கொரோனா வைரஸ்: தொழிலாளர்களுக்கு உதவ ரஜினி, அமிதாப் மற்றும் பலர் நடித்துள்ள விழிப்புணர்வு படம்

அமிதாப் ரஜினி

பட மூலாதாரம், Getty Images

கொரோனா அச்சம் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள் போன்றவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த தினசரி ஊதியம் பெறக்கூடிய தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் இணைந்து ஒரு குறும்படத்தில் நடித்துள்ளனர்.

'ஃபேமிலி' என்கிற அந்தக் குறும்படத்தை சோனி டிவி நேற்று வெளியிட்டது. நான்கு நிமிடங்களுக்கு மேலாக இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறும்படத்தில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், சிரஞ்சீவி, ஆலியா பட், புரோசென்ஜித் சாட்டர்ஜி, சிவ ராஜ்குமார், தில்ஜித் தோஸாஞ் என பல்வேறு மொழியை சேர்ந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்தக் குறும்படத்தின் ஆரம்பத்தில் அமிதாப் பச்சன் தன்னுடைய கூலிங் கிளாஸ் கண்ணாடியை கண்டுபிடித்து தருமாறு வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார். அவருடைய கண்ணாடியை ஒவ்வொருவரிடமும் தேடிச் செல்வது போன்றும், அதற்கு அவர்கள் பதில் அளிப்பது போன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறும்படத்தின் இறுதியில் அமிதாப் பச்சனிடம் பிரியங்கா சோப்ரா இப்போது எதற்காக இந்தக் கண்ணாடி எனக் கேட்கிறார். அதற்கு அமிதாப், நான் வெளியில் செல்லப் போவதில்லை, தொலைந்து போகாமல் இருக்கவே தேடச் சொன்னேன் என பதிலளிக்கிறார்.

"இந்த வீடியோவை ஒவ்வொரு நடிகர்களுடைய வீட்டில் தனித்தனியாக எடுக்கப்பட்டது. நாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நீங்களும் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இது தான் வழி அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்." எனக் கூறுகிறார் அமிதாப்.

மேலும், இந்திய சினிமா நடிகர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். இப்பொழுது ஊரடங்கின் காரணமாக சினிமாத் துறையில் உள்ள தொழிலாளர்கள் வருமானமின்றி இருக்கிறார்கள். டிவி சேனல் மற்றும் பிற ஸ்பான்சர்கள் மூலமாக நாங்கள் அவர்களுக்கு உதவ இருக்கிறோம்." எனவும் அந்தக் குறும்படத்தில் அமிதாப் பச்சன் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

பிரசூன் பாண்டே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தக் குறும்படத்தை அந்தந்த நடிகர்கள் அவரவர் வீடுகளில் தனித்தனியாக நடித்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது போல எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குறும்படத்தின் மூலம் கிடைக்கும் நிதியை இந்திய திரை உலகைச் சார்ந்த தினசரி ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டில் இருப்பது, சமூகவிலகல் உட்பட கொரோனா வைரஸிருந்து நம்மை பாதுகாப்பது குறித்த விழிப்பு உணர்வை இந்தக் குறும்படம் வலியுறுத்துகிறது. தற்போது இந்த 'ஃபேமிலி' குறும்படம் யூடியூப் தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இந்த குறும்படத்தை அமிதாப் பச்சன் அவருடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கங்களிலும் பகிர்ந்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: