அஜித் 'வலிமை' படப்பிடிப்பில் காயமடைந்தார் - நடந்தது என்ன?

'வலிமை' படப்பிடிப்பில் அஜித் காயம் - நடந்தது என்ன?

பட மூலாதாரம், AJITH FANS / TWITTER

ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்து வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த வெற்றியைத் தொடர்ந்து இதே கூட்டணி மறுபடியும் கைகோர்த்திருக்கும் 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் சண்டை காட்சிகளை சென்னையில் அமைக்க முடிவு செய்திருந்தது.

இந்தப் படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்களின் பட்டியல் குறித்த அதிகாரபூர்வமான அறிவுப்பு வெளியாகாத சூழலில் சமூக வலைதளங்களில் வலிமை படப்பிடிப்பின் போது அஜித்திற்கு காயம் ஏற்பட்டது குறித்த தகவல் வைரலாக பரவி வருகிறது.

GetWellSoonTHALA என்ற பெயரில் ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு அது சென்னை டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

விரைவாக அஜித் நலம்பெற வேண்டும் என்று பலரும் இந்த ஹேஷ்டாக்கின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினார்கள்.

இந்த குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் பயிற்சியளித்த தக்‌ஷா குழுவினர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 'Medical Express 2018 UAV Challenge' என்கிற சர்வேதசப் போட்டியில் கலந்து கொண்டு 2ஆம் பரிசு பெற்றனர்.

இந்நிலையில், வருகிற மார்ச் மாதத்தில் மற்றுமொரு போட்டிக்காக இந்தக் குழுவினர் தயாராகி வருவதாகவும், அதற்காக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக படப்பிடிப்பு தேதியை அஜித் தள்ளிப் போடுவதாகவும் தகவல்கள் வெளியானது.

பட மூலாதாரம், SATHYAJOTHIFILMS/TWITTER

இதன் காரணமாக ஹெச். வினோத் படத்தை விரைவாக முடிக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் அதில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அஜித் தொடர்பாக ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளனர்.

'வலிமை' படத்தின் சென்னை படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது நடிகர் அஜித்திற்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், காயத்தையும் பொருட்படுத்தாமல் அவர் அந்த காட்சியை நடித்து முடித்தார் என்றும், படப்பிடிப்பு முடிந்த பிறகே அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள சம்மதித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் தன்னுடைய வேலையில் அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடிப்பவர், அவரால் படப்பிடிப்பில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் படக்குழு  தரப்பில் இருந்து பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளனர். 

'விஸ்வாசம்', 'வேதாளம்', 'விவேகம்' போன்ற அஜித் நடித்த பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: