"the social dilemma": திரை விமர்சனம்
- முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பிபிசி தமிழ்

பட மூலாதாரம், NETFLIX
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியான The Great hack என்ற டாக்குமென்ட்ரி, சமூக வலைதளங்களால் சேகரிக்கப்படும் தனிநபர் தரவுகள் எப்படி பிற நிறுவனங்களால் வெவ்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதைக் காண்பித்தது. இப்போது வெளியாகியிருக்கும் "the Social dilemma" சமூக வலைதளங்கள் நம் சிந்தனையையும் நாம் செயல்படும் தன்மையையும் எப்படிக் கட்டுப்படுத்துகின்றன என்பதைக் காட்டியிருக்கிறது.
ஃபேஸ்புக், டிவிட்டர், கூகுள், பின்ட்ரெஸ்ட், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள், தங்களுடைய பயனர்களிடமிருந்து சேகரிக்கும் தகவல்களும் அவற்றைப் பயன்படுத்தும் விதமும் நீண்ட காலமாகவே சர்ச்சையில் இருந்து வருகின்ன. கடந்த சில ஆண்டுகளில் சமூக வலைதள நிறுவனங்கள் பல நாடுகளின் பொதுத் தேர்தல்களில் ஏற்படுத்தும் தாக்கமும் கவலையோடு கவனிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்தப் படம் அதையும் தாண்டி கவலைப்பட வேண்டிய விஷயங்களின் மீது பார்வையாளர்களின் கவனத்தைக் குவிக்கிறது.
இந்த சமூக வலைதளங்கள் எல்லாமே இலவசமாகத்தானே கிடைக்கின்றன என பயனாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் பயனாளர்கள்தான் அந்த நிறுவனங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறார்கள் என்கிறது இந்தப் படம்.
ஃபேஸ்புக், கூகுள், பின்ட்ரெஸ்ட், இன்ஸ்டகிராம் போன்ற நிறுவனங்களில் முன்பு பணியாற்றி, தார்மீக காரணங்களுக்காக வெளியில் வந்தவர்கள், உள்ளே என்ன நடக்கிறது, பயனாளர்கள் இதனால் எப்படியெல்லாம் பாதிக்கப்படக்கூடும் என்பதை விளக்கும்போது, படம் பார்ப்பவர்கள் நடுங்கிப் போவது நிச்சயம்.
துவக்கத்தில் பயனாளர்கள் எதை விரும்புகிறார்கள் என்று அறிந்துகொண்டு, அதனை அளிப்பதற்காக தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்த சமூக வலைதளங்கள், கொஞ்சம் கொஞ்சமாக பயனாளர்கள் எதை விரும்பவேண்டும் என்ற திசையை நோக்கி நகர ஆரம்பித்ததை இந்த நிறுவனங்களின் முன்னாள் பணியாளர்கள் விளக்குகிறார்கள்.
சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் பொய்ச் செய்தி, உண்மைச் செய்தியைவிட ஏழு மடங்கு அதிக வேகத்தில் பரவுகிறது; ஆகவே சமூக வலைதளங்கள் என்பவை அடிப்படையிலேயே பொய்ச் செய்திகளுக்கான பிரச்சார வாகனமாகின்றன என்கிறார் ஒரு ஊழியர். உங்கள் சிந்தனை எப்படியிருக்க வேண்டும்? நீங்கள் எந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்? நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதையெல்லாம் மெல்ல, மெல்ல இந்த சமூக வலைதளங்கள் கட்டுப்படுத்த ஆரம்பித்து விட்டன என்கிறார்கள் இந்த முன்னாள் ஊழியர்கள்.
பட மூலாதாரம், ThE SOCIAL DILEMMA
இதற்கு நடுவில் ஒரு மத்தியதர வர்க்க அமெரிக்க குடும்பத்தின் கதையும் படத்தில் சொல்லப்படுகிறது. அந்த குடும்பத்தில் உள்ள அனைவருமே தங்கள் செல்போன்களுக்கும் சமூகவலைதள பக்கங்களுக்கும் அடிமையானவர்கள். முடிவில், குடும்பத்தில் இருப்பவர்களுடன் இருக்கும் நெருக்கத்தை விட, போன்களே அவர்களுக்கு உற்ற துணையாகின்றன.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு, தாங்கள் அந்த ஊடகத்தைப் புரிந்துகொண்டதாக ஒரு எண்ணம் ஏற்படும்.
ஆனால், "அது உண்மையல்ல. ஒருபோதும் அதன் இயங்கு முறைகளையும் நோக்கங்களையும் அது இழுத்துச் செல்லும் திசையையும் உங்களால் கண்காணிக்கவே முடியாது என்பதுதான் உண்மை" என்கிறது படம்.
அரசோ, வேறு அமைப்புகளோ நம்மைக் கண்காணித்தால் இயல்பாகவே எதிர்ப்பு எழுகிறது. ஆனால், சமூக வலைதளங்களிடம் இந்தக் கண்காணிப்பை நாமே முன்வந்து ஒப்படைக்கிறோம் என்பதுதான் இதில் உள்ள அபாயம்.
எந்த நேரமும் செல்போனில் சமூக வலைதளங்களில் உலவிக் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாக்குமென்ட்ரி இது.
பிற செய்திகள்:
- பெரியார்: புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர்
- கொடுமணல்: 100க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டெடுப்பு – முக்கிய ஆவணம் என தகவல்
- நரேந்திர மோதியின் கனவுகளும், அவர் சந்திக்கவுள்ள சவால்களும்
- மதுரை அருகே மாணவர் மர்ம சாவு - போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்டாரா?
- 100 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தொற்று காலங்களில் பள்ளிகள் எவ்வாறு இயங்கின?
- 30 ஆண்டுகளாக மலையை குடைந்து 3 கிலோமீட்டர் நீள கால்வாயை உருவாக்கிய பிஹார் முதியவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :