கொடுமணல்: 100க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டெடுப்பு – முக்கிய ஆவணம் என தகவல்

கொடுமணல்

பட மூலாதாரம், TN Archeology Department

கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் கிடைத்த மனித எலும்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலை அருகே நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள கொடுமணல் பகுதியில், மே 27 ஆம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஆராய்ச்சி குழுவினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், TN Archeology Department

இதில் சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள், பளிங்கு கற்கள், நாணயங்கள், முதுமக்கள் தாழி, சுடுமண் அடுப்பு, இரும்பு பொருட்கள் மற்றும் கொள்ளுப்பட்டறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தை கணிக்க உதவும் மனித எலும்புகளை கொண்ட முதுமக்கள் தாழிகள் மிகமுக்கிய தொல்லியல் ஆவணமாக கருதப்படுகின்றன.

கொடுமணலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள் குறித்து தமிழக தொல்லியல்துறை திட்ட இயக்குனர் ரஞ்சித் பிபிசி யிடம் பேசினார்.

"கொடுமணலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் 100க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் மற்றும் பிற தகவல்கள் உரிய ஆராய்ச்சிக்கு பின்னர் தான் தெரிய வரும். ஆனால், தற்போது கிடைத்துள்ள பொருட்களை ஆராயும்போது, இந்த பகுதியில் மக்கள் நாகரிகம் இருந்ததும், தொழிற்கூடங்கள் மற்றும் வர்த்தகம் நடைபெற்றதும் உறுதியாகியுள்ளது."

பட மூலாதாரம், TN Archeology Department

"பல்வேறு வடிவம் மற்றும் அளவிலான இரும்பு, எஃகு ஆயுதங்கள் மற்றும் நெசவுத் தொழிலுக்கான பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே, பண்டைய காலத்தில் இப்பகுதி வர்த்தகத்திற்கான முக்கிய நகரமாக விளங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது," என அவர் தெரிவித்தார்.

மேலும், சமீபத்திய அகழாய்வில் கிடைத்த பல்வேறு வகைகளைச் சேர்ந்த மூன்று முதுமக்கள் தாழிகளில், ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற மனித மண்டை ஓடு, பல், கை மற்றும் கால் எலும்புகள் டி.என்.ஏ ஆய்விற்காக மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார் ரஞ்சித்.

பட மூலாதாரம், TN Archeology Department

"முதுமக்கள் தாழியில் கிடைத்த மனித எலும்புகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு அவை பாதுகாப்பாக கையாளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கொடுமணலில் மக்கள் வாழ்ந்த காலம் கணக்கிடப்படும்,"

"பழுப்புசாயம் பூசப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓட்டின் மேல்பகுதியில் தமிழ் பிராமி எழுத்துகள் கிடைத்துள்ளன. 'சம்பன்' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட சிறிய குவளை அகழாய்வுக் குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது,"

"இதேபோன்று சுமார் 100 தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கலங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் 'ஏகன்' என்றப் பெயர் சொல் பொறித்த மட்கலங்களின் ஓடுகள் இரண்டு கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துகளில் மிகுதியானவை பெயர்ச்சொல்லாக கிடைத்துள்ளன. இவை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது," என தொல்லியல் துறை அதிகாரி ரஞ்சித் தெரிவித்தார்.

முதுமக்கள் தாழி எனும் ஈமச்சின்னங்கள்

பட மூலாதாரம், TN Archeology Department

கொடுமணல் அகழாய்வில் கிடைத்த மனித எலும்புகளின் காலம் கி.மு 5 முதல் கி.மு 1ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கணித்துள்ளார் மூத்த தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜன்.

"முதுமக்கள் தாழி என்பது இறந்தவர்களுக்காக வைக்கப்படும் ஈமச்சின்னங்கள். தற்போதுவரை, வாழ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்தபோது கொடுமணலில் கி.மு. 5 முதல் கி.மு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதர்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இப்போது, உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் கிடைக்கப்பெற்றுள்ள முதுமக்கள் தாழிகளும் இந்த காலத்தை சேர்ந்தவையாகத்தான் இருக்கும். எனவே, அதே காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களின் எலும்புகளாத்தான் இவை இருக்கக்கூடும்" என்கிறார் ராஜன்.

கொடுமணலில் செப்டம்பர் மாத இறுதிவரை அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளது. இதில், மேலும் பல பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றன

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :