இர்ஃபான் கான்: யார் இவர்? உலக சினிமாவில் தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்தது எப்படி?

இர்ஃபான்

பட மூலாதாரம், Getty Images

53 வயதாகும் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மும்பையில் இன்று காலமானார். சுமார் 80 திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள மிகச்சில இந்திய நடிகர்களில் ஒருவராவார்.

பாலிவுட்டின் பொதுவான காதல் படங்களுக்கான தோற்றம் இர்ஃபான் கானுக்கு இல்லை என்றாலும், இந்தி திரைப்பட உலகத்தில் தன் பெயரை இவர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

மனதில் தோன்றுவதை அப்படியே பேசுவதற்கு பெயர்போன இர்ஃபான் கானின் சில கருத்துகளால், பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

யார் இந்த இர்ஃபான் கான்?

1967-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார் இர்ஃபான் கான்.

இவரின் தாய் அரச பரம்பரையைச் சேர்ந்தவர். தந்தை டயர் தொழிலில் முக்கிய தொழிலதிபராக திகழ்ந்தார். இர்ஃபானின் இளம் வயதில் அவர் தந்தை காலமான பின்னர், குடும்பத் தொழிலை எடுத்து நடத்துமாறு நிர்பந்திக்கப்பட்டார்.

ஆனால் அவரின் கவனமோ நடிப்பின் பக்கம் இருந்தது.

"யாரும் என்னை நடிகராக நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். என் உடல்வாகு மிகவும் மெலிந்து இருக்கும்" என்று இர்ஃபான் கூறியிருந்தார்.

இந்நிலையில், 1984-ஆம் ஆண்டு National school of Drama-வில் அவருக்கு உதவித் தொகையுடன் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அங்குதான் அவரது மனைவியான சுதாபா சிக்தரை சந்தித்தார் இர்ஃபான் கான்.

பட மூலாதாரம், Getty Images

படிப்பை முடித்த பின்னர், சின்னத்திரை நடிகராக தொலைக்காட்சி தொடர்களில் அவர் நடிக்கத் தொடங்கினார். ஆனால், ஒரு நடிகராக அவருக்கு அது திருப்தி அளிக்கவில்லை.

தனக்குள் இருக்கும் நடிப்புத்திறமை சின்னத்திரையிலேயே முடிந்து விடுமோ என அச்சப்பட்ட அவர், நடிப்புத்தொழிலையே விட்டு விடலாம் என்று முடிவெடுத்தார்.

இந்த நேரத்தில்தான் 1988-ஆம் ஆண்டு சலாம் பாம்பே திரைபடத்தில் கெளரவ தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் நடித்த காட்சிகள் படத்தொகுப்பின் போது நீக்கப்பட்டுவிட்டன.

அதன் பின்னர் அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிரிட்டிஷ்- இந்திய திரைப்படமான வாரியர் என்ற படம் அவரின் முகத்தை உலகறியச் செய்தது.

பட மூலாதாரம், Ronald Grant

படக்குறிப்பு,

தி வாரியர் படத்தில் இர்ஃபான் கான்

அதன் பின்னர் அவரின் திரை வாழ்க்கை ஏறுமுகத்தில் சென்றது. பிக்கு , லன்ச் பாக்ஸ், கரிப் கரிப் சிங்கிள் மற்றும் மக்பூல் ஆகிய பாலிவுட் படங்கள் அவரை சிறந்த நடிகராக நிலைநிறுத்தின.

2013ஆம் ஆண்டு பான் சிங் தோமர் என்ற படத்திற்காக அவர் தேசிய விருதையும் பெற்றார்.

2008-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் ஈர்த்தார். இதுதவிர Inferno, Life of Pi ஆகிய ஹாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

அவர் இறுதியாக அங்க்ரேஸி மீடியம் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்தார். குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும், கதையின் நாயகனாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பில் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாத ஒரு சிறந்த நடிகராகவே அவர் இந்திய திரையுலகில் பார்க்கப்பட்டார். அவரின் இழப்பிற்கு கலை உலகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மத விவகாரங்கள் - ஒதுங்கி இருந்த இர்ஃபான்

மதம் மற்றும் கலாசார ரீதியிலான விவகாரங்களிலிருந்து இர்பான் எப்போதும் சற்று ஒதுங்கியே இருந்தார். இதன் காரணமாகவே தீபா மேஹ்தாவின் Midnight's Children மற்றும் மீரா நாயரின் Reluctant Fundamentalist ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை தவிர்த்தார்.

பட மூலாதாரம், CHUCK ZLOTNICK/NBCUNIVERSAL

படக்குறிப்பு,

ஹாலிவுட்டின் பிரபல திரைப்படமான Jurassic World-ல் இர்ஃபான் கான்

அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, இரண்டு முறை லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். தேடப்படும் பயங்கரவாதிகளின் பெயரும், இவரின் பெயரும் ஒரே மாதிரியாக இருந்ததால், அவர் தடுத்து வைக்கப்பட்டதாக பின்னர் விளக்கமளிக்கப்பட்டது.

தன்னுடைய குடும்ப பெயரான கான் என்பதை பயன்படுத்த அவர் விரும்பியதில்லை. அதை தன் பெயரிலிருந்து நீக்க வேண்டும் என்று கூட அவர் முயற்சித்தார்.

திரைப்படங்களில் தனது பெயரை வெறும் இர்பான் என்று மட்டும் குறிப்பிடுமாறும் அவர் வலியுறுத்துள்ளார். ஷியா முஸ்லிம்களின் பண்டிகையான முஹர்ரம்மின் போது, விலங்குகளை பலியிடுவதை எதிர்த்து இவர் வெளியிட்ட கருத்து இஸ்லாமிய தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

"நாம் செய்யும் மதச்சடங்குகளுக்கு பிண்ணனியில் என்ன இருக்கிறது என்பதை அறியாமலே அதனை செய்து வருகிறோம்`` என்று அவர் ஒருமுறை பேசியிருக்கிறார்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் இர்ஃபான் கான் மற்றும் சக நடிகரான தேவ் படேல்

உடல்நல பாதிப்பு

இர்ஃபான்கான் 'நியுரோ எண்டோ க்ரைன்' என்ற அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு தான் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வருவதாக இர்பான் கான் அறிவித்தார்.

"எனது வாழ்க்கையின் கடந்த பதினைந்து நாட்கள் ஒரு திரில்லரை போல சென்றுகொண்டிருக்கிறது. எனக்கு நியூரோ எண்டோகிரேன் புற்றுநோய் எனும் அரிய வகை நோய் இருக்கிறது. இருப்பினும் என்னைச் சுற்றி இருக்கும் மக்களின் அன்புதான் எனக்கு வலிமையை தந்திருக்கிறது. அதனால் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

லண்டனில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்த இர்ஃபான் கான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு திரும்பினார்.

இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமாகவே மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை இறந்துவிட்டார்.

இர்பான் கானின் மரணம் கொரோனா வைரஸ் தொடர்பினால் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவரின் செய்தித் தொடர்பாளர், அவர் மரணத்திற்கு கொரோனா வைரஸ் காரணமாக இருக்கவில்லை. இருப்பினும் இது தொடர்பான அடுத்த கட்ட தகவல்களை மருத்துவர்கள் தெரிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்

அவரது மறைவுக்கு பாலிவுட் உலகம் மட்டுமின்றி ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் முதலான அரசியல் தலைவர்களும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: