புதுச்சேரி ஆன்லைன் கேம் விளையாடிய பள்ளி மாணவர் திடீர் உயிரிழப்பு - நடந்தது என்ன?

ஆன்லைன் ரம்மி

பட மூலாதாரம், Getty Images

(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

புதுச்சேரி வில்லியனூர் அருகே செல்போனில் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடிய பிளஸ் 2 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள வி.மணவெளி அன்னை தெரேசா நகரைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். 16 வயதுடைய இவரது மகன் அதே பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று(பிப்ரவரி 1) பள்ளி ஆன்லைன் வகுப்பு முடித்த பிறகு மாலை வீட்டின் அறையில் அமர்ந்துகொண்டு செல்போனில் ஃப்ரீ பையர்(Free Fire) எனும் ஆன்லைன் கேமைத் தொடர்ந்து 4 மணி நேரமாக விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதில், சுமார் நான்கு மணி நேரம் காதில் இயர்போன் (ear phone) வைத்துக்கொண்டு அதிக சத்தத்துடன் விளையாடிய நிலையில், அவர் திடீரென மயங்கிக் கீழே விழுந்தாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அவரது பெற்றோர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாணவரின் தந்தை பச்சையப்பன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவரின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் இயர்போன் மாட்டிக்கொண்டு சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அதிக சத்துடன் கேம் விளையாடியுள்ளார். இதனால் மூளைக்கு செல்கின்ற நரம்பு அதிக அளவில் சூடாகியுள்ளது. பின்னர் அந்த நரம்புகள் வெடித்து, ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வி.மணவெளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வில்லியனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமாரிடன் விளக்கம் கேட்டபோது, மாணவர் ஆன்லைன் கேம் தொடர்ந்து விளையாடிய காரணத்தினால் உயிரிழந்துள்ளார் என்று உறுதிப்படுத்தினார்.

மேலும் அவர் பேசியதாவது, "தற்சமயம் மாணவர்கள் இதைப் போன்று அதிகமாக ஆன்லைன் கேம் மோகத்தில் மூழ்கியுள்ளனர். காவல் துறை தரப்பிலிருந்தும் அதிகமாக மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த போதிலும் பெற்றோரின் கவனிப்பு மட்டுமே மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க உதவும்.

பொதுவாக சிறுவர்கள் இயர்போன் மாட்டிக்கொண்டு கேம் விளையாடும் போது அவர்களது உடலில் ஏற்படும் மாற்றம் குறித்து அவர்களுக்குத் தெரிவதில்லை. அதைப் பெற்றோர்‌ முறையாக கவனிக்க வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தும் செல்போன்களை பெற்றோர்‌ கவனிக்க வேண்டும்," என்றார் அவர்

மாணவர்கள் பயன்படுத்தும் செல்போனில் எந்த செயலிகளைப் பயன்படுத்துகிறனர்‌ என்பதைப் பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் குமார்.

"ப்ளூவேல், பப்ஜி போன்ற விளையாட்டுகளால் பாதிப்பு ஏற்படுகிறது என்று அரசு தடை செய்துள்ளது. ஆனால் இதுபோன்ற தடை செய்யப்படாத ஆன்லைன் விளையாட்டுகள் மூலமும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதையும் சிறுவர்கள் முற்றிலுமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," காவல் உதவி ஆய்வாளர் குமார் தெரிவித்துள்ளார்.

நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையே: கணவருக்கு ஜாமீன் கிடைத்ததா?

பட மூலாதாரம், Chitra Instagram

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம், தற்கொலையே என நிபுணர் குழு அறிக்கை அளித்திருப்பதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த சித்ரா கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நசரத்பேட்டையில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. சித்ராவைத் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை டிசம்பர் 14ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தன் மனுவில், தொடர்களில் நடிக்கக் கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவும் அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவும் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார்.

தனக்கும் சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும் எந்த குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

ஹேம்நாத்தின் இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சித்ரா தூக்கிலிட்டே தற்கொலை செய்து கொண்டதாக நிபுணர் குழு அறிக்கை கூறுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த ஹேம்நாத்தின் ஜாமீன் கோரும் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இது தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை வியாழக்கிழமைக்குள் எழுத்து மூலமாக தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: