டி.எம். கிருஷ்ணா: 'பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்'

டி.எம். கிருஷ்ணா

பட மூலாதாரம், Getty Images

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா சமீபத்தில் Sebastian & Sons என்ற பெயரில் மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகம், அதை எழுதுவதற்கான நோக்கம், மிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இடையிலான சிக்கலான உறவு, கர்நாடக இசை உலகில் நிலவும் ஜாதிப் பாகுபாடு ஆகியவை குறித்தெல்லாம் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் டி.எம். கிருஷ்ணா. பேட்டியிலிருந்து:

கே. மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்த இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான காரணம் என்ன?

ப. இதற்கு முன்பாக, Southern Music: Karnatic Story என்று ஒரு புத்தகத்தை எழுதினேன். 2013ல் வெளியானது. கர்நாடக இசையின் வரலாறு, சமூகவியல் பற்றிப் பேசும் புத்தகம் அது. அதில் ஜாதி என ஓர் அத்தியாயம் இருந்தது. பெரிய விவாவதத்திற்குள்ளான அத்தியாயம் அது. அப்போதுதான் நான் கவனித்தேன், அந்தப் புத்தகத்தில் இசைக் கருவிகளைச் செய்பவர்களைப் பற்றி நான் ஒன்றுமே எழுதவில்லை.

ஆகவே என்னுடைய கண்ணோட்டத்திலும்கூட, கர்நாடக இசை உலகம் என்றால் அதைப் பாடுபவர்கள், வாசிப்பவர்கள் மட்டும்தான் இருந்திருக்கிறார்கள்.

மிருதங்கம் குறித்த மோகம் எங்க எல்லோருக்குமே சின்ன வயதிலிருந்தே உண்டு. அதை வாசிப்பது குறித்தும், பெரிய வித்வான்கள் எப்படி வாசித்தார்கள் என்பது குறித்தும் பேசிக்கொண்டே இருப்போம். பாலக்காட்டு மணி ஐயர், பழனி சுப்பிரமணியம் பிள்ளை, உமையாள்புரம் சிவராமன் என பல மிருதங்க வித்வான்களைப் பற்றி கதைகள் பேசுவோம்.

பட மூலாதாரம், Mint/ getty images

இந்த அத்தியாயத்தை எழுதும்போதுதான், இசைக் கருவிகளைச் செய்பவர்களைப் பற்றி நான் ஏதும் எழுதவேயில்லையே என்று தோன்றியது. ஆக, என்னுடைய பார்வையிலும்கூட ஒரு வரையறை இருந்திருக்கிறது. இசை என்றால் என்ன, அதை யார் உருவாக்குகிறார்கள் என்பது குறித்து என் மனதில் இருந்த சிந்தனையிலிருந்துதான் இந்த வரையறை வந்தது.

மற்றொன்று, ஜாதி சார்ந்துவந்த வரையறை. இசைக் கருவிகளைச் செய்பவர்கள், அவர்களுடைய வாழ்க்கை, வரலாறு ஆகியவையெல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே இருந்திருக்கவில்லையென்பதை உணர்ந்தேன். இந்த உணர்விலிருந்துதான் மிருதங்கம் செய்பவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாமே என இறங்கினேன்.

Southern Music: Karnatic Story புத்தகத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது பதிப்பு வரும்போது மிருதங்கம் செய்பவர்கள் பற்றி ஒரு பத்தி எழுதியிருந்தேன். அதை எழுதும்போதுதான் எனக்கு அவர்களைப் பற்றி எதுவுமே தெரியவில்லை என்பது தெரிந்தது. அந்த நேரத்தில்தான், அவர்களைப் பற்றியும் அவர்களுடைய தொழிலைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பினேன். அப்படித்தான் Sebastian & Sonsஐ எழுத ஆரம்பித்தேன்.

கே. எத்தனையோ இசைக் கருவிகள் இருக்கும்போது, ஏன் மிருதங்கம் செய்யும் கலைஞர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தீர்கள்?

ப. கர்நாடக இசையில் மிருதங்கத்திற்கும் இருக்கும் முக்கியத்துவம் ஒரு காரணம் என்று சொல்லலாம். கர்நாடக இசையில் மிருதங்கத்திற்கு ஓர் அந்தஸ்து இருக்கிறது. அந்த எண்ணமே மிருதங்கம் மீது என்னை ஈர்த்திருக்கக்கூடும். இது தவிர இன்னொரு விஷயமும் இருக்கிறது.

தம்பூராவை எடுத்துக்கொள்வோம். அதில் தந்தி மாற்றுவது தவிர பெரிதாக வேறு எந்தப் பிரச்சனையும் வராது. அதை நானே செய்துவிடுவேன். ஆகவே எனக்கும் அந்த இசைக் கருவியைச் செய்தவருக்கும் தொடர்ச்சியான தொடர்பு கிடையாது.

மிருதங்கம் அப்படியல்ல. கச்சேரிக்கெல்லாம் செல்லும்போது மிருதங்க வித்வான்கள் தொடர்ந்து மிருதங்கத்தில் உள்ள பிரச்சனைகள், அதைச் சரி செய்வது பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்படியாக அந்த இசைக் கருவியோடு ஓர் உறவு ஏற்படுகிறது. இது இரண்டாவது காரணம்.

மிருதங்கம் ஒரு தோல் வாத்தியம். அதுவும் பசுவின் தோலை பயன்படுத்தி செய்யப்படும் வாத்தியம். ஆனால், இந்த இசையைப் பாடுபவர்கள், கேட்பவர்கள் பசுவை வணங்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள். 99 சதவீதம் சைவ உணவை உண்பவர்கள் என்றுகூட சொல்லலாம்.

பட மூலாதாரம், Education Images / getty images

ஆகவே, தூய்மை X தூய்மையின்மை என்ற முரண்பாடு இந்த மிருதங்கத்தில் இருக்கிறது. இது குறித்து யாரும் கவலைப்படவில்லை. ஏன், நானே அதை பார்க்கவில்லையே? ஒரு மிருகத்தைக் கொன்று செய்யப்படும் வாத்தியம் எப்போது தூய்மையானதாகிறது? இந்தக் கேள்விகள் எல்லாம் எனக்குள் எழுந்தன. இதையெல்லாம் சேர்த்துதான் இந்தப் புத்தகம் உருவானது.

கே. இந்தப் புத்தகத்திற்கு ஏன் செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் எனப் பெயரிட்டீர்கள்?

ப. நான் பார்த்தவரைக்கும் ஒரு ஆறு - ஏழு தலைமுறையாக இந்த மிருதங்கம் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் செபாஸ்டினுடைய குடும்பத்தினர். செபாஸ்டினுடைய அப்பாவின் பெயர் ஆரோக்கியம் அல்லது அடைக்கலம். செபாஸ்டியன்தான் முதன்முதலில் முழுமையாக மிருதங்கம் செய்யும் வேலையில் இறங்கியவர்.

இதுபோல பாலக்காட்டிலும் ஒரு குடும்பம் இருக்கிறது. ஆனால், நான் பார்த்ததில் இந்தத் தொழிலில் மிக மூத்தவர் செபாஸ்டியனாகத்தான் இருக்க வேண்டும். செபாஸ்டியனுக்குப் பிறகு, அந்தத் தொழிலில் இருப்பவர்கள் எல்லோருக்குமே தந்தையாக அவரை நான் நினைக்கிறேன்.

தென்னிந்தியாவில் பல இடங்களில் இந்த And Sons என்று நிறுவனங்களுக்கு பெயர் வைப்பார்கள், TVS & Sons மாதிரி. ஆகவே அதுபோல செய்யலாம் என்று வைத்தேன். இதுதான் பெயர் என திடீரெனத் தோன்றியது. அதற்குப் பிறகு நான் அதை மாற்றவேயில்லை.

பட மூலாதாரம், @tmkrishna twitter page

கே. மிருதங்கம் செய்பவர்கள் பெரும்பாலும் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள்?

ப. 99 சதவீதம் பேர் தலித்துகளாகத்தான் இருக்கிறார்கள். செபாஸ்டியன் குடும்பத்தினர் தலித் கிறிஸ்தவர்கள். அதற்கு முன்பு சென்னையில் இதைச் செய்து கொண்டிருந்தவர்கள், தெலுங்கு பேசக்கூடியவர்கள். திருவள்ளூர் எல்லைப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள். சந்திரய்யா, முனுசாமி, வெங்கடேசன் போன்றவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

பாலக்காடு பக்கம் சென்றால், பெருவம்பா என ஒரு கிராமமே இந்த தொழிலைச் செய்கிறது. சென்டை, மிருதங்கம் செய்வதுதான் அந்த கிராமம் முழுக்க. சாலைகளிலேயே தோல் அடித்திருப்பதைப் பார்க்கலாம். விஜயநகரம், விஜயவாடா பகுதிகளிலும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் விதிவிலக்குகளும் உண்டு.

சென்னையில் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் செய்கிறார்கள். ஒரு பிராமணர் இருக்கிறார். கர்நாடகத்தில் ஒரு பிராமண குடும்பத்தினர் இதைச் செய்கிறார்கள். ஆனால், 99 சதவீதம் பேர் தலித்துகள்தான்.

மிருதங்கம் வாசிப்பவர்களில் 99 சதவீதம் பேர் பிராமணர்கள். மிருதங்கம் செய்பவர்களில் 99 சதவீதம் பேர் தலித்துகள். அதனால்தான் இந்தத் தொடர்பு வழக்கமான ஒன்றாக இல்லை. ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டியதால்தான் இந்தத் தொடர்பு நீடிக்கிறது. கடந்த நூற்றாண்டில் இந்த உறவில் பல மாற்றங்கள் வந்திருக்கின்றன.

கே. மிருதங்கம் செய்வதில் ஜாதி ரீதியான ஒரு பிரிவினை இருக்கிறது என்பதை இந்தப் புத்தகத்திற்காக பணியாற்றத் துவங்கிய பிறகுதான் உணர்ந்தீர்களா?

ப. இதில் ஜாதி இருக்கிறது என்பது முதலில் இருந்தே தெரியும். ஆனால், அவர்களிடம் பேட்டியெடுக்க ஆரம்பித்த பிறகுதான் இதில் என்னவெல்லாம் இருக்கிறது, ஜாதி எப்படி செயல்படுகிறது, அதில் எத்தனை பரிமாணங்கள் இருக்கின்றன, ஒவ்வொருவரும் அந்த பரிமாணங்களை எப்படிப் பார்க்கிறார்கள், அதோடு எப்படி செயல்படுகிறார்கள் என்பதெல்லாம் முதலில் தெரியவில்லை.

புத்தகத்திற்கான பேட்டிகளையெல்லாம் முடித்த பிறகு ஒரு வருடம், பேட்டிகளை பார்ப்பது, படிப்பது என்றுதான் இருந்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு முழுமையான புரிதல் கிடைத்தது.

கே. மிருதங்கம் செய்பவர்களிடமும் வாசிப்பவர்களிடமும் பேசும்போது, ஜாதி தொடர்பான அம்சங்கள், பாகுபாடுகள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதா?

ப. இதில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அதில் உள்ள நுணுக்கம், கண்ணுக்குத் தெரியாத அம்சங்கள்தான். அதை யாரும் பொதுவாகப் பார்ப்பதில்லை. அவர்கள் சிந்தனையிலேயே இந்தப் பாகுபாடு குறித்த கவனம் இல்லை.

மிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இடையிலான உறவே வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருக்கும். ஒரு பக்கம் பிராமணர்கள். அவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வழக்கமான சமுதாயத்தில் என்ன ஓர் உறவு இருக்கிறது? ஒன்றும் இல்லை. அதிகபட்சம் கடைகளில் ஏதாவது வாங்கியிருப்பார்கள்.

ஆனால், இங்கே ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது. ஏனென்றால் மிருதங்கம் என்பது வெறும் இசைக்கருவி அல்ல. அது ஒரு உணர்வுரீதியான கருவி. இம்மாதிரி உணர்வுள்ள ஒரு இசைக் கருவி மூலமாக இரு சமூகத்தின் இடையிலேயும் ஓர் உறவு ஏற்படுகிறது. இந்த உறவு நிச்சயம் சிக்கலானதாகத்தான் இருக்கும். எளிதாக, சாதாரணமானதாக இருக்க முடியாது.

ஆகவே மிருதங்கம் என்பது வெறும் இசைக் கருவி மட்டுமல்ல. உறவுக்கான பாலமாகவும் இருக்கிறது. சாதாரணமாகத் தெரியும் விஷயங்களுக்குள் என்னவெல்லாம் இருக்கிறது என்று சிந்திக்க எனக்கே இது ஒரு வாய்ப்பாக இருந்தது.

கே. மிருதங்கம் பசுவின் தோலால் செய்யப்படும் கருவி என்கிறீர்கள். இதற்காக பசு கொல்லப்படுகிறது என்பது மிருதங்கக் கலைஞர்களிடம் ஏதாவது அதிர்ச்சியை எந்தக் கட்டத்திலாவது ஏற்படுத்துகிறதா?

ப. மிருதங்கம் மூன்றுவிதமான தோல்களால் செய்யப்படுகிறது. பசுவின் தோல், எருமை மாட்டின் தோல், ஆட்டின் தோல். பசுவின் தோல் பயன்படுத்தப்படுகிறதென்பது மிருதங்கம் வாசிப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அவர்கள் சொல்லும் சமாதானம் என்னவென்றால், மிருதங்கம் செய்ய தோலை எடுப்பதற்காக பசுவைக் கொல்வதில்லை என்பதுதான்.

எப்படியும் பசுவைக் கொல்லப்போகிறார்கள். நாங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பார்கள். இது மிக அபத்தமான வாதம். அப்படியானால், தோல் வாங்குபவர்கள் எல்லோரும் இதே வாதத்தை வைத்தால் ஏற்பார்களா?

செத்துப் போன மாட்டின் தோலைத்தான் பயன்படுத்துவதாக சிலர் சொல்கிறார்கள். அது பொய். செத்துப்போன மாட்டின் தோலை வைத்து மிருதங்கம் செய்ய முடியாது. இதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்று கேட்டால், தயாராக இல்லை என்றுதான் சொல்வேன்.

பட மூலாதாரம், AFP Contributor / getty images

ஒரு மாட்டின் தோலை எடுத்து, சுத்தம் செய்து, பதப்படுத்தி, மிருதங்கத்தில் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டுவருபவர்கள் மிருதங்கம் செய்பவர்கள். ஆனால், சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதால், நம் உரையாடல்களிலிருந்தே அவர்களைத் தவிர்க்கிறோம். இது அநியாயம் என்பதை உணர வேண்டும்.

மாட்டைக் கொன்று, அதன் தோலை எடுத்து, ஆணி அடித்துக் கட்டி - இதெல்லாம் எளிதான வேலையில்லை. அவர்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் வரும். சிலவற்றைத்தான் நான் எழுதியிருக்கிறேன். சிலவற்றை எழுதவில்லை. இதையெல்லாம் தாண்டி, நீங்கள் புனிதமாகக் கருதும் ஓர் இசைக் கருவியைத் தருகிறார்கள். அப்படியிருக்கும்போது, அவர்களைப் புறக்கணிப்போது சமூக அநீதி என்றே சொல்வேன்.

எல்லா மாட்டுத் தோலிலும் இதைச் செய்ய முடியாது. தோலைப் பார்த்துதான் தேர்ந்தெடுப்பார்கள். மாட்டிற்கு எவ்வளவு வயதாகியிருக்கிறது, இந்தத் தோலை பயன்படுத்தினால் நாதம் வருமா என்பதையெல்லாம் பார்த்துதான் தோலைத் தேர்வுசெய்கிறார்கள். ஆகவே இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

கே. புத்தகத்திற்காக மாடுகளைக் கொல்லும் இடங்களுக்குச் சென்றிருக்கிறீர்கள். எப்படி உணர்ந்தீர்கள்?

ப. நான் என்ன அனுபவிப்பேன் என்று நினைத்தேனோ, அதை அனுபவிக்கவில்லை. வாந்தி எடுத்து ஓடிவந்துவிடுவேன் என்று நினைத்தேன். அப்படி நடக்கவில்லை. அங்கே சென்றது இன்னொரு உலகிற்குள் சென்றதைப் போல இருந்தது. அது ஒரு நிஜமான உலகம், தினமும் நடக்கும் விஷயம். இதெல்லாம் சாதாரணம் என்று கருதும் உலகிற்குள் நுழைந்துவிட்டேன். ஆகவே எனக்கு பெரிதாக படவில்லை.

கே. கர்நாடக இசை உலகம் குறித்து உங்களுக்கு ஒரு விமர்சனம் இருக்கிறது. இந்தப் புத்தகத்திற்கான தேடல், அந்தப் பார்வையை மாற்றியதா, உறுதிப்படுத்தியதா?

ப. இந்தப் புத்தகத்திற்கான தேடல், அந்த விமர்சனத்தை இன்னும் நுணுக்கமாக புரியவைத்தது. அப்படித்தான் சொல்ல வேண்டும்.

கே. மிருதங்கம் வாசிக்கும் கலைஞர்கள், மிருதங்கம் செய்பவர்களை ஒதுக்குகிறார்களா அல்லது அவர்களே ஒதுங்கிக்கொள்கிறார்களா?

ப. இந்தக் கேள்வியை பெண்ணியம் குறித்து பேசுபவர்களிடமும் வைக்க முடியுமா? ஆணாதிக்கம் என்பது இல்லை. பெண்கள்தான் பின்வாங்குகிறார்கள் என்று சொல்லலாமா? நிற ரீதியான, நிற ரீதியான பாகுபாட்டை புரிந்துகொள்வதைப் போல ஜாதி ரீதியான பாகுபாட்டை யாரும் புரிந்துகொள்வதில்லை?

கே. கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் மார்கழி மாத கச்சேரிகளில் பங்கேற்பதில்லை. அதற்கு நீங்கள் சொன்ன காரணங்கள் ஏதாவது மாறியிருக்கிறதா? இசை உலகிற்குள் விவாதிக்கிறார்களா?

ப. உள்ளுக்குள் விவாதிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். கர்நாடக இசை உலகத்திற்குள் மட்டுமல்ல, கலை உலகிற்குள்ளேயே இது குறித்து கேள்வியெழுப்பப்படுகிறது. இதிலிருந்து தப்ப முடியாது.

அதில் எனக்கு சந்தோஷம். கர்நாடக இசை உலகில் சிறிய மாற்றங்கள் வந்திருக்கின்றன. அது என்னனு சொல்ல மாட்டேன். சொன்னால் நின்றுவிடுமோ என்ற பயம் இருக்கிறது. ஆனால், டிசம்பர் சீஸன்ல மாற்றங்கள் வந்திருக்கா என்று குறிப்பிட்டுக் கேட்டால், என் கண்ணுக்குத் தெரிந்து, ஏதும் இல்லை.

பட மூலாதாரம், NurPhoto / getty images

நான் கர்நாடக இசை உலகிற்குள் இருப்பவன். நான் இப்படிப் பேசுவதால், எனக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காமல் போகாது. அதுதான் நிஜம். அதுதான் ஜாதி. என் வாழ்க்கை முழுவதும் எனக்குக் கிடைக்கக்கூடிய பலன் அது. நான் ஜாதியில்லையென எங்கிருந்த கத்தினாலும் என் ஜாதி தரும் பலன் என் வாழ்க்கை முழுக்க எனக்கு இருக்கு.

கே. கர்நாடக இசையின் உள்ளார்ந்த ஒரு விஷயமாக ஜாதி இருக்கிறதா?

ப. எல்லாவற்றிலும் ஜாதி இருக்கிறது. ஏன் பறை சில இடங்களில் மட்டும் வாசிக்கப்படுகிறது, கூத்து என்றால் கீழாக பார்க்கும் பார்வை எதிலிருந்து வருகிறது - எல்லாம் ஜாதியிலிருந்துதான் வருகிறது. இப்படி எல்லாவற்றிலும் ஜாதி இருக்கும்போது கர்நாடக இசையில் மட்டும் எப்படி இல்லாமல் இருக்கும்?

ஹிந்துஸ்தானி இசையிலும் இருக்கிறது. சமூகத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ, அது கலை உலகத்திலும் இருக்கும். இதை நான் ஏன் இங்கே பேசுகிறேன் என்றால், இதுதான் என் உலகம்.

கே. கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறீர்கள். அது உங்கள் இசை தொடர்பான பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா?

ப. சில கச்சேரிகளுக்கு பிரச்சனை வருகிறது. முதலில் கச்சேரியை ஏற்பாடு செய்வார்கள். பிறகு போன் செய்து "ரொம்ப பிரச்சனையா இருக்கு சார்"ன்னு சொல்லி ரத்து செய்வது உண்டு. அதைத் தாண்டி வருவதற்கு ஆண் என்பதில் துவங்கி எனக்கு சாதகமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. அதனால், இதை ஒரு பெரிய பிரச்சனையாக நான் சொல்லக்கூடாது. உதாரணமாக, இந்தப் புத்தகத்தை வெளியிட முதலில் ஒரு இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் இடம் தர மறுத்தார்கள். என்னால் இன்னொரு இடத்தை ஏற்பாடு செய்ய முடிந்ததே? இம்மாதிரி சாதகமான சூழல் இல்லாதவர்களைப் பற்றித்தான் நாம் பேச வேண்டும்.

கே. கர்நாடக இசை உலகில் ஜாதி பாகுபாடு இருப்பதாக புகார் சொல்லும்போது, எதிர் விமர்சனமாக இப்படி ஒரு கேள்வி வைக்கப்படுகிறது: மற்ற ஜாதியினரை யார் அந்த இசையை கற்றுக்கொள்ள வேண்டாம் என சொன்னது? அவர்களும் கற்றுக்கொண்டு மேலே வரலாமே, அவர்களும் இதற்கான அமைப்புகளை உருவாக்கிக்கொள்ளலாமே?

ப. இதற்கான பதில் சிக்கலானது. சுருக்கமாக சொல்கிறேன். மற்ற ஜாதியினர் கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொள்ளவில்லை என்று சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். அல்லது கிணற்றுக்குள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எத்தனை இசைப் பள்ளிகள் இருக்கின்றன? வருடத்தில் எத்தனை மாணவர்கள் பாட்டு, வீணை, வயலின், கஞ்சிரா, கடம் என எத்தனை பிரிவுகளில் படிக்கிறார்கள்?

சென்னையில் மட்டும் 300 பேர் இருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 6000 பேர் படித்து வெளியில் வந்திருப்பார்கள். இந்த 6,000 பேரில் பத்து பேர்கூட திறமைவாய்ந்தவர்கள் இல்லையா? அப்படி நினைத்தீர்கள் என்றால், உங்களிடம் பேச ஏதுமில்லை.

பட மூலாதாரம், Twitter

படித்து முடித்த பிறகு இந்த 6,000 பேரும் எங்கே போகிறார்கள்? இந்த இசை உலகிற்கு வர அவர்களுக்கு வழி இருக்கிறதா? ஏன் இல்லை? ஒரு பெரிய பிரிவினை இருக்கிறது. அது எங்கிருந்து வருகிறதென்றால், அது சமூகத்திலிருந்துதான் வருகிறது. கண்ணுக்குத் தெரியாத திரை போலத்தான் ஜாதி இயங்குகிறது. ஏன், உள்ளே வரலாமே என்று நான் சொல்லுவேன். இதை நுணுக்கமாக பார்க்கவில்லையென்றால் நமக்கு பாரபட்சமென்றாலே என்னவென்றாலே தெரியாது.

ஏன் நாதாஸ்வரம், தவிலே ஒதுக்கிவைக்கப்பட்டுவிட்டதே.. டிசம்பர் சீஸனில் எத்தனை நாதஸ்வர - தவில் கச்சேரி நடக்கிறது? யாராவது இதற்கு பதில் சொல்லுங்க.

கலை - கலாசாரத்தில் இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், கலாச்சாரத்தை ஒரு ஜனநாயக உரையாடலாகவே யாரும் யோசிக்கவேயில்லை. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை ஜனநாயகப்படுத்த வேண்டுமென நினைக்கிறோம். கலாச்சாரம், கலை குறித்து அப்படி நினைத்ததில்லை. மற்ற இடங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளை இங்கேயும் யோசிக்க வேண்டும். இங்கே ஏன் இடஒதுக்கீடு கூடாது?

கே. மியூசிக் அகாதெமி, நாரத கான சபா போல தமிழிசைச் சங்கம் உருவானது. அது போன்ற சபாக்கள் ஏன் பிற ஜாதியினருக்கு வாய்ப்புகளை அளிக்கவில்லை?

ப. தமிழிசை இயக்கம் அடிப்படையில் மொழி சார்ந்த விஷயம் என்றாலும் அதில் ஜாதியும் இருந்தது. நகரத்தார் அதில் தீவிரமாக செயல்பட்டார்கள். பிராமண சபாக்களுக்கு மாற்று சக்தியாக அவர்கள் செயல்பட்டார்கள். ஆனால், காலப்போக்கில் யார் பாடினார்கள்? அங்கே பாடுபவர்களும் இங்கே பாடுபவர்களும் ஒரே ஆட்களாகிவிட்டார்கள். இதற்கென ஒரு வழிமுறையைக் கண்டறியாவிட்டால் அதுதான் நடக்கும்.

இப்போதும் கட்டுப்பாடு பிராமண சமுதாயத்திடம்தான் இருக்கிறது. தமிழிசை கச்சேரிகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், நீண்ட காலமாக செயல்பட்டுவரும் அமைப்புகளை நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இது எல்லாக் கலைகளிலும் நடக்கிறது.

நாதஸ்வரம், தவில் போன்றவற்றில் இசை வேளாளர்கள் இருந்தாலும் வாய்ப்பாட்டு, மிருதங்கம் போன்றவற்றில் பிராமணர்கள்தானே இருக்கிறார்கள். நான் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவேன் என இந்த சமூகத்திற்குள் இருந்து ஒரு குரல் வராவிட்டால், ஒன்றும் நடக்காது.

கேட்டால் கூட்டம் வரவில்லை என்பார்கள். கூட்டம் வரவேண்டுமென்றால், யார் வர வேண்டும். மறுபடியும் நான்தான் பாட வேண்டும். இது ஒரு பொறி. எல்லா இடத்திலும் இப்படித்தான் நடக்கிறது. ஜாதி தொடர்பான விவாதங்களில் அனைவரும் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் அமைப்பில் மாற்றம் வரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: