வலிமை 'அப்டேட்' கண்ட இடங்களில் கேட்கும் ரசிகர்கள்; அஜித் கடுமையான அறிக்கை

பட மூலாதாரம், Ajit fans twitter
தான் நடித்துவரும் வலிமை திரைப்படம் பற்றிய தகவல்கள் பலரிடமும் தன் ரசிகர்கள் கேட்டுவருவது தன்னை வருத்தமடையச் செய்வதாக அஜீத்குமார் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அந்தத் திரைப்படம் குறித்து உரிய நேரத்தில் தகவல்கள் வெளிவருமென அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அஜித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்திருக்கும் வலிமை சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் பலர் செய்துவரும் செயல்கள் என்னை வருத்தமுறச் செய்கின்றன.
முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையைக் கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும் சமூகவலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்" என்று அஜித் தெரிவித்துள்ளார்.
போனி கபூரின் தயாரிப்பில் அஜீத் தற்போது நடித்துவரும் திரைப்படம் வலிமை. இந்தப் படத்தை எச். வினோத் இயக்குகிறார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. டிசம்பர் மாதம் படத்தின் பணிகள் துவங்கின. 2020 தீபாவளியை ஒட்டி இந்தப் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கோவிட் - 19 காரணமாக படப்பிடிப்பு நடுவில் நிறுத்தப்பட்டது. இந்தப் படம் குறித்த செய்திகள் பெரிதாக வெளியாகவில்லை.
இந்த நிலையில், அஜித் குமாரின் ரசிகர்கள் அவ்வப்போது ட்விட்டரில் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்பதை வழக்கமாக வைத்திருந்தனர். பிரபலங்களையும் tag செய்துவந்தனர். இது பல தருணங்களில் கேலிக்குள்ளானது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், விரைவில் வலிமை படத்தின் பார்ஸ்ட் லுக் காட்சி வெளியிடப்படுமென அறிவித்தார்.
"வலிமை மீது நீங்கள் காட்டும் நேசம் என்னை நெகிழச் செய்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். விரைவில் அது வெளியாகும்வரை காத்திருங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு சில மணி நேரங்கள் கழித்து அஜித்தின் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: