Coronavirus News: 'வுஹான் 400' 39 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த The Eyes of Darkness நாவல் - வரலாற்று புதிர்

கொரோனா வைரஸ் குறித்து முன்பே கணித்த மர்ம நாவலின் கதை இதுதான்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸை போன்று ஓர் உயிர்க் கொல்லி வைரஸ் குறித்து சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த "த ஐஸ் ஆப் டார்க்னஸ்" என்ற நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதினங்களின் உண்டாக்கும் உலகம்

நல்ல புதினங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை. நாம் அறிந்திடாத உலகத்திற்கு அழைத்து செல்லும் திறன் படைத்தவை. படைப்பாளியின் கற்பனையில் உருவான ஒரு சம்பவம் எதிர்காலத்தில் உண்மையாக நடைபெறும்போது அந்த படைப்பாளி அழியா புகழ் பெறுகிறார்.

கண்ணகியும், கோவலனும் வானூர்தியில் சென்றார்கள் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எழுதும் போது, வானூர்திக்கு எப்படியான உருவத்தை தனது மனதில் சிருஷ்டித்திருந்தார் எனத் தெரியவில்லை.

சமகாலத்தில் அன்பே சிவன் திரைப்படத்தில் சுனாமி என்ற வார்த்தையைக் கமல் பயன்படுத்துவார். ஆனால், அந்த படம் வெளியாகி அடுத்த ஓராண்டில் சுனாமி தமிழகத்தை தாக்கிய போது, கமலை அனைவரும் நினைவு கூர்ந்தார்கள்.

இது இந்திய - தமிழக நிலவரம் என்றால், சர்வதேச அளவிலும் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்தது உண்டு.

டமாஸ்கஸ் குப்பைகளின் குவியலாக மாறும்

பட மூலாதாரம், AFP

"டமாஸ்கஸ் ஒரு நகரமாக இருக்காது, அது குப்பைகளின் குவியலாக மாற்றப்படும்". - இவ்வாறாக பைபிளின் பழைய ஏற்பாட்டின் 17-ம் அதிகாரத்தின் முதல் வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் உள்நாட்டு போரினால் சிதைந்த போது பைபிளின் இந்த பழைய ஏற்பாட்டு வாசகம் சர்வதேச அளவில் வைரலானது.

சிரியா உள்நாட்டு யுத்தத்தின் பிடியில் இருக்கும் என்று தீர்க்கதரிசி ஏசாயா கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே கணித்ததாகச் சொல்லி பகிர்ந்தனர்.

ஹிட்லர், இரட்டைகோபுர தாக்குதல் என சர்வதேச அளவில் வரலாற்று முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் பலரால் காலங்களைக் கடந்தும் கொண்டாடப்படுகிறார்.

இப்போது அப்படிதான் 'தி ஐஸ் ஆஃப் டார்க்னஸ்' நாவலை எழுதிய டீன் கூன்ட்ஸ் நினைவு கூறப்படுகிறார்.

'இருளின் விழிகள்'

தி ஐஸ் ஆஃப் டார்க்னஸ் நாவலின் 39வது அத்தியாயத்தில் 'வுஹான் 400' வைரஸ் என ஒரு வைரஸ் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நாவலின் கதை, வுஹான் 400 வைரஸ் ஒரு ஆய்வகத்தில் ஆயுதமாக உருவாக்கப்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது.

இப்போது தி ஐஸ் ஆஃப் டார்க்னஸின் இந்த பகுதியை கொரோனா வைரஸுடன் ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, "கொரோனா வைரஸ் சீனர்களால் வுஹான் -400 என்று அழைக்கப்பட்ட ஒரு உயிரியல் ஆயுதமா? இந்த புத்தகம் 1981 இல் வெளியிடப்பட்டது." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நாவலின் அடிநாதம்

அமெரிக்க எழுத்தாளரான டீன் கூன்ட்ஸால் எழுதப்பட்ட இந்த மர்ம நாவல் 1981 ஆம் ஆண்டு வெளியானது.

ஓர் இளைஞர் ஒரு சிறு குழுவுடன் மலையேற்றத்திற்குச் செல்கிறார். மலையேற்றத்துக்குச் சென்ற அனைவரும் மரணித்துவிட்டதாகத் தகவல் வருகிறது. உடைந்து போகும் அந்த இளைஞரின் தாய் இதுதான் விதி என நடந்ததை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சில நாட்களில் தனது மகன் இறக்கவில்லை என்பதை சில சமிக்ஞைகள் மூலம் அந்த தாய் உணர்கிறார். பின் அவர் தனது மகனைத் தேடி செல்கிறார். இதுதான் அந்த நாவலின் கதை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: