களில் படம் ரிலீசான முதல் நாளே இமாலய வெற்றி என பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

தமிழ்திரைப்பட உலகம் சந்திக்கும் பிரச்சனை என்ன, தொழிலாளர்களின் நிலை மோசமாக மாறியதற்கு காரணம் என்ன என பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார் செல்வமணி. அவரது பேட்டிலிருந்து:

தமிழக திரைப்படத்துறை இக்கட்டான சூழலில் இருப்பதாக பேசுகிறீர்கள். திரைப்படத் தொழிலாளர் பிரச்சனையால் அரசாங்கத்திற்கு எந்தவிதத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது?

தமிழ் படங்களை வெளிமாநிலங்களில் எடுப்பதுதான் பிரச்சனை. தர்பார் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை சந்திப்பதற்கு இதுதான் முழுமுதல் காரணம். தமிழ் சினிமாவை நம்பி இந்த துறையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக அரசுக்கும் திரைப்படத் துறை கணிசமான வருமானத்தை தருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பை வெளிமாநிலங்களில் நடத்துகிறார்கள்.

இதனால், இங்குள்ள தொழிலாளர்களின் வருமானம் குறைந்துவிட்டது. படம் முழுவதும் வெளியில் எடுப்பதால், தமிழ்நாட்டில் செலவாக வேண்டிய பணம் வேறு இடத்தில் செலவாகிறது. எடுத்துக்காட்டாக, பெரிய பட்ஜெட் படத்தில் ஒரு நாளில் கார் உள்ளிட்ட சுமார் 100 வாகனங்கள் பயன்படுத்தப்படும். குறைந்தபட்சம் 100 ஓட்டுநர்கள், 150 லைட் மேன் மற்றும் நூற்றுக்கணக்கான இளநிலை நடிகர்கள் வேலை செய்வார்கள். ஆனால், இத்தகைய காட்சிகளை தமிழகத்தில் எடுக்காமல், வெளிமாநிலத்தில் எடுத்தால், இந்த வேலைகள் எல்லாம் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குதான் கிடைக்கும். தமிழ்நாட்டில் படம் எடுக்கும்போது அரசுக்கு கிடைக்கவேண்டிய கட்டணங்கள் வெளிமாநில அரசுகளுக்குக் கிடைக்கிறது. இதனால் குறைந்தபட்சம் ஒவ்வோர் ஆண்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி இழப்பு ஏற்படுகிறது.

சினிமாவுக்குள் அரசியலைக் கொண்டு வராதீர்கள் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தீர்கள். என்ன விதமான அரசியல் தலையீடு இருக்கிறது?

நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில்,பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு படப்பிடிப்பில் பிரச்சனை ஏற்பட்டது. தற்போதைய நடிகர்களில் விஜய்தான் தமிழகத்தில் ஷூட் செய்யும் படங்களில் நடிக்கிறார். கோயிலில் ஷூட் செய்ய தடை இருக்கிறது, சாலைகளில் ஷூட் செய்ய பலவிதமான கட்டுப்பாடுகள், கடற்கரை பகுதியில் படம் எடுக்கவும் விதவிதமான கட்டுப்பாடுகள் உள்ளன. இதுபோல படங்களுக்கு தேவையான இயல்பு வாழ்க்கை காட்சிகளை எளிதாக படமாக்க முடியவில்லை.

படத்தின் காப்புரிமை RK SELVAMANI / FACEBOOK

யாராவது தேவையற்ற முறையில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என புகார்கள் கொடுத்தால்கூட, உடனடியாக படம் எடுக்கத் தடை விதிக்கிறார்கள். சினிமாவில் வரும் வசனங்கள், கதைக்களம் போன்றவற்றுக்கு பிரச்சனை குறைவு. ஆனால் படம் எடுப்பதற்கு போராட்டங்களை சந்திக்கவேண்டியுள்ளது. சமீபத்தில் பாஜகவினர் நடந்துகொண்டவிதம் ஒரு எடுத்துக்காட்டு.

ரஜினி, அஜித், கமல் உள்ளிட்டவர்களின் படங்களை ஆந்திரா, மும்பை உள்ளிட்ட இடங்களில் எடுக்கிறார்கள். சமீபத்தில் அஜித்தின் ஒரு படத்தில் தேனியில் உள்ள ஒரு கோயிலின் செட்டை ஹைதராபாதில் அமைத்து எடுத்தார்கள். தேனியில் அந்த படம் தயாரிக்கப்பட்டிருந்தால், தேனி மாவட்ட மக்களுக்கு பல லட்சம் வருமாம் கிடைத்திருக்கும். உள்ளூரில் உள்ள ஹோட்டல், சாப்பாட்டு கடை, இதர கடைகளுக்கு லாபம் கிடைத்திருக்கும். குறைந்தபட்சம் படத்திற்கு செலவு இரண்டு கோடி என்றால், ரூ.25 லட்சம் உள்ளூர் மக்களுக்கு கிடைத்திருக்கும்.

படம் எடுக்கும் இடங்களில் கட்டுப்பாடு இருப்பதுதான் அரசியல் தலையீடா?

அரசாங்கத்தின் தலையீடு தேவைதான். ஆரோக்கியமான தலையீடு அவசியம். குறைந்தபட்சம் ரூ.3,000 கோடி வருமான கொடுக்கும் துறையாக திரைப்படத் துறையை பார்க்காமல், சினிமா கேளிக்கையான விஷயம் என நினைக்கிறார்கள். இதுபோன்ற நஷ்டம் வேறு தொழில் துறையில் வந்தால், உடனடியாக உரியவர்களை அழைத்துப் பேசி, சரிப் படுத்துவார்கள்.

எடுத்துக்காட்டாக, ஆந்திராவைப் பொறுத்தவரை, ஒரு திரைப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆந்திராவில் படமாக்கப்பட்டால், அந்த படத்திற்கு வெறும் 8 சதவீதம்தான் வரி. ஆனால் படத்தை வெளிமாநிலத்தில் எடுத்தால், 24 சதவீதம் வரி விதிக்கிறார்கள்.

இதுபோன்ற விதிகளை தமிழக அரசும் கொண்டுவரவேண்டும். ஒரு படத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் தொடங்கி, தயாரிப்பு செலவுகள் உள்ளிட்டவற்றை முறைப்படுத்தவேண்டும். இதுபோன்ற தலையீடுகள் தேவை. படம் எடுப்பதற்கு பிரச்சனைகள் தரும் தலையீடுகளைத்தான் தவிர்க்கவேண்டும் என வேண்டுகிறோம். அரசங்கத்திற்கும் எங்களுக்கும் நல்ல உறவு இருக்கிறது. அதனை மேலும் புதுப்பிக்க இதுபோன்ற நடவடிக்கைகள் தேவை.

தயாரிப்பு செலவுகளை எப்படி அரசாங்கம் முறைப்படுத்த முடியும்? ஏன் முறைப்படுத்தவேண்டும்?

சமீப காலங்களில், யாரும் சொந்தப் பணத்தில் படம் எடுப்பதில்லை. கார்ப்பரேட் கம்பெனிகள் தான், பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கிறார்கள். வரவுக்கு மீறிய செலவில், படம் எடுக்கிறார்கள். ஒரு படத்தின் தயாரிப்பு செலவில் முக்கிய நடிகர்களின் சம்பளம் மட்டும் 80 சதவீதமாக இருந்தால், படம் என்ன தரத்தில் தயாராகும்? ஆந்திரவில் 100 கோடிக்கு படம் எடுத்தால், அதில் 30 சதவீதம்தான் நடிகர்களின் சம்பளம் இருக்கும்.

தமிழகத்தில், சுமார் 70 சதவீதம் வரைக்கும் சம்பளமாக கொடுத்து பெரிய நடிகர்கள், மியூசிக் டைரக்டர், கேமராமேன்களை புக் செய்துவிடுகிறார்கள். இதுபோன்ற படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க, லைட் மேன், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், ஓட்டுநர்களின் சம்பளத்தை குறைக்கிறார்கள். அல்லது ஆட்களைக் குறைத்து, பணியில் இருப்பவர்களை அளவுக்கு மீறி வேலைவாங்குகிறார்கள். படம் வெளியான முதல் நாளே இமாலய வெற்றி எனக் கூறி ஏமாற்றுகிறார்கள்.

ஒரு சில படங்களில், படம் வெளியான பிறகு சரியாக படம் ஓடவில்லை என்பதால், தான் வாங்கிய சம்பளத்தைவிட அதிகமான தொகையை தயாரிப்பாளருக்கு கொடுத்த நடிகர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். திரைப்பட வளர்ச்சி வாரியம் என்ற பெயரில், தமிழகத் திரைத்துறைக்கு ஓர் அமைப்பு வேண்டும்.

சுமார் ஐந்து லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் சினிமா துறையை முறைப்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும். அரசாங்கத்தோடு, நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என பலரும் கலந்துபேசி மாற்றத்தை கொண்டுவரவேண்டும். திரைத்துறை மூலமாக கிடைக்கும் வருமானத்தை உறுதிப்படுத்தவேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்